ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 M.Jagadeesan

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 SK

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Page 28 of 29 Previous  1 ... 15 ... 27, 28, 29  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (447)

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 27, 2016 9:50 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (447)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேலே ஆய்ந்த கிளவியாக்கம் நூற்பா 61, அவ்வியலின் கடைசி நூற்பா!

இப்போது சொல்லதிகாரத்தின் இரண்டாவது இயல் – வேற்றுமை இயல் !

பெயர்ச் சொல்லானது , வேற்றுமை உருபை ஏற்றுப் பொருள் வேற்றுமை காட்டும் இயல்தான் ‘வேற்றுமை இயல்’!

வேற்றுமை இயலின் முதல் நூற்பா இது ! -
 “வேற்றுமை தாமே ஏழென மொழிப” (வேற். 1)
 ‘வேற்றுமையின் தொகை  ஏழு என்று சொல்வார்கள் ’ – இதுவே நூற்பாவின் பொருள் !

இதற்கு அடுத்த நூற்பா ! -
“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே” (வேற். 2)

 ‘பெயர்கள் விளியை ஏற்பதால், அந்த விளியை ஒரு வேற்றுமையாகக் கருதி , வேற்றுமை மொத்தம் எட்டு ஆகும் !’- இதுவே இந் நூற்பாவின் பொருள் !

இந்த இரு நூற்பாக்களின் நடைகளையும் பார்க்கும்போது , நமக்கு இரு கருத்துகள் தோன்றுகின்றன! –

1 .  விளி வேற்றுமை சிறப்பில்லாதது
2 .  தொல்காப்பியருக்கு முந்தைய இலக்கணப் புலவர்கள் , வேற்றுமை மொத்தம் ஏழு என்றே கூறிவந்தனர் !

இந்த நமது கருத்துக்கு ஆதரவாக நிற்கிறது இளம்பூரணர் உரை !

1 . இளம்பூரணர் – “ வேற்றுமை தாமே ஏழென மொழிப எனப் பிறர் மதம் கூறி இச் சூத்திரத்தால் தந் துணிபு உரைத்தார்” என்கிறார் ! (வேற். 2 இளம். உரை)

பிறர் மதம் – பிறர் கொள்கை (Opinion)
தந்துணிபு = தம் + துணிபு; தம்முடைய முடிவு.

2 . இளம்பூரணர் – “விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய … விளி யென்னு மீற்ற எனப் பிரித்துக் கூறினார்” (வேற். 3 இளம். உரை).

இளம்பூரணர் வாய் மொழியில் தொல்காப்பியருக்கு முந்தைய தமிழ் இலக்கண ஆசிரியர் பற்றிய குறிப்பைப் பெறும்போது நமக்கு மெய்ச் சிலிர்ப்பு ஏற்படுகிறது !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M. Jagadeesan on Sun Nov 27, 2016 10:01 am

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கண நூல்கள் நமக்குக் கிடைக்காமல் போனது ,தமிழ்நாடு செய்த தவக்குறைவே ஆகும்.
avatar
M. Jagadeesan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 27, 2016 8:31 pm

நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (448)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 10, 2016 4:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (448)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘விளி’யோடு சேர்த்து , வேற்றுமை உருபுகள் எட்டு என்றார் தொல்காப்பியர் !

அந்த எட்டு எவை என்று அடுத்துக் கூறுகிறார் !:-
“அவைதாம்
பெயர்ஐ ஒடுகு”
இன்அது  கண்விளி  என்னும்  ஈற்ற “ (வேற். 3)

இந் நூற்பாவில் தொல்காப்பியர் அந்த எட்டு வேற்றுமை உருபுகளைப் பட்டியலிடுகிறார் :-
1. பெயர்
2. ஐ
3. ஒடு
4. கு
5. இன்
6. அது
7 . கண்
8.விளி

நூற்பாவில் உள்ள ‘ஈற்ற’ என்பதற்குப் பொருள் என்ன?

சேனாவரையர் விளக்குகிறார் -  “விளி வேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது ‘விளியென்னு மீற்ற’ எனப் பிரித்துக் கூறினார்.

விளக்கிய – விளக்க

 ‘உம்மைத் தொகை’ என்றால் உங்களுக்குத் தெரியும் !

‘பலபெயர் உம்மைத் தொகை’ என்றால் ?

சேனாவரையர் இந்த நூற்பாவின் உரையில் விளக்குகிறார் !

அவர் விளக்கப்படி  -  ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’  என நிறுத்தினால் , இதுதான்  ‘பலபெயர் உம்மைத் தொகை’!

இச் சொற்றொடரை விரித்தால் எப்படி விரிப்போம்?
‘பெயரும் ஐயும் ஒடுவும் குவும் இன்னும் அதுவும் கண்ணும்’ என்றுதானே விரிக்கமுடியும்?

