ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 SK

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 SK

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 SK

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 SK

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 SK

கண்ணாடி செய்யும் மாயம்
 SK

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 SK

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 SK

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 T.N.Balasubramanian

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 T.N.Balasubramanian

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’
 T.N.Balasubramanian

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 SK

முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
 SK

'ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை'
 SK

ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
 thiru907

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 SK

தனக்காக இப்போது வாய்ப்புகள் காத்திருக்கின்றன -பெருமைப்படும் டாப்ஸி
 SK

ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
 SK

ஒரு நாள் பாஸ் ரூ.100: மாத கட்டணமும் உயர்வு
 SK

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 SK

பெருமாள் - கவிதை
 SK

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 M.Jagadeesan

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகா பெரியவா சொன்ன கதைகள்!

View previous topic View next topic Go down

மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:11 pm


புராணங்களில் இருந்து நிறைய விஷயங்களை, நிறைய சந்தர்ப்பங்களில் மகா பெரியவா அருளியிருக்கிறார். எல்லோர்க்கும் புரியும்வண்ணம் எளிமையான மொழியில் பெரியவா சொன்ன அந்தக் கதைகள், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய வேதம்!

இதை ஒரு தொடராகத் தொகுத்து எழுதுகிற விஷயத்தைச் சொல்லி, ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி வாங்கச் சென்றேன். கேட்டதும் முகம் மலர்ந்தவர், ''ரொம்பச் சந்தோஷம்! சத்காரியம். நன்னாப் பண்ணு! பெரியவா சொன்னது எல்லார்க்கும் போய்ச் சேரட்டும்'' என்று சொல்லி, ஆசீர்வதித்தார்.

புராதனம் மிக்க காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தின் அனுமதியும் ஆசீர்வாதமும் கிடைத்த உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும், மகா பெரியவாளின் அனுக்கிரகத்துடனும், அவரது வார்த்தைகளிலேயே... இதோ, புராணப் புனலைத் துவக்குகிறேன்!

அப்போது நான் நாகைப்பட்டினத்தில் (1941) சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தேன். அங்கே, கோயிலில் பிள்ளையாருக்கு நிறைய சிதறுகாய் போடுவது வழக்கம். தேங்காயை வீசுவதற்கே இடம் கொடுக்காத அளவுக்கு அங்கே குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்து விடுவர். அந்தக் குழந்தைகள் வேகமாக ஓடி வருவதில், எங்கே அவை என் மேல் விழுந்துவிடப் போகின்றனவோ என்று என்னுடன் வந்தவர் களுக்குப் பயம். அதனால் அவர்கள் குழந்தைகளை, ''இப்படிக் கூட்டம் போடாதீர்கள்; விலகிப் போங்கள்'' என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்’ என்று கேட்டான்... ''பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதை (உரிமை) இருக்கிறது? சிதறுகாய் போட்டால், அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக்கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்!''

அந்தப் பையனின் பேச்சில் இருந்த உறுதியைப் பார்த்த போதுதான், 'வாஸ்தவம்தானே? குழந்தை ஸ்வாமியின் (பிள்ளையாரின்) பிரசாதத்தில் குழந்தைகளுக்குத்தானே முழு பாத்தியதையும்’ என்று எனக்கும் தெரிந்தது. அகங்காரம் எனும் ஓட்டை உடைத்தால், உள்ளே அம்ருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

இவ்வாறு, தான் தெரிந்துகொண்டதாகத் தெரிவித்த ஸ்ரீமஹா ஸ்வாமிகள், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார்.

ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, ''அப்பா! யானைகிட்டப் போகாதே! அது முட்டும்'' என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், ''இது மர பொம்மைதான்; முட்டாது!'' என்று சொல்லிச் சமாதானம் செய்து, அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான். குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அது மரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடம் இருந்து மறைத்தது. அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து, அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று, இந்த இருவர் நிலையையும் திரு மூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் மரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்மமயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய்விடுகின்றன.

அதுசரி, இந்தக் கதை எல்லாம் என்னத்துக்கு என்று கேட்கலாம். நமக்கு வேண்டியது லோகத்தில் வசதியான வாழ்க்கை. அதற்குத் தேவை பணம், காசுதான். பரத்தைப் பற்றியும் பாரைப் பற்றியும் நமக்கென்ன கவலை என்று கேட்கலாம்.

சரி, எல்லாரும் பணக்காரராகிவிடுவதாகவே வைத்துக்கொள்வோம். நிம்மதியாக, சாந்தமாக இருக்க அது உதவுமா? எல்லாருக்கும் நிறையப் பணம் வந்துவிட்டாலும், ஒவ்வொருவ னுக்கும் மற்றவனைவிட அதிகம் இருக்க வேண்டும் என்கிற ஆசையும், அதனால் போட்டியும், சச்சரவும் இருந்து கொண்டேதான் இருக்கும். எல்லாருக்கும் எல்லா சௌகரியங்களும் சமமாய்க் கிடைக்கும் என்றால்கூட, அது தனக்கே முதலில் கிடைக்கவேண்டும் என்று ஒவ்வொருத்தரும் போட்டி போடுவார்கள். இம்மாதிரி போட்டி இருக்கிற வரையில் மனநிறைவு யாருக்கும் உண்டாகாது. பொருளாதார 'வசதி’ மட்டும் உண்டாவதால் இந்தப் போட்டி குறையாது.

போட்டி போக வேண்டுமானால், போட்டி போட இன்னொரு வஸ்துவே இல்லை என்ற ஞானம் வரவேண்டும். அப்போதுதான் சாந்தியோடு நிறைந்து வாழலாம். உலகத் துன்பங்களை விலைக்கு வாங்கிக்கொள்ளாமலிருக்க வேண்டுமானால், 'இந்த உலகம் என்பது நாம் நினைக்கிறபடி இல்லை; இதுவே சிவமயமானது; அது வேறு- இது வேறு அல்ல. மரமே யானை; பாரே பரம் என்ற நினைப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த ஞானம் இல்லா விட்டால் எத்தனை பொருளாதார முன்னேற் றம் வந்தாலும் லோகம் இருட்டில் அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவே அர்த்தம் இருட்டை விரட்டும் ஞானப்பிரகாசத்தை அடைகிற பிரயாசையை நாம் ஒருபோதும் தளரவிடக் கூடாது. சூரியன் போனால்கூடப் பாதகமில்லை. இந்த ஞான ஒளி நம்மை விட்டு ஒருபோதும் போகவிடக்கூடாது.

அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள். எங்கே... மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?

'ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர் களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், 'இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

'ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:11 pmஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்...

ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, 'இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, 'இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?

வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். 'ராகவா... நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷ£த் லக்ஷ்மணனே பரிகசித்தான்.

'அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், 'ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷ£த் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு 'ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.'