எனவே, ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என்ற தொடரில், ‘உம்’ மறைந்து (தொகைந்து) வந்துள்ளதாலும் , ‘பெயர்’ முதலிய பல பெயர்கள் வந்துள்ளதாலும்தான் இது ‘பலபெயர் உம்மைத் தொகை’!

1. மேற் பட்டியலில் , ‘பெயர்’ என்பது வேறு ஒன்றுமில்லை ; எழுவாய்தான் !

‘பெயர் வேற்றுமை’ என்றாலும் , ‘எழுவாய் வேற்றுமை’ என்றாலும் , ‘முதல் வேற்றுமை’ என்றாலும்  ஒன்றுதான் !

’சாந்தி வந்தாள்’ – இதில் ‘சாந்தி’ , எழுவாய்; இதுவே ‘பெயர் வேற்றுமை’ என்றும் அறியப்படும் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (449)

Post by Dr.S.Soundarapandian on Fri Dec 23, 2016 11:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (449)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமைகள் எட்டில் , முதற்கண் எழுவாய் வேற்றுமை பற்றிக் கூறுகிறார் –

“அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே” (வேற்.4)

இதற்குச் சேனாவரையர் தரும் விளக்கம் –
“…உருபும் விளியும் ஏலாது , பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை;எனவே , உருபும் விளியு மேற்றும் பிறிதொன்றனோடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமை யாகா தென்றவாறாம்.”

அஃதாவது , எழுவாய் வேற்றுமைச் சொல்லில் வேற்றுமை உருபு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது!

இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் , எழுவாய் , வேற்றுமை உருபு எதனையும் ஏற்கும் நிலைமையில் இருக்கக் கூடாது !

குமணன் வந்தான் – இத் தொடரில் ‘குமணன்’ எழுவாய் வேற்றுமைச் சொல் !
‘குமணன்’ என்ற பெயர்ச் சொல்லில் , வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்கள் ; பொருள் திரளாது ! -

குமணனை வந்தான் ×
குமணனால் வந்தான் ×
குமணனுக்கு வந்தான் ×
குமணனின் வந்தான்×
குமணனது வந்தான் ×
குமணனின்கண் வந்தான்×
குமணா வந்தான்×

ஒரு தொடரின் முதலில் உள்ள பெயர்ச் சொல்லை ‘எழுவாய்’ என்று சொல்ல முடியுமா?
முடியாது!

நல்ல எடுத்துக்காட்டோடு இதனை விளக்குகிறார் இளம்பூரணர் –
“  ‘ஆயன் சாத்தன் வந்தான்’  என்புழி , ஆயன் என்பதூஉம் பெயர்; சாத்தன் என்பதூஉம் பெயர் ; ஆயினும் , இரண்டிற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையாற் , சாத்தன் என்பதூஉம் , வந்தான் என்பதூஉம்,  ஆயன் என்பதற்கே பயனிலை; அதனால் ‘சாத்தன்’ என்பது ஆண்டு எழுவாய் வேற்றுமை யாயிற்று”!

அஃதாவது , ‘ஆயனாகிய சாத்தன்’ எனக் கொண்டால் , ‘சாத்தன்’ என்பதே எழுவாய் என்பது உங்களுக்குப் புரியும் !

‘சாத்தன்’ என்பதற்கு  ‘;ஆயன்’ ,  அடை (Adjective) !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (450)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 24, 2016 11:49 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (450)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேல் வேற்றுமையியல் நூற்பா 4ஐ அடுத்து , ‘எழுவாய் ஏற்கும் பயனிலைகள்’ , பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.5) ,  ‘தொகைகள் ஏற்கும் பயனிலைகள்’ பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.6) , ‘எழுவாயும் தோன்றா எழுவாயும்’ பற்றிய நூற்பாவும் (வேற்.7) வருகின்றன; இவற்றை முன்பே நாம் ஆய்ந்துள்ளதால், நாம் அடுத்த நூற்பாவுக்குச் செல்லலாம் !:-

“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
 ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப” (வேற்.8)

கூறிய முறையின் உருபு நிலை’- வேற்றுமையியல் நூற்பா3இல் கூறிய உருபுகளின் நிலை என்னவென்றால்,
‘ஈறு பெயர்க்காகும் இயற்கைய எனப’ – பெயர்க்கு ஈறாகும் தன்மையாகும் என்பார்கள்!

1.சாத்தனை – ‘ஐ’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
2.சாத்தனொடு- ‘ஒடு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
3. சாத்தற்கு – ‘கு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
4. சாத்தனின் – ‘இன்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
5. சாத்தனது – ‘அது’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
6. சாத்தன்கண் – ‘கண்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!

மேல் நூற்பாப்படி ‘பெயர்க்கு ஈறாகும் வேற்றுமை உருபு’ என்பதை ஒரு வரையறையாகக் கொள்ளலாம் !

அப்படியானால் வினைக்கு ஈறு?

இவ் வினாவிற்கு விடை தருகிறார் சேனாவரையர் !-
“வினைச் சொலிறுதி நிற்கு மிடைச்சொல் , தாமென வேறு உணரப்படாது அச் சொற்குறுப்பாய் நிற்குமன்றே. இவ்வாறு பெயர்க்குறுப் பாகாது தாமென வேறுணரப் பட் டிறுதி நிற்குமென்பார் ‘நிலை திரியாது ’  என்றார் !”

என்ன பொருள்?

வினைச்சொல்லின் இறுதியிலே நிற்பது ‘ வேற்றுமை உருபு’ அல்ல; அது ‘இடைச்சொல்’!
அந்த இடைச்சொல்லும் , வினையின் உறுப்பாய், வினையோடு சேர்ந்துதான் வரும்!

வந்தான் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆன்’ ; இஃது ஓர் இடைச்சொல் (Particle) !
வந்தாய் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆய்’ ; இஃது ஓர் இடைச்சொல்  !
வந்தாள் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆள்’ ; இஃது ஓர் இடைச்சொல்  !

மேலே வந்த இடைசொற்கள் , சொல்லைவிட்டுப் நீங்கிநில்லாமல் , பொருள் நிலையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைக் கவனியுங்கள் !

சாத்தனது – இதிலுள்ள ‘அது’வைப் பிரித்தால், ‘சாத்தன்’ என்ற , பொருள் தரக்கூடிய ஒரு சொல் நிற்கிறது !

வந்தாள் – இதிலுள்ள ‘ஆள்’ என்பதைப் பிரித்தால், ‘வந்த்’ என்பதுதான் நிற்கிறது ; ‘வந்த்’ என்பது பொருளற்றது !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (451)

Post by Dr.S.Soundarapandian on Sun Dec 25, 2016 9:46 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (451)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை இயலில் அடுத்துப் பெயரின் இலக்கணம் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே” (வேற்.9)

‘பெயர்நிலைக் கிளவி’ – பெயர்ச்சொல்,
‘காலம் தோன்றா’ – காலம் காட்டாது;
‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’ – வினையாலணையும் பெயர்,
‘ஒன்று அலங்கடையே’- ஒன்று அல்லாதபோது!

அல்லி , இளவரசி , செல்வி , கந்தன் , அருணாசலம் – பெயர்ச் சொற்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !)

வந்தவன் , வந்தவள் , அடித்தவன் , சென்றோன் , பாடினவள் – விணையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டுவதைக் கவனிக்க; காட்டப்படும் காலம், இறந்த காலம்).

ஆனால் , ‘குறிப்பு வினையாலணையும் பெயர்’ , காலம் காட்டாது !
பொய்யன் , நாடன் , நுதலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க!)

சேனாவரையர் , ‘பெயர்’ என்பதில் தொழிற்பெயரையும் (Verbal nouns) சேர்க்கிறார் !

அதன்படி –
உண்டல் , தின்னல் , ஆடல் , மகிழ்தல் – தொழிற்பெயர்கள் ( இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !).

சேனாவரையர் , இரத்தினச் சுருக்கமாகப்  ‘பெயர்’ என்றால் அதற்கு இலக்கணம் இதுதான் எனக் கூறுகிறார் -  “பெரும்பான்மை பற்றிக் காலந் தோன்றாமை பெயரிலக்கணமாயிற்று !”

அப்படியானால் ‘சிறுபான்மை’ ?
‘சிறுபான்மை’ நாம் மேலே பார்த்த ‘வினையாலணையும் பெயர்’ (Participial noun)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (452)

Post by Dr.S.Soundarapandian on Thu Jan 26, 2017 1:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (452)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முதல் வேற்றுமை எனப்படும் ‘எழுவாய் வேற்றுமை’ பற்றிய தொல்கப்பிய நூற்பாக்களை அடுத்து ,நாம் பார்க்கப்போவது ’இரண்டாம் வேற்றுமை’!-

“இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
 எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே” (வேற். 10)

‘இரண்டு ஆகுவதே’-  இரண்டாம் வேற்றுமை என்பது,
 ‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’  -  ‘ஐ’ என்று பெயர் பெறும் வேற்றுமைச் சொல் ;
‘எவ்வழி வரினும்’ – எந்த இடத்தில் வந்தாலும்,
‘வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலில் தோன்றும் அதுவே’ – வினை , வினைக் குறிப்பு  ஆகிய  இந்த இரண்டின்  செயப்படுபொருளாகத்  தோன்றும் அது !