ஆஹா... எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவோர்தான் நம்மில் பலர். கல்யாண விஷயமானாலும், கடவுள் விஷயமானாலும் அவர்கள் அப்படித்தான்! இன்று மாப்பிள்ளைக்குப் பெண் தேடும் படலம் மிக நீளமானது. ஒரு வருடம், இரண்டு வருடம் என வருடக்கணக்கில் பெண் தேடி, கடைசியில் எதிர்வீட்டுப் பெண்ணைப் பேசி, மணம் முடிப்பார்கள். வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு, நெய் தேடி அலைந்த கதைதான்!

இந்த விஷயத்தை மகா பெரியவா கதையோடு சொல்லும் விதம் அழகானது; அற்புதமானது! இதோ, அவர் வாய்மொழியாகவே கேட்போமே!

'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளின் பெற்றோர், பந்துக்களுக்குள்ளேயே ஒரு முறைப் பையனைப் பார்த்து, அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ, ''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.

அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள்.

ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். 'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணினால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.

ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.

அவளைத் தவிர, அந்தப் பிள்ளையாரிடம் வேறு யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை; வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக்கொண்டு 'ஒன்றுக்கு’ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், 'அடடா, இந்தப் பிள்ளையாரையும்விட உயர்ந்தது இந்த நாய்தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்திக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டாள்.

வழியில், அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது. ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக்கொண்டு அதட்டினான்; முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அவனையே அதட்டி அடிக்கிற இவன்தான் எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:11 pm

இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!

'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி, லௌகிகமாக ஒரு கதை சொல்வர்.

''எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.

ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.

'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.

நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'

என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறார், மகா பெரியவா! நாம்தான் உண்மையை அறிந்து தெளிய வேண்டும்.

கதை சொல்வது எளிதான விஷயம் அல்ல. நமக்குத் தாத்தா- பாட்டிகள் கதை சொல்லி இருப்பார்கள். ஆனால், இன்றுள்ள பெரும்பாலான குழந்தைகள் தாத்தா- பாட்டிகளிடம் கதை கேட்காமலேயே வளர்கின்றனர். அவர்கள் வளர்கிற- வளர்க்கப்படுகிற சூழ்நிலை அப்படி.

சில கதைசொல்லிகள் இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னாலும், 'நச்'சென்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் சொல்லும் விதத்திலேயே, அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து நம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.

நம் காஞ்சி மஹா ஸ்வாமிகளும் கதை சொல்லும் விஷயத்தில் மகா கெட்டிக்காரர். புராணங்களில் இருந்து அவர் கதையை எடுத்துச் சொல்லும் அழகே அழகு! இதோ, இந்தக் கதையைக் கேளுங்கள்...

'ப்ருஹதாரண்யகம்’ - இந்தப் பேருக்கு அர்த்தம் 'பெரிய காடு’ என்பதாகும். அப்படிக் காடாக விரிந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. உபநிஷத்துக்களில் தத்வங்கள் (ஃபிலாஸஃபி) மட்டும் அப்படியே கொட்டிக்கிடப்பதில்லை; நடுநடுவே ரசமான கதைகள் வரும். இந்தக் கதைகளில் மூலமும் ஒரு பெரிய தத்வம் பிரகாசிக்கும். அப்படி 'ப்ருஹதாரண்யக’த்தில் கொடையைப் பற்றி ஒரு கதை வருகிறது.

தேவர்கள், அஸுரர்கள், மநுஷ்யர்கள் எல்லாருமே பிரம்மாவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள்தாம். பரமாத்மாவுக்கு பல தினுசான லீலை வேண்டி இருக்கிறது. நல்லது, கெட்டதுகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக அவர் பிரம்மாவைக் கொண்டு தேவஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்யஜாதி முதலானவைகளை ஸ்ருஷ்டிக்கிறார். இந்த மூன்று ஜாதிக்கும் நல்லதைச் சொல்ல பிரம்மா கடமைப்பட்டிருக்கிறார்.

ஒருமுறை தேவர்கள் எல்லோரும் பிரம்மாவிடம் போய், ''எங்களுக்குச் சுருக்கமாக ஒரு உபதேசம் பண்ணுங்கள்'' என்றனர்.

அதற்கு பிரம்மா, ''த'' என்ற ஒரேயரு அக்ஷரத்தை மட்டும் சொல்லி, ''இதுதான் உபதேசம். இதற்கு அர்த்தம் புரியுதா?'' என்று கேட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:12 pmநம்மிடத்திலே இருக்கிற தப்பு நமக்கே நன்றாகத் தெரியுமானால், யாராவது ரொம்ப ஸ¨க்ஷ்மமாக, ஸ¨சனையாக எடுத்துக் காட்டினால்கூட உடனே புரிந்துகொண்டு விடுவோம். இந்த ரீதியில் தேவர்களுக்கு, பிரம்மா 'த’ என்று சொன்ன உடனேயே, அதற்கு இன்னதுதான் அர்த்தமாக இருக்கும் என்று புரிந்துவிட்டது. தேவர்களிடம் இருக்கிற பெரிய கோளாறு 'இந்த்ரிய நிக்ரஹம்’ (புலனடக்கம்) இல்லாததுதான். தேவலோகம் ஆனந்த லோகமல்லவா? அங்கே ஸுகவாஸிகளாக மனம் போனபடி இருப்பது தேவர்களின் வழக்கம். ஆனபடியால், ''இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றுதான் பிரம்மா ஹின்ட் பண்ணுகிறார் (குறிப்பால் உணர்த்துகிறார்) என்று புரிந்துகொண்டார்கள்.

''புரிந்துவிட்டது. 'தாம்யத’ என்று தாங்கள் உபதேசித்துவிட்டீர்கள்'' என்று பிரம்மாவிடம் சொன்னார்கள் தேவர்கள்.

தமம், சமம் என்று இரண்டு உண்டு. இரண்டும் அடக்கத்தைக் குறிப்பது. புலனடக்கம், மனஸடக்கம் என்ற இரண்டைக் குறிப்பிட தமம், சமம் என்று ஒரே 'அடக்க’த்திற்குள்ள இரண்டு வார்த்தைகளைச் சொல்வது. 'தாம்யத’ என்றால் 'தமத்தைச் செய்யுங்கள்’. அதாவது, இந்த்ரியங்களையும் மனஸையும் கட்டுப்பாடு (control) பண்ணிக்கொள்ளுங்கள்'' என்று அர்த்தம்.

ப்ரும்மா 'த’ என்று சொன்னது 'தாம்யத’வுக்கு (abbreviation) (சுருக்கம்) என்று தேவர்கள் அர்த்தம் பண்ணிக்கொண்டார்கள்.

ஒரு முழு வார்த்தையைச் சொல்வதைவிட, அதில் முதல் எழுத்தை மட்டும் சொன்னால் அதற்கு ஜாஸ்தி சக்தி இருக்கிறது. சர்ச்சில்கூட 'வி ஃபார் விக்டரி’ என்று சொல்லி, எங்கே பார்த் தாலும் அந்த 'வி’யை மந்திரம் மாதிரிப் பரப்பினார்.