முதல் - செயப்படுபொருள் (Object)

சேனாவரையர் எடுத்துக்காட்டுகள் ! –
1 . குடத்தை வனைந்தான்
2 . குழையை உடையன்
1. ‘வனைந்தான்’ என்ற வினை முற்றுக்குச் செயப்படுபொருள், ‘குடம்’.
2. ‘உடையன்’ என்ற குறிப்பு வினை முற்றுக்குச்(Appellative finite verb) செயப்படுபொருள் , ‘குழை’.

-இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் , செயப்படுபொருளை ஒட்டிக்கொண்டு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு நிற்பதைக் காணலாம் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by krishnaamma on Thu Jan 26, 2017 5:10 pm

நல்ல பகிர்வு ஐயா, நிறைய இருக்கிறது படித்துவிட்டு மீண்டும் பின்னூட்டம் போடுகிறேன் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Fri Feb 24, 2017 12:12 am

வணக்கம் ஐயா.

தங்களின் எளிய விளக்கங்களைத் தொகுத்து நூலாக்குங்கள். வரும் தலைமுறைக்கு நன்மை பயக்கும்.

நன்றி.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Fri Feb 24, 2017 9:02 pm

நன்றி கிருஷ்ணாம்மா !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Fri Feb 24, 2017 9:02 pm

நன்றி முனைவர் குணசுந்தரி அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (453)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 11, 2017 7:31 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (453)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமையியல் நூற்பா 10ஐ அடுத்து இரண்டாம் வேற்றுமை உருபின் பொருட் பாகுபாடுகள் பற்றிய நூற்பா அமைந்துள்ளது ; இதனை முன்பே நாம் பார்த்துள்ளதால் , அதற்கடுத்த நூற்பா 12க்குச் செல்வோம் !-
“மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே” (வேற்.12)

ஆம் ! மூன்றாம் வேற்றுமை உருபு பற்றிய நூற்பா இது !

இதன் பொருள் –
‘மூன்றாகுவதே’ -  மூன்றாம் வேற்றுமை உருபு என்பது,
‘ஒடு  எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ -  ‘ஒடு’ என்று சொல்லப்படும் வேற்றுமைச் சொல் !
‘வினைமுதல் கருவி அனைமுதற்று அதுவே’- வினையைச் செய்யும் காரணக்கருத்தாவையும் , கருவியையும் அடிப்படையாகக் கொண்டுவரும் !

விளக்க எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம் ! -

1 .   மனத்தொடு வாய்மை சொன்னான் = மனத்தால் வாய்மை சொன்னான்.
இங்கே , மனத்தொடு – மனத்தால்
மனம் -  வினைமுதல் (கருத்தா; வினை செய்யக் காரணமாக இருப்பது)
மனத்தொடு – இதுதான் தொல்காப்பியர் காலத் தமிழ் !
மனத்தால் – இது பிற்காலத் தமிழ்!
2 . வாளொடு என்ன பயன்?
இங்கே , வாள் – கருவி (tool)
வாளொடு என்ன பயன்?- இது தொல்காப்பியர் காலத்துத் தமிழ்!
வாளால் என்ன பயன்?- இது பிற்காலத்துத் தமிழ்!

கருத்தா – agent
கருவி – instrument
நேமிநாதம் , நன்னூல் , தொன்னூல் விளக்கம் , முத்துவீரியம் ஆகிய இலக்கண நூற்கள் , ‘ஆல்,ஆன் , ஓடு , ஒடு’ ஆகிய நான்கு உருபுகளை மூன்றாம் வேற்றுமை உருபுகளாகக் கூறினாலும் , தொல்காப்பியத்தின் அடுத்த நூற்பாவாலும் , நூ12க்குத் தெய்வச்சிலையார் வரைந்த உரையாலும் , இந்த நான்கு உருபுகளும் தொல்காப்பிய இலக்கணத்தில் கூறப்பட்டவையே எனக் கருதலாம்.
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (454)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 13, 2017 9:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (454)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஒடு’ வேற்றுமை என்று மூன்றாம் வேற்றுமை கூறப்பட்டாலும் ,  ’ஆன்’என்ற  உருபும்  இந்த மூன்றாம் வேற்றுமைக்கு உண்டு !

இதைத்தான் கீழ்வரும் நூற்பாவில் கூறுகிறார் தொல்காப்பியர் :-
“அதனி னியறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனி னாதல்
அதனிற் கோடல் அதனொடு மயங்கல்
அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி
அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை
இன்னா னேது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார்  ” (வேற். 13)

1. ‘மண்ணான் இயன்ற குடம்’ என்ற எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம். மண்ணே குடமாக ஆவதை இங்கு நோக்கலாம். இதனால்தான் ‘அதனின் இயறல்’ என்ற வாய்பாடு (Formula) கூறப்பட்டது ! இயறல் – செய்தல். அதனின் இயறல் = அதனைக் கொண்டு செய்தல். இந்த எடுத்துக்காட்டில் ,  மண் , ’முதற்காரணம்’ எனப்படும். (மண்+ ஆன் = மண்ணான்).இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’).

( கருவி , காரணம் , ஏது, நிமித்தம் என்பன ஏறக்குறைய ஒரே பொருள் கொண்டவை என்பது நச்சரின் விளக்கம்! ‘எதன் நிமித்தம்?’ என்றால், ‘எதன் பொருட்டு?’ என்பது பொருள்.)

2.  அடுத்த வாய்பாடு , “அதன் தகு கிளவி”. ‘எதனால் இது தக்கது?’ என்ற வினாவை நீங்கள் கேட்கவேண்டும்; அதற்கு  கூறும் விடை இந்த உருபு பெற்றுவரும்.  ‘வாயாற் றக்கது வாய்ச்சி’ ; (வாய்ச்சி - சொல்) ; வாயான் + தக்கது = வாயாற்றக்கது. தக்கது = தகுதிப்பாடு உடையது.இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)

3 . ‘அதன் வினைப்படுதல்’ -  எழுவாயின் செயற்பாட்டைக் குறித்து வரும் இது. உரையாசிரியன்மார் தரும்  ‘நாயாற் கோட்பட்டான்’ என்பதன் பொருள் , ‘நாயான் கொல்லப்பட்டான்’ என்பதே. இதனை இன்றைய நடையில் சொல்வதானால் , ‘நாயால் கொல்லப்பட்டான்’ எனல் வேண்டும் ! இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’); வினை முதல் – எழுவாய் (கருத்தா; Subject).

4 .  ‘அதனின் ஆதல்’ – ‘எதனால் ஆவது?’ என்ற வினாவுக்கு விடையாக வருவது.  ‘வாணிகத்தான் ஆயினான்’ என்றால் , ’வணிகம் செய்து செல்வன் ஆனான்’ என்பது பொருள். இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)

5 . ‘அதனிற் கோடல்’ – ‘எதைக் கொண்டு பெறப்பட்டது?’ என்ற வினாவுக்கு விடையாக வரும் தொடரில் இவ் வுருபு வரும். ‘காணத்தாற் கொண்ட அரிசி’ என்றால் , ’கொள்ளைக் கொடுத்து வாங்கிய அரிசி’ என்பது பொருள் . (காணம் = கொள்ளு). இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)

6 .   ‘அதனொடு மயங்கல்’ – ஒன்றோடு ஒன்று கலந்து வருவதைப்பேசும்போது ‘ஒடு’ உருபு வரும் என்பது கருத்து. ‘எண்ணொடு விராய அரிசி ’ என்றால் , ‘எள்ளோடு கலந்த அரிசி’ என்பது பொருள். ( எள் + ஒடு = எண்ணொடு) . இங்கே வந்த உருபு , ‘ஒடு’.  (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)

7 .  ‘அதனொடியைந்த ஒருவினைக் கிளவி’ – ‘சாத்தனொடு வந்தான்’ என்பதில் , வினையானது ‘வருதல்’ ; சாத்தனும் இன்னொருவனும் வருதல் வினையைச் செய்கிறார்கள் ; இவ்வாறு இணைந்து வினை நடப்பதால் ‘ஒருவினைக் கிளவி’ என்றனர். இங்கே வந்த உருபு , ‘ஒடு’ .  (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)

8 .  ‘அதனொடியைந்த வேறுவினைக் கிளவி’ -  இதற்கு எடுத்துக்காட்டு ‘ மலையொடு பொருத யானை’ ; மலை அங்கேதான் இருக்கிறது ; யானைதான் வினை செய்கிறது; அஃதாவது, மோதுகிறது. இரண்டும் வினை செய்யாமல் ஒன்றுமட்டும் வினை செய்வதால் ‘வேறு வினை’என்றனர். இங்கே வந்த உருபு , ‘ஒடு’..  (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)

9 .  ‘அதனொடியைந்த ஒப்பல் ஒப்புரை’ – இதற்கு எடுத்துக்காட்டு , ‘நூலோடு நார் இயைந்தது போல’ ; நூலும் நாரும் ஒப்பிடத் தக்க இரு பொருட்கள் அல்ல ; எனினும் வேறு ஒரு காரணத்திற்காக ஒப்பிடப்படுகிறது; இவ்வாறு ஒப்புமை இல்லாத இரண்டைச் சேர்த்து ஒப்புமை கூறினால் , அதுவே ‘ஒப்பல் ஒப்புரை’ . இங்கே வந்த உருபு , ‘ஒடு’. .  (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)