''நீங்கள் அர்த்தம் பண்ணிக் கொண்டது சரிதான்'' என்று சொல்லி தேவர்களை அனுப்பினார் பிரம்மா.

மநுஷ்யர்களுக்கும் இதே மாதிரி உபதேசம் வாங்கிக்கொள்கிற ஆசை வந்தது. அவர்களும் பூர்வகாலத்தில் பிரம்மாவை நெருங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவரிடம் போய், ''உபதேசம் பண்ணுங்கள்'' என்று வேண்டிக்கொண்டார்கள்.

மறுபடியும் பிரம்மா ''த'' என்று அதே சப்தத்தை மட்டும் சொன்னார்.

மநுஷ்யர்களுக்கும் தங்கள் குற்றம் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டிருந்ததால், தங்களுக்கு அத்யாவச்யமான உபதேசம் இன்னது என்று பளிச்சென்று புரிந்துகொண்டார்கள்.

''அர்த்தம் தெரிந்ததா?'' என்று பிரம்மா கேட்டவுடன், ''தெரிந்து கொண்டோம். 'தத்த’ என்று உபதேசம் பண்ணியிருக்கிறீர்கள்'' என்றனர்.

''தத்த'' என்றால் ''கொடு'', ''தானம் பண்ணு'' என்று அர்த்தம். 'தத்தம் பண்ணுவது’, 'தத்துக் கொடுப்பது’ முதலான வர்த்தைகள் வழக்கத்தில்கூட இருக்கின்றனவே!

''ஆமாம், நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்'' என்று பிரம்மா மநுஷ்ய ஜாதியிடம் சொல்லி அனுப்பிவைத்தார்.

தேவர்களும் மநுஷ்யர்களும் உபதேசம் வாங்கிக்கொண்டால் அஸுரர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா? அவர்களும் பிரம்மாவிடம் வந்து உபதேசம் கேட்டார்கள். அவரும் பழையபடி அந்த 'க்ரிப்டிக்’ (சுருக்கமான) ''த'' உபதேசத்தைப் பண்ணிவிட்டுப் ''புரிந்ததா?'' என்று கேட்டார்.

அஸுரர்களும் உடனே, ''புரிந்துவிட்டது. 'தயத்வம்’ என்று உபதேசம் பண்ணிவிட்டீர்கள்'' என்றனர். பிரம்மாவும், ''ஆமாம்'' என்றார்.

'தயத்வம்’ என்றால் 'தயையோடு இருங்கள்’ என்று அர்த்தம்.

இரக்கம் இல்லாதவர்களைத் தானே அரக்கர் என்று சொல்லியி ருக்கிறது? கொஞ்சம்கூட தயா தாக்ஷிண்யம் இல்லாத குரூர ஸ்வபாவம்தான் அஸுரர்களின் இயற்கை. அதனால் 'த’வுக்கு இப்படி அர்த்தம் பண்ணிக்கொண்டார்கள்.

இடி இடிக்கிறபோது 'ததத’ என்கிற மாதிரி சப்தம் கேட்கும். ''தாம்யத - தத்த - தயத்வம் என்பது தான் அந்த மூன்று 'த’.

இது, ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிற கதை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:12 pmநம் சங்கர பகவத் பாதாள் இதற்கு பாஷ்யம் எழுதுகிறபோது, ''இங்கே தேவர், அஸுரர் என்று சொன்ன தெல்லாமும் மநுஷ்யர்களுக்கு வேறல்லர். மனிதர்களிலேயே எல்லா நல்ல குணங்களும் இருந்து, புலனடக்கம் இல்லாதவர்கள் தேவர்கள்; கொடுக்கிற ஸ்வபாவமே இல்லாமல் லோப குணத்தோடு இருப்பவர்கள் அசல் மநுஷ்யர்கள்; ஹிம்ஸை பண்ணிக்கொண்டு க்ரூரமாக இருக்கிற மனிதர்களே அஸுரர்கள். ஆனதால், மூன்று உபதேசங்களும் நமக்கே ஏற்பட்டவை என்றுதான் நாம் அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.

மகா பெரியவா சொன்ன கதையும் தத்துவ விளக்கமும் உங்கள் மனத்திலும் ஆழமாய் பதிந்ததுதானே?

பதறிய காரியம் சிதறும்! அனுபவம் வாய்ந்த இந்தப் பொன்மொழியின் உண்மையை நாம் எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் நேரிடையாக உணர்ந்திருப்போம். அதனால்தான், எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவெடுக்கப் பெரியவர்கள் வலியுறுத்துவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர், மறுநாள் அதிகாலையில் வெளியூர் புறப்பட்டுச் செல்ல வேண்டியது இருந்தது. வழக்கமாக அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடும் அவர், அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை முந்தைய நாளே செய்யாமல், 'நாளைக்கு மட்டும் இன்னும் சற்று முன்னதாக 4 மணிக்கே எழுந்திருந்தால், எல்லா ஏற்பாட்டையும் செய்துவிடலாமே!’ என்று நினைத்துப் படுத்துவிட்டார்.

அதிகாலை 4 மணிக்கு எழுவதற்காக தனது மொபைல் போனில் அலாரமும் வைத்துக் கொண்டார்.

வழக்கமாக 5 மணிக்கெல்லாம் விழித்துவிடும் அவர், அன்றைக்கு ஏனோ 6 மணிக்குத்தான் விழித்தார். மொபைலில் இன்னும் அலாரம் அடிக்கவில்லையே என்று எண்ணியபடியே, எதிரே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்க்க நேரம் 6 மணி என்பதைக் காண்பித்தது. பதறிப்போனார் நண்பர். மொபைலை அவசரமாக ஆய்வு செய்ததில்

4 A.M. என வைப்பதற்குப் பதிலாக 4 P.M. என செட் செய்திருந்தார். அதனால்தான், அலாரம் மாலை நேரத்து 4 மணிக்காகக் காத்திருந்தது.

அப்புறம் என்ன... அறக்கப்பறக்கப் புறப்பட்டு பஸ் பிடித்து வெளியூர் போனார் அவர். யாரைப் பார்க்க வேண்டுமோ அவரையும் சந்தித்தார்.

'தாமதமாக வந்தாலும் பரவாயில்லை; நல்ல நேரத்தில்தான் வந்து இருக்கிறீர்கள். இன்னும் 10 நிமிஷம் தாண்டி வந்திருந்தால் ராகு காலம் வந்திருக்கும்...' என்றார், நெற்றி நிறையத் திருநீறும், அதன் நடுவே ஒரு ரூபாய் நாணய அளவுக்குக் குங்குமமும் வைத்திருந்த அந்த ஜோதிடர்.

ஆம்... தனது மகளுக்கு வந்திருந்த வரனின் ஜாதகத்தை இவரிடம் கொடுத்துப் பொருத்தம் பார்க்கவே வந்திருந்தார் அந்த நண்பர்.