10 .  ‘இன்னான்’ வாய்பாடு – ’இப்படிப்பட்டவன்’ என்று கூறும்போது இந்த உருபு வரும். ‘காலான் முடவன்’ என்றால் , அவன் கால் ஊனம் ; அதனால் அவன் ‘முடவன்’ என்பது பொருள். (காl+ ஆன்= காலான்)இங்கே வந்த உருபு , ‘ஆன்’.  (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)

11   . ‘ஏது’  -   ஏது= காரணம்.  ‘தவத்தாற் பெற்றான் வீடு’ என்பது எடுத்துக்காட்டு.  (தவத்தான் + பெற்றான்= தவத்தாற் பெற்றான்); ‘தவம் காரணமாகப் பெற்றான் வீடு பேறு’ என்பதே பொருள். இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)

தொல்காப்பியருக்கு முன்பு ‘ஒடு’ மட்டுமே மூன்றாம் வேற்றுமை உருபாக இருந்தது என்றும் ,தொல்காப்பியர் காலத்தில் ‘ஆன்’ உருபும் மூன்றாம் வேற்றுமை உருபாகக் கொள்ளப்பட்டது என்றும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்!

சரி! ‘ஒடு’ , ‘ஆன்’ என்ற இந்த இரு உருபுகள்(Case markers) மட்டும்தான் மூன்றாம் வேற்றுமைக்கு வருமா?
நல்ல வினா!

இதற்குத் தெய்வச்சிலையார் விடை கூறுகிறார் !:-
“இன்னும் ‘அன்ன பிறவும் என்றதனான் ‘ஓடு, ‘ஆல்’என வரும் உருபும் கொள்க’’ என்கிறார் தெய்வச்சிலையார் !.
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (455)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 25, 2017 9:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (455)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நான்காம் வேற்றுமை உருபுகள் தொடர்பான நூற்பாக்கள் 14, 15 ஆகியவற்றை முன்பே நம் வரிசையில் ஆய்ந்துள்ளதால் இப்போது ஐந்தாம் வேற்றுமை பற்றிய நூற்பா 16க்குச் செல்லலாம் !:-
“ஐந்தாகுவதே
 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
 இதனின் இற்றிது என்னு மதுவே ”   (வேற். 16)

‘இன் எனப் பெயரிய’ – ‘இன்’ என்ற பெயர் உடைய,
‘வேற்றுமைக் கிளவி’ -  வேற்றுமை உருபாகிய சொல்,
‘இதனின்’ – இந்தப் பொருளைவிட
‘இற்று இது’ – இந்தத் தன்மைத்து இது  என்பதை உணர்த்த வரும்!

இற்று – குறிப்பு வினை முற்று (Appellative finite verb)
‘இதனின் இற்று இது’ – என்பதை வாய்பாடாகக்  (Formula)கொள்ளவேண்டும் !
அடுத்த நூற்பாவில் ,  ‘இன்’ எனும் ஐந்தாம் வேற்றுமை உருபின் பொருட்பாகுபாடுகளை உணர்த்துகிறார் தொல்காப்பியர்!:-
”வண்ணம் படிவே யளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை யிளமை சிறத்த லிழித்தல்
புதுமை பழமை ஆக்க மென்றா
இன்மை யுடைமை நாற்றந் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்று
அன்ன பிறவும் அதன்பால் என்மனார்” (வேற்.17)

கல்லாடனார் உரையின் அடிப்படையில், மேலே கூறப்பட்ட 28 வகைப் பொருள் வகையங்களை (Patterns) வருமாறு விளக்கலாம் !:-

1 . வண்ணம் – காக்கையிற் கரிது களாம்பழம்  ( காக்கையைவிடக் களாம் பழம் கருமையானது; காக்கையின் + கரிது= காக்கையிற் கரிது; ‘இன்’ வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க)

2 . வடிவு – உள்ளங்கையின் வட்டம் சக்கரம் (உள்ளங்கையை விடச் சக்கரம் வட்டமானது)

3 . அளவு – புத்தகத்தின் நெடிது குடை (புத்தகத்தைவிடக் குடை நீளமானது)

4 . சுவை – மாங்காயிற் புளிப்பு புளி (மாங்காயைவிடப் புளிப்பு மிக்கது புளி)

5 . தண்மை -  சித்திரையிற் தண்ணிது மாசி மாதம் (தண்ணிது - குளிரானது)  

6 . வெம்மை -  மாசியின் வெம்மை சித்திரை (வெம்மை - வெட்பம்)

7 . அச்சம் – கள்ளரின் அஞ்சும்  (கள்ளரைக்கண்டு அஞ்சுவான்)

8 . நன்மை – தேநீரிற் பால் நன்று (தேநீரைவிடப் பால் நல்லது)

9 . தீமை – பொய்மையிற் கொலை தீது

10 . சிறுமை – புலியிற் சிறிது புலிக்குட்டி

11 . பெருமை -  புலிக்குட்டியிற் பெரிது புலி

12 . வன்மை – எருமையின் வலிது யானை

13 . மென்மை – மலரின் மென்மை காதல்

14 . கடுமை -  மரத்தின் கடுமை பாறை

15 . முதுமை – கண்ணகியின் மூத்தோன் கோவலன்

16 . இளமை – கோவலனின் இளையோள் கண்ணகி

17 – சிறத்தல் – கொடுங்கோலனின் சிறந்தவன் செங்கோலன்

18 . இழித்தல் – செங்கோலனின் இழிந்தவன் கொடுங்கோலன்

19 . புதுமை – பழம்பானையிற் புதிது, குயவன் இன்று செய்த பானை

20 . பழமை – இன்று கடையில் வாங்கிய ஆடையிற் பழயது , கட்டியிருந்த ஆடை

21 . ஆக்கம் -   தொண்டரின் செல்வனாயினான் தலைவன்

22 . இன்மை – முதலாளியிற் பொருளிலன் தொழிலாளி

23 . உடைமை – தொழிலாளியிற் பொருளுடையன் முதலாளி

24 . நாற்றம் – தாமரையின் நாறும் மல்லிகை (தாமரையைவிட மல்லிகை மணக்கும்)

25 . தீர்தல் – காட்டிற் றீர்ந்து ஊருக்குள் வந்தது சிறுத்தை  (காட்டிலிருந்து நீங்கிச் சிறுத்தை
ஊருக்குள் வந்தது)

26 . பன்மை -  கொடையாளரிற்  பலர் கஞ்சர்கள் (கொடையாளிகளைவிடக் கஞ்சர்களே பலராக உள்ளனர்)

27 . சின்மை – கஞ்சர்களிற் சிலர் கொடையாளர்  (கஞ்சர்களைவிடக் கொடையாளிகள் சிலர்)

28 . பற்றுவிடுதல் – காமத்திற் பற்றுவிட்டான் (காமத்தின் மீதிருந்த பிணைப்பை நீக்கினான் )

மேல் 28இல் , அடைப்புக் குறிக்குள் தரப்பட்டவை இன்றைய நடையில் அமைந்தவை ஆகும்.
எடுத்துக்காட்டுகளில் ‘இன்’பயின்றது தொல்காப்பியர் காலத்துத் தமிழ்! அவற்றை நாம் விளங்கிக் கொள்ளவேண்டுமாயின் ‘விட’ , ‘இல் இருந்து’ என்றெல்லாம் போட்டுத்தான் விளங்கிக் கொள்ளவேண்டும் ! இந்தக் காரணத்தால்தான் இளம்பூரணர் முதலிய பழைய உரையாசிரியர்கள், ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்றோ , ‘இதிலிருந்து’ என்றோ உரை எழுதவில்லை ! ‘இதனின்’ என்றே பொறுலும் எழுதினர் ! உரையாசிரியர்தம் எழுத்தை நாம் எப்படி அணுக வேண்டும் (How to approach the commentators of Tholkappiyam) என்பதற்கு இந்த ஆய்வே சான்று !

மேல் எடுத்துக்காட்டுகளில் பெரும்பான்மையானவை ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்று பொருள்கொள்வதை ஆதரிக்கின்றன என்பதை நோக்குவீர்! இதனால்தான் , மேல் நூற்பாப் (வேற். 16) பொருளில்   ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்று பொருள் எழுதப்பட்டுள்ளது !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Sat Aug 26, 2017 6:24 am

ஐயா !

மேலே கூறப்பட்டுள்ள 28 வகைப் பொருளின் பாகுபாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் கல்லாடனார் கொடுத்ததா அல்லது தாங்கள் கொடுத்ததா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 26, 2017 9:23 am

நன்றி ஜெகதீசன் அவர்களே!
‘கல்லாடனார் உரையின் அடிப்படையில்’ என்று கவனமாக நான் எழுதியுள்ளேன். அடிப்படைதான் கல்லாடனாரது; எடுத்துக்காட்டுகள் யாவும் என்னுடையதே! கல்லாடனார் போட்ட தண்டவாளத்தில் எனது வண்டி!
ஊன்றிப்படிக்கும் ஆய்வாளர் நீங்கள்! மிக்க மகிழ்ச்சி!
:நல்வரவு: :நல்வரவு: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (456)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 27, 2017 8:43 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (456)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ஆறாம் வேற்றுமை உருபு!