'சரி, ஜாதகத்தைக் கொடுங்கோ! பொருத்தம் எப்படின்னு பார்த்துச் சொல்லிடுறேன்...' என்று ஜோதிடர் சொல்லவும், தான் கொண்டு வந்த பையில் ஜாதகத்தைத் தேடினார் நண்பர். ஆனால், மகளின் ஜாதகம் இருந்ததே தவிர, மாப்பிள்ளையின் ஜாதகத்தைக் காணவில்லை.

புறப்பட்டு வந்த வேகத்தில், மாப்பிள்ளையின் ஜாதகத்தை எடுக்காமல் வந்தது அப்போதுதான் நண்பரின் ஞாபகத்துக்கு வந்தது. அப்புறம் என்ன... 'ஆரம்பமே தடையாகவும், அலைக்கழிப்பாகவும் இருக்கே...’ என்று நினைத்த நண்பர், தன் மகளுக்கு அடுத்த வரனைத் தேடவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். தனது விதியை நினைத்து நொந்து கொண்டார்.

நம் காஞ்சி மகா ஸ்வாமிகளும் இப்படிப்பட்ட விதி பற்றி ஓர் உண்மை நிகழ்வைச் சொல்கிறார்.

'எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராசார்யார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக் காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்றமுடியாது என்பதற்குத் திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது.

அவருடைய பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசார்யார் அறிந்திருந்தார். ஆனாலும், தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து, அதிலே புத்திரிக்கு விவாஹம் செய்துவிட்டால், அவளை தீர்க்கஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹூர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போதுபோல் கடிகாரம் கிடையாது. ஆனாலும், வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் விட்ட ஜலம் ஒரு துவாரம் வழியாகக் கீழ் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ்மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக் கோடுகள் போட்டிருக்கும். துளித் துளியாய் விழும் ஜலம், இன்ன கோடு வரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள்.

அதிலுள்ள டோஸ்மார்க் ஒரு நாளில் அறுபதில் ஒரு பங்காகும். 'நாழிகை’ என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் 'நாடிகா’ என்பதோடு 'கடிகா’ என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, water-glass என்று இங்கிலீஷிலும் சொல்வார்கள். ஜலம், சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குப் தப்பு வரும் என்று, பின்னர் மணல் கடிகாரம் பண்ணினார்கள்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட் டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை, மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத் திடம் வந்து, குனிந்து பார்த்து, ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியில் இருந்து ஒரு சின்ன முத்து, கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது.

இதனால், விழுகிற துளி சின்னதாகிவிடும் அல்லவா? இப்படி, இருக்கவேண்டியதைவிடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்தச் சுப நேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்துவிட்டது. அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்துவிட்டாள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:12 pmமுத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காததால், இத்தனைப் பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்.

கணித சாஸ்திர விஷயமாகப் பிற்காலத்தில் பாஸ்கராசார்யார் ஒரு கிரந்தம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். சின்ன வயசிலேயே விதவையாகித் தம்மிடம் வந்துவிட்ட லீலா வதியை கணிதத்தில் பண்டிதை ஆக்கி, அவள் பெயரிலேயே தம் புஸ்தகத்தை எழுதினார். சாதாரணமாக ஒரு பரம்பரையில் பாட்டி, முப்பாட்டிகளின் பேரைக் குழந்தைக்கு வைத்து, அவர்களுடைய நினைவை நீடிக்கச் செய்கிறார் கள் அல்லவா? பாஸ்கராசார்யார் என்ன பண்ணினார் என்றால், குழந்தையே பெறாத தம்முடைய குழந்தையை, கணித மாணாக்க பரம்பரை முழுவதற்கும் ஓர் ஆதிப் பாட்டியாகச் சிரஞ்சீவித்துவம் பெறும்படியாகத் தம்முடைய புஸ்தகத்துக்கே 'லீலாவதி கணிதம்’ என்று அவள் பேரை வைத்துவிட்டார்.

அதில் வியக்த கணிதம், பீஜ கணிதம் முதலிய பலவகைக் கணிதங்கள் இருக்கின்றன. 'லீலாவதி கணக்கு’கள் கதை மாதிரியும், விடுகதை மாதிரி யும், கவிதை மாதிரியும் சுவாரஸ்யமாக இருக்கும்.

கிரஹ ஸ்திதிகள், கிரஹங்களின் கதிகள் முதலியவற்றை நிர்ணயிப்பதற்கு உபயோகமாக 'ஸித்தாந்த சிரோமணி’ என்ற ஒரு கிரந்தத்தையும் பாஸ்கராசார்யார் எழுதியிருக்கிறார்.'

கண்கூடாக நேரில் பார்க்கும் சில விஷயங்களையே உண்மை என்று எளிதில் நம்பிவிடாமல், ஆயிரம் கேள்விகள் கேட்பதுதான் மனித மனத்தின் இயல்பு. அப்படியிருக்க, புராணங்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் ஏற்குமா என்ன? அதெப்படி ஒருத்தனுக்கு பத்து தலைகள் இருக்க முடியும்? ஆயிரம் தலை பாம்பு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை! எல்லாம்

கட்டுக்கதை... இப்படி, விமர்சனங்கள் எழுப்புமே தவிர, புராணங்களும் ஞானநூல்களும் சூட்சுமமாக உணர்த்தும் உண்மையை உணர்ந்துகொள்ளாது.

மகாபெரியவாளுக்கும் இப்படி ஓர் அனுபவம் நேர்ந்தது! அதுபற்றி அவரே கூறுகிறார்...

புராணத்தில் காச்யபருக்கு கத்ரு என்ற பத்தினி இருந்தாள்; அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன என்று பார்த்தால், உடனே இதெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால், போன வருஷம் (1958) பேப்பரி லேயே (செய்தித்தாள்) வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். 'ஒரு மார்வாடிப் பெண்ணுக்குப் பாம்பு பிறந்தது’ என்று அந்த 'ந்யூஸ்’ இருந்தது. அதைப் பார்த்தபோதுதான் எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது.

நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் சரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் சரி... தாழம்பூ வைத்துக் கொள்ளமாட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம், அவர்களிடம் ஏனென்று கேட்டபோது, அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.

''பத்துப் பதினைந்து தலைமுறை களுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குப் பாம்பு குழந்தையாகப் பிறந்துவிட்டது. இதை வெளியில் சொல்லிக்கொள்ள வெட்கம். ஆனாலும், வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாரையும் ஹிம்சை பண்ணாமல், தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக்கொண்டிருந்ததாம்.

இந்த விசித்திரக் குழந்தையை எங்கேயும் எடுத்துக்கொண்டு போக முடியவில்லை, விட்டுவிட்டும் போக முடியவில்லை என்பதால், அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். 'கல்லானாலும் கணவன்’ என்கிற மாதிரி 'பாம்பானாலும் குழந்தை’தானே? அந்த வாத்ஸல்யம்!

ஆனால், ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது, அவளால் போகாமல் இருக்கமுடியவில்லை. அப்போது, வீட்டில் வயசான கிழவி ஒருத்தி இருந்தாள் (அவள் அந்தப் பாம்புக் குழந்தையின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது.

இப்போதுதான் தாயார்- தகப்பனாரோடேயே சேர்ந்து இல்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று நவீன நாகரிகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family); அதிலே யாராவது ஒரு அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சின்ன தாத்தா என்று வைத்துக்கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்திலும் ஒரு கிழவி இருந்தாள்). அவளுக்குக் கண் தெரியாது. அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு, அதன் தாயார் வெளியூருக்குப் போனாள்.

பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? குளிப்பாட்ட வேண்டுமா? தலை வார வேண்டுமா? சட்டை போட வேண்டுமா? இல்லாவிட்டால், தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமா? இதெல்லாம் இல்லை. வேளாவேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், 'காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து, அதன் குழியிலே விட்டுவைத்துவிடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்துவிடும்’ என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது,

கிழவியும் அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம், ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து போய்விட்டாளோ என்னவோ? கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்து போய், அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டது.

கிழவி அதற்கப்புறம்தான், கொதிக்கக் கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை. வழக்கம் போலவே கொதிக்கக் கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டுவிட்டாள். பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டிப் பாம்பு அப்படியே துடிதுடித்துச் செத்துப்போய்விட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:12 pmஅங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக் காரிக்கு ஸொப்பனமாச்சு! ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, 'நான் செத்துப் போய்விட்டேன். நீ போய் என்னை எடுத்துத் தாழங் காட்டிலே தஹனம் பண்ணிவிடு! இனிமேல், உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப்படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிற்று (தாழம் புதர்தான் பாம்புக்கு ரொம்பப் ப்ரீதி!). அதிலிருந்து எங்கள் குடும்பத்துல யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை'' என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று. அப்புறம் போன வருஷம், ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த நியூஸைப் பார்த்த பின், இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.

உங்களுக்குப் புராண நம்பிக்கை போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புதான். எனக்கே ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல், நியூஸ் பேப்பரில் வந்த நியூசைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை கன்ஃபர்ம் செய்து கொள்ள வேண்டியிருந்தது?

இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி! பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும், பொய் என்று தோன்றவில்லை. ஆனால், புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம்!

எந்த ஒன்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பெரும்பாலும், அனைவருமே ஒரு பக்கத்தையே பார்ப்போம். மறுபக்கத்தைப் பார்க்கமாட்டோம். நமக்கு நன்றாகவே தெரிந்த துரோணர், குசேலர் என்னும் இருவரின் கதைகளையும் இங்கே தன் பாணியில் சொல்லி, அவற்றின் மறுபக்கத்தை அலசி ஆராய்ந்து அறிவுறுத்துகிறார் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள்.

துரோணரும், இளவரசனான துருபதனும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது துருபதன் தன் நண்பனான துரோணரிடம், ''நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்'' எனச் சொல்லியிருந்தான். எங்கே... சொன்னபடி நடந்துகொண்டானா துருபதன்? அதுபற்றி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகளே இங்கே மனம் திறக்கிறார்.

'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான்.

இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னி யிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, 'நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?’ என்று த்ருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந் தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப் படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷ£த்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடமே வன்மம் கொண்டான்.

கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, ''அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:'' என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, ''குஞ்ஜர'' (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனஸ் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு விட்டு உட்கார்ந்து விட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரைக் கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதைப் பார்த்துப் பாண்டவ ஸைன்யத்தினர் உள்பட எல்லாரும் 'தகாத கார்யம் நடக்கிறதே’ என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:13 pmஇன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனஸுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் ஸஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்தி பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, 'இது நம் அகந்தானா?’ என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸயத்மாகவும் மனஸை உறுத்துகிறாற் போல் போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது...

குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், நஷ்டம் ஆகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடனும் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

த்ரோணரும் மஹா பெரியவர்தான் என்றாலும், ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப் பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது.

த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் ஏதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமான மும் க்ஷ£த்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனஸைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமல்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சி¬க்ஷ கற்றுக்கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படிச் செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக் கிறது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கே எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வார்த்தையம்புகளை பீமஸேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடத்தாதற்காக ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.

ப்ராம்மணன் ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன!'

சிலர் இருக்கிறார்கள்; தாங்கள் நினைப்பதுதான் சரியாக இருக்கும் என்று அவர்களாகவே கணக்குப் போட்டு, அதிலிருந்து துளியும் நழுவாது செயல்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்; மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:13 pmஎனக்குத் தெரிந்த ஒருத்தர் அடிக்கடி வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே இருப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே இடம், பொருள், ஏவல் பார்க்காமல் 'புளிச்'சென்று பக்கத்திலேயே துப்பிவிடுவார். குறிப்பாக, ரயில் நிலைய கட்டடத் தூண்கள் பக்கம் நடந்துபோனால், அவருக்குள் அந்த நேரத்தில் என்னமோ பண்ணும்போல; ஏற்கெனவே போதை வஸ்துக்களை வாயிலே மணிக்கணக்கில் போட்டுக் குதப்பி புளிச்சென்று துப்பி, அங்கே சிவப்பு பெயிண்ட் போன்று கறையைப் பலர் படியவிட்ட இடத்தில்... இவரும் வாயிலே போட்டு மென்ற வெற்றிலையைப் 'புளிச்'சென்று துப்புவார். அவரது இப்படியான செயலை எத்தனையோ முறை நான் சுட்டிக்காட்டித் தடுக்க முயன்று, அதிலே தோற்றுப்போனதுதான் மிச்சம்!

ஒருநாள், அவருக்கு வெற்றிலை மடித்துத் தரும் துரதிருஷ்டம் எனக்கு வாய்த்துவிட்டது. அப்போதுதான் அந்த 'ஐடியா’ என் மூளைக்குள் பளிச்சிட, வெற்றிலையை மடித்து, அதற்குள் பாக்கு வைப்பதற்குப் பதிலாக குட்டியான இரு கருங்கற்களை வைத்துக் கொடுத்துவிட்டேன். அதை வாயிலே போட்டு நறுக்கென்று நண்பர் கடிக்க... படக்கென்று ஒரு சத்தம். பாக்குக்குப் பதிலாக நான் வைத்த கல், ஏற்கெனவே ஆட்டம் கண்டுகொண்டிருந்த அவரது சொத்தைப் பல்லைப் பதம் பார்த்துவிட, அக்கணமே அது கழன்று வந்துவிட்டது.

இந்தச் சம்பவத்தால் நண்பர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க... ''நல்ல விஷயம்தானே நடந்திருக்கு! டாக்டர்கிட்ட போய் பல்லை பிடுங்கணும்னு பல நாளா என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. இப்போ தானாவே பல் கழன்று வந்திடுச்சு. டாக்டர் செலவு மிச்சம்!'' என்று நான் சொல்லிச் சமாளிக்க, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்பும் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார் நண்பர்.

இப்படித்தான், கடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா பெரியவா.

'ஷாஹஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, 'குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியா- குழந்தையாத்தான் இருந்தார்.

ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.

அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது 'குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே... மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே... அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை 'சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு 'அந்யாப தேசம்’ என்று பெயர். இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.

அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு 'மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!

'மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. 'பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு 'மஹிஷன்’ என்று பேரில்லை. 'மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து 'மஹீசன்’ 'மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் 'சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது 'ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.

அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்... அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 'ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் 'உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் 'பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே 'தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:13 pmஅதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

''மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது... சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான- உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக் யத்தின் பலன்தான்!'' என்று ஒரு ஸ்லோகம்.

இன்னொன்றில், 'எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! 'எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர் களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!'' என்கிறார்.

இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு - அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே... அதனால், மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.

ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.

அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் 'ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் 'மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.

'ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், 'ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிற வனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள உறவு மிக மிக அக்கறையானது, பரிசுத்தமானது என்பதையும் தாண்டி, புனிதமானதும்கூட! அந்தக் காலத்தில் குருகுலவாசம் இருந்தது. அதாவது, குருவின் ஆஸ்ரமத்துக்கோ, இல்லத்துக்கோ போய்தான் அங்கே குருவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, மாணாக்கர்கள் அனைவரும் கல்வி கற்றார்கள். ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, இறை அவதாரங்களும்கூட குருகுலவாசம் செய்துதான் குருவிடம்தான் கல்வி கற்றார்கள்.

அந்த வகையில், ஸ்ரீகிருஷ்ணரும் ஸாந்தீபனி என்கிற குருவிடம் கல்வி கற்றார். தான் இறை அவதாரம் என்பதைக் காரணம் காட்டி, அவர் மற்ற பிள்ளைகளிடம் இருந்து வேறுபட்டு நடந்துகொள்ளவில்லை. குருகுலத்தில் எல்லோரும் சமம் என்கிற நியதியே பின்பற்றப்பட்டு வந்தது. ஸ்ரீகிருஷ்ணரும் அதைத்தான் பின்பற்றினார்.

அப்படிப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரின் குருகுலவாச அனுபவம் பற்றியும், குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றியும் தனது திவ்ய வாக்கால் இங்கே விளக்குகிறார், மகா பெரியவர். இதைப் படிக்கிறபோது, இந்நாளைய ஆசிரியர்களைப் பற்றி நாளேடுகளில் நாம் படிக்கிற செய்திகள் கவலையையும் பெருமூச்சையும்தான் வெளிப்படுத்துவதாக உள்ளன.

'நம்முடைய சாஸ்த்ர, புராணங்களிலிருந்து அன்புடைமையில், அருளுடைமையில் அந்நாள் ஆசார்யர்கள் ஆதர்ச புருஷர்களாக இருந்திருப்பது தெரிகிறது. குரு சிஷ்யர்களுக்கு இடையே பரஸ்பர ப்ரியம் போகவே கூடாது என்றுதான் பாடம் ஆரம்பிக்கும்போதே மந்த்ர பூர்வமாக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். 'குரு- சிஷ்யர்களான நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்...’ என்பது பாட ஆரம்பத்திலும், முடிவிலும் வருகிற உபநிஷத் பிரார்த்தனை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:13 pm'அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பதற்கு அப்படியே ரூபகமாக அந்த ஆசார்யர்கள் இருந்திருக் கிறார்கள். கண்டிப்புச் செய்யவேண்டிய இடத்தில் எப்படி நிர்தாக்ஷண்யமாகக் கண்டித்தார்களோ, அப்படியே அன்பைக் கொட்ட வேண்டிய ஸமயத்தில் கொட்டினார்கள். பாகவதத்தைப் பார்த்தால் போதும்; இரண்டும் தெரியும். பகவானே குசேலரிடம் தாங்களிருவரும் சேர்ந்து குருகுலவாசம் செய்த நாட்களைப் பற்றி ஞாபகப்படுத்துகிறார்.

கம்ஸ வதமான பின், பகவானுக்கும் பலராமருக்கும் உபநயனமாகி, அவர்கள் ஸாந்தீபனி என்கிற பிராமணரிடம் குருகுல வாஸம் செய்கிறார்கள். ஸர்வ வித்யைகளும் அவனிடமிருந்துதான் என்றாலும், லோகத்துக்கு குரு பக்தியை உதாரணம் காட்டவே பகவானும் இப்படி ஓர் ஆசார்யனிடம் போய்ப் படித்தான் என்று பாகவதம் சொல்கிறது. ஆனாலும், பகவானுக்கு அவதார கார்யங்கள் நிறையக் காத்துக் கொண்டிருந்ததால், பன்னிரண்டு வருஷம் வித்யாப்யாஸம் செய்வது என்று வைத்துக்கொள்ளாமல், தன் திவ்ய சக்தியையும் கொஞ்சம் கைக்கொண்டு, ஒரு நாளுக்கு ஒரு சாஸ்த்ரம் வீதம் அறுபத்து நாலே நாளில் அத்தனை சாஸ்த்ரமும் கற்றுக்கொண்டு விடுகிறார் (பலராமரும்தான். அவரும் அவதாரம்தானே?).

இதிலிருந்தே கிருஷ்ணருடைய தெய்வீக ப்ரபாவத்தை குரு ஸாந்தீபனி தெரிந்துகொண்டு விடுகிறார். அதனால், பிற்பாடு சி¬க்ஷ பூர்த்தியாகி, ''என்ன தக்ஷணை தரணும்?'' என்று பகவான் கேட்டபோது, ரொம்ப நாள் முந்தி ஸமுத்ரம் அடித்துக்கொண்டு போய்விட்ட தன்னுடைய பிள்ளையை யமாலயத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்து தரவேண்டும்; அதுதான் தமக்கு வேண்டிய தக்ஷணை என்கிறார். பகவானும் அப்படியே பண்ணுகிறார். அது இப்போது நமக்கு விஷயமில்லை.

பின்னே எது விஷயம் என்றால், இப்படி தெய்வ சக்தி பொருந்தியவராக கிருஷ்ணரை அவருடைய ஆசார்யர் தெரிந்து கொண்டிருந்த போதிலும், 'சிஷ்யப்பிள்ளை என்று வந்த ஒருத்தனை ஆசார்யர் நன்றாக வேலை வாங்கி, பணியினாலும் பணிவினாலும் கட்டுப்படுத்தி சுத்தி செய்வார்’ என்று லோகத்துக்குக் காட்டவே, அவர் இந்த சிஷ்ய வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டார். எனவே, வேலை வாங்குவதை இவர் விஷயத்திலும் விட்டுவிடக் கூடாது என்று இருந்திருக்கிறார்.