இதற்குத் தொல்காப்பியம் :-
“ஆறாகுவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற். 18)

‘ஆறு ஆகுவதே’ – ஆறம் வேற்றுமை உருபு ஆகுவதாவது,
‘அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ -  ‘அது’ என்று பெயர்கொண்ட வேற்றுமைச் சொல்!
‘தன்னினும் பிறிதினும்’ – ஒன்றனொடு சேர்ந்து பொருள்பட்டும்(தற்கிழமையாகவும்) , சேராது நின்று பொருள்பட்டும்(பிறிதின் கிழமையாகவும்),
‘இதனது இதுவெனும்’ – இந்தப் பொருளோடு தொடர்புபெற்று இது வரும் என்ற நிலையில்,
‘அன்ன கிளவிக் கிழமைத் ததுவே’ -  கிழமை பெற்றதாய் வருவதாகும்.

1. ’யானையது கொம்பு’ – ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளாதலால், இந்த எடுத்துக்காட்டின் பொருளைத்,  ‘தற்கிழமைப் பொருள்’ என்பர்!  (தன் + கிழமை = தற்கிழமை; பேசப்படும் பொருளுக்கே உரிமை உடையது; கிழமை – உரிமை; ‘கிழமை’ உடையவர் , ‘கிழார்’!)

2. ‘யானையது காடு’ - ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு இங்கும் வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருப்பதைப் போலல்லாது , காடானது தனித்துக் கிடப்பதால் , இந்த எடுத்துக்காட்டின் பொருளைப்,  ‘பிறிதின் கிழமைப் பொருள்’ என்பர்!

இனி, ஆறாம் வேற்றுமை உருபானது எந்தெந்தப் பொருள்களில் வரும் என வெகு நுணுக்கமாகக் கூறுகிறார் தொல்காப்பியர் !:-

“இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையி னென்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி யுறுப்பின் குழுவி  னென்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கில் தோன்றுங் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்”        (வேற். 19)

இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளைக் கண்டால் பொருள் விளங்கும் !
கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் சேனவரையர் , இளம்பூரணர் , தெய்வச்சிலையார் உரைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவையாம் ! ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொன்று தெளிவாக இருக்கும் என்பதால் இப்படி எடுக்கவேண்டுயுள்ளது!:-

1 . இயற்கை :  ‘நிலத்தது அகலம்’- நிலத்தின் அகலம் இயற்கையாக அமைந்ததாகும்; எனவேதான் இயற்கைக் குணத்தின் அடிப்படையில் இதுபோல வருவனவற்றை எல்லாம்  ‘இயற்கக் கிழமை’ப் பொருள்கொண்டவை என்பர்; இப்படித் தொடர்கள் வந்தால் அதில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

2 . உடைமை:  ‘சாத்தனது தோட்டம்’ – இத் தொடரில் ‘அது’ வந்துள்ளதை நோக்குக! தோட்டம் சாத்தனுக்குச் சொந்தமானது என்பதால் , ‘உடைமை’ப் பொருளில் வந்த தொடர் இது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

3 . முறைமை :  ‘ஆவினது கன்று’ – பசுவுக்கும் கன்றுக்கும் தொப்புள் உறவு உள்ளதால் இந்த எடுத்துக்காட்டுத் தொடர் ‘முறைமை’ என்ற பொருளுக்கு ஏற்றதாகும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

4  .கிழமை : ‘அரசனது உரிமை’ -  அரசனது உரிமை வரிவாங்குதல் என்றால் , இத் தொடரில் வந்துள்ள பொருள், ’கிழமை’ப் பொருள்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

5 . செயற்கை : ‘சாத்தனது கற்றறிவு’ என்ற தொடர், சாத்தனுடைய செயற்கையான – இயற்கையாக இல்லாமல் அவன் படித்துச் செயற்கையாப் பெற்ற- அறிவு என்பதால் , இந்த எடுத்துக்காட்டுச், ‘செயற்கை’ என்ற பொருளின்கீழ் வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

6 . முதுமை: ‘அரசனது முதிர்வு’- அரசனுக்குற்ற முதுமையை இத் தொடர் தெரிவிப்பதால், இது ‘முதுமை’ என்ற பொருள் பாகுபாட்டில் வைத்துக் கருதப்படும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

7 . வினை: ‘சாத்தனது செலவு’ – சாத்தனது பயணம் என்று இன்றைய நடையிற் கூறலாம் !  செல்லும