அருமையிலும் அருமையான குழந்தை கிருஷ்ணன். அதே நேரத்தில் அறிதற்கரியவராக இருந்த பகவான், குருவின் ஆக்ஞைப்படி காட்டுக்குப் போய் விறகு வெட்டிக்கொண்டு வந்துகூடக் கைங்கர்யம் பண்ணியிருக்கிறார். அந்த நாட்களில் ஒன்றைப் பற்றித்தான், அப்போது தம் 'க்ளாஸ் மேட்’டாக இருந்த குசேலரிடம் நீண்ட காலத்துக்குப் பின்னால் பகவான் நினைவுபடுத்துகிறார்.

கிருஷ்ணரும் குசேலரும் ஒருநாள் இப்படி விறகுக்காக அடர்ந்த காட்டுக்குப் போனபோது நன்றாக இருட்டிவிட்டது. அதோடு பேய் மழையும் பிடித்துக்கொண்டுவிட்டது. மேடு, பள்ளம் தெரியாமல் ஒரே பிரளயமாயிற்று. திக்கு திசை புரியாமல் கும்மிருட்டு வேறு. நரலீலையிலே பகவான் நிஜமாகவே தமக்குத் திக்கு திசை புரியாத மாதிரிதான் நடித்தார். ''நானும் நீங்களும் பயந்துண்டு, துக்கப்பட்டுண்டு ஒத்தர் கையை ஒத்தர் கோத்துண்டு, ராத்ரியெல்லாம் சுத்திசுத்தி வந்தோமே! ஞாபகமிருக்கோல்லியோ?'' என்று அவரே குசேலரைக் கேட்கிறார். குருவின் வேலை வாங்கும் கண்டிப்பால் வந்தது இது.

இனிமேல் குருவின் அன்பையும் பாசத்தையும் பகவான் வாய் வார்த்தையாகத் தெரிந்து கொள்கிறோம்.

''குழந்தைகளைக் காணோமேன்னு அங்கலாய்ச்சுண்டு குருநாதரும் நம்மைத் தேடிண்டு வந்து, ஸ¨ர்யோதய ஸமயத்தில் கண்டுபிடிச்சாரே! 'ஐயோ பாவம்! எனக்காக எத்தனைக் கஷ்டப்பட்டுட்டேள்?’ என்று நம்மிடம் எப்படி உருகிப் போயிட்டார்? அதற்குப் பரிஹாரமாக நமக்கு எப்படி மனஸார அநுக்ரஹம் பண்ணி, 'உங்களுடைய நல்ல நினைப்பெல்லாம் பூர்த்தியாகட்டும். நீங்க படிச்ச வேதம் எந்நாளும் பூர்ண சக்தியோடு உங்களை ரக்ஷிச்சுண்டு இருக்கட்டும்’ என்றெல்லாம் வரம் கொடுத்தாரே!'' என்று ஞாபகப்படுத்துகிறார்.

மொத்தத்தில் குரு என்பவர், வித்யா ஸம்பத்து மட்டுமில்லாமல் குண ஸம்பத்து, அநுஷ்டான ஸம்பத்து, ஆத்ம ஸம்பத்து எல்லாம் ஒருங்கே கூடியவராக இருந்தார்.

இப்படி அவர் இருக்கும்படியாகச் செய்தது அந்தப் பழைய நாளின் குருகுல முறையே தான். சிஷ்யர்கள் ஒரு குருவின் ஆதரவில் அவருடைய க்ருஹத்திலேயே இருந்து படிப்பது என்கிற கல்விமுறையில் குரு- சிஷ்யன் ஆகிய இருவருமே சுத்தர்களாகத்தான் இருந்தாக வேண்டுமென்றிருந்தது. அந்த முறையே அவர்களை அப்படி சுத்தர்களாக உருவாக்கவும் செய்தது. சிஷ்யர்கள் கூடவே வஸித்தும் அன்பு, மரியாதைகள் செலுத்த வேண்டுமென்றால் குரு நல்லொழுக்கமுள்ளவராகவும், அநுக்ரஹ சக்தி பெற்றவராகவும் இருந்தால்தானே முடியும்?

அதேபோல், புத்தி மட்டத்திலும்கூட சிஷ்யன் கூடவே இருந்து, 'பரிப்ரச்நம்’ என்று பகவான் சொன்னபடி அவரைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்கிறானென்றால், அப்போது அவர், தான் போதிக்கிற சாஸ்த்ரத்தில் நல்ல ஆழ்ந்த அறிவை உண்டாக்கிக்கொண்டேயாக வேண்டியிருந்திருக்கிறது.'
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:13 pmதியாகம் பற்றி நம் புராணங்களில் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போதுள்ள தலைமுறையினரிடம் தியாகம் பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. நான், என் குடும்பம் என்றாகிப்போன இன்றைய சூழலில் காஞ்சி மகா பெரியவா சொல்லும் தியாகத்தின் கதை, நாம் எல்லோரும் அறியவேண்டிய ஒன்று.

இதோ, அந்தத் தியாகக் கதை!

'கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்கும்போது, ''நான்தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது'' என்கிற பரம தியாக புத்தியில்...

'ந மம’ - 'எனதில்லை; எனக்கில்லை’ என்று, அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.

மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, ''நான் கொடுத்தேன்'' என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால், இந்த அகங்கார மானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபி விருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். தியாகம் பண்ண வேண்டும்; அதைவிட முக்கியமாக, தியாகம் பண்ணினேன் என்கிற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.

''ஸோஷியல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்'' என்று சொல்லிக்கொண்டு, வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால், இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.

சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, பிராணனையே தியாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்கிய மான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும்.

வேத பூமியான இந்த பாரதபூமியின் விசேஷம் மனுஷ்யனுக்காக மட்டுமில்லாமல், மற்ற ஜீவராசி களுக்கும், பூச்சி பொட்டுகளுக்கும்கூட க்ஷேமத்தைக் கோரி தியாகம் பண்ணச் சொல்வது. இதில், இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்கும்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், தியாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம்.

புறாவுக்காகத் தியாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம தியாகத்தை 'கபோத உபாக்யானம்’ சொல்லுகிறது. 'கபோதம்’ என்றால் புறா என்று அர்த்தம். 'உபாக்யானம்’ என்றால், சின்ன கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனசை ரொம்பவும் உருக்குவது.

வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி, ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும், அதன் ஜோடியான ஆண் புறாவும் வசித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது, நல்ல இருட்டாகிவிட்டது. ஒரே குளிர்! வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க, அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.

இதைப் பார்த்த மரத்தின் மேல் இருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்தினியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர்மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பட்சியிடம் திரண்டு வந்துவிட்டது. ''நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி. 'அதிதி தேவோ பவ’ - 'விருந்தாளியை தெய்வமாக நினை’ என்பது வேதை ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்'' என்று நினைத்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:14 pmமுதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்டவேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து, அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் சரி, அவனுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.

'சிகிமுகி’ கல் என்று ஒன்று உண்டு. 'சிக்கிமுக்கி’ என்று பேச்சு வழக்கில் சொல்லு கிறார்கள். 'சிகி’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். 'சிகை’ உள்ளதெல்லாம் 'சிகி’தான். சிகையை விரித்துக்கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிகிறது? 'முகம்’ என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் 'சிகிமுகி’.

இப்படிப்பட்ட சிகிமுகி கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது. வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி, அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காய்ந்தான்.

தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும், வேடனுடைய குரூர சுபாவம் கூட மாறி, மனசு இளகிவிட்டது. தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை விட்டுவிட்டான்.

'விருந்தோம்பல் என்றால், முக்கியமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடந்தால், அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்’ என்று பெண் புறா நினைத்தது.

அவனுடைய ஆகாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆகாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே, கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம சந்தோஷத்தோடு அந்த அக்னியில் தானே விழுந்து பிராண தியாகம் பண்ணி விட்டது. நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புசிக்கட்டும் என்ற உத்தம சிந்தை.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பட்சியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது. 'என்பும் உரியர் பிறர்க்கு’ என்கிற மாதிரி, இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபசரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரந்தங்களில் எல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.'

அகராதி, நிகண்டு என்றெல்லாம் சொல்லுகிறார்களல்லவா? ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு 'அமரகோசம்’ என்று பெயர். 'அமரம்’ என்று சுருக்கிச் சொல்வார்கள். அதைப் பற்றியும், அதை எழுதினவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இதில் பல ரசமான விஷயங்கள் இருப்பதால்தான் சொல்கிறேன். இதில் நம் பகவத்பாதாளின் பெருமை, மதங்களில் ஒன்றுக் கொன்று இருக்கப்பட்ட உறவுகளின் போக்கு எல்லாம் வெளியாவதால் சொல்கிறேன்.

இந்த அகராதிக்குப் பேர் 'அமரகோசம்’ என்றேன். 'கோசம்’ என்றால், 'பொக்கிஷம்’ என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் 'கோசம்’ என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும், ரொம்பவும் பிரசித்தமானது 'அமரகோசம்’தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by சிவா on Mon Aug 18, 2014 11:15 pmஅமரசிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால், அதற்கு 'அமர கோசம்’ என்று பெயர்.

அமரசிம்மன் மகா புத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால், அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிர மிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். அமரசிம்மன் ஹிந்து அல்ல; ஜைனன்.

இந்த அமரசிம்மன் ஒருமுறை ஆசார்யாளிடம் வாதப்போருக்கு வந்தபோது, ''நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல் வேன்'' என்றான்.

ஆசார்யாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக் கொண்டார்.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்கும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.

அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக்கொண்டு, அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆசார்யாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அத்தனைக்கும் அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான்.

அவன் என்னதான் மகா புத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்று ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷண காலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும், ஸர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷ£த் சரஸ்வதிதேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால், இவன் அப்படிச் செய்திருக்கவேகூடாது. ஏனென்றால், இவனுடைய ஜைன மதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை; அதைப் பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில், ஆராதிப்பதை ஜைன தத்துவம் ஒப்புக்கொள்ளாது. அப்படியிருந்தும், இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி, அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான். உள்ளன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.

இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வேங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக்கொள்கிறார்கள்; மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், 'வீட்டில் இப்படி அபிப்ராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி(feeling)க்கு மதிப்பு (Respect) கொடுத்தேன்’ என்று ஜம்பமாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இந்த ரீதியில்தான், ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத் தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமர சிம்மன், அவை நன்றாக அமையவேண்டும் என்று ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் - அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்குண்டான பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்துவிட்டாள்.

எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும்- அது நல்லதாக இருக்கட்டும், கெட்டதாக இருக்கட்டும்... அதில் ஒருவன் பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்கான பலனை பகவான் நிச்சயம் தருவார். அப்படியே, அமரசிம்மனுக்கும் ஸ்ரீசரஸ்வதியின் அருள் கிடைத்தது என்று பார்த்தோம். சரி, அதற்குப் பிறகு என்ன நடந்தது?

இதோ, மகாபெரியவாளே விவரிக்கிறார்...

''திரைக்கு இந்தப்புறம் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான் அமரசிம்மன். தான் எத்தனை புத்திசாலியானாலும், ஆசார்யாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவத்தி மாதிரி ஆகிவிடுவோம் என்பது இவனுக்குத் தெரியும். அதனால், முன்னமேயே வாக் தேவியைத் தஞ்சம் புகுந்திருந் தான். இவனுடைய உபாஸனைக்கு இன்னும் கொஞ்ச காலம் பலன் தந்துதான் ஆகவேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டிருந்தாள்.

எனவே, ''என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரை போட்டுக்கொண்டு, அதற்குள் நீ இரு. சங்கரர் வெளியிலிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்'' என்று வாக்குத் தந்தாள் வாக் தேவி.

அந்தப்படிதான் இப்போது நடந்தது. அதை ஆசார்யாளும், துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்துவிட்டார்.

உடனே அவர், ''அம்மா! உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆரா திக்கிற பழக்கத்தையே தொலைத்துவிடவேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே நீ இப்படி அநுக்கிரகம் செய்யலாமா? அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், அவன் இத்தனை புஸ்தகங்கள் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப்பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகம் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா?'' என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.

அவருடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. அமரசிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்துகொண்டாள். உடனே, கடத்திலிருந்து அந்தர்த்யானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது. அப்புறம், அமரசிம்மனால் ஆசார்யாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆசார்யாளிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டான்.

அதற்கப்புறம், அவனுக்கு தான் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அத்வைத பரமாக ஆசார்யாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்பந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன் சித்தாந்தம் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்களை மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால், அடிப் படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமர சிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்கவேண்டி யதில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான்.

இதை ஆசார்யாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூடச் சந்தோஷப்பட வில்லை. மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார்.

'அடடா, என்ன காரியம் செய்துகொண்டு இருக்கிறாய்? லோகம் என்று இருந்தால், நானா தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்து சர்ச்சை பண்ணுவதுதான், பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்து விட்டுப் போ..! ஆனாலும், நீ மகாபுத்திமான்! நான் உன்னைக் கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை, புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்துச் சொல்லமுடியுமோ அத்தனை நன்றாகச் செய்து புஸ்தகங்கள் எழுதியிருக்கிறாய். உண்மையில் பரமதத்வம், இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்தச் சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ, அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருக்கிறது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?'' என்று ஆசார்யாள் அவனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து, அவன் கடைசி கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகத்தைப் போட வொட்டாமல் தடுத்தார்.

அப்போது, அவன் கையில் இருந்துதான் 'அமரகோசம்’. ஆசார்யாள் தடுத்திருக்கா விட்டால் அதுவும் 'ஸ்வாஹா’வாகியிருக்கும். துரதிருஷ்டவசமாக, சமய சம்பந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயே போய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆசார்யாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்’ என்ற பெயருக்கேற்றபடி அதை மட்டும் அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்.

(நிறைவுற்றது)

[thanks]பி.என்.பரசுராமன் @ விகடன்[/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா பெரியவா சொன்ன கதைகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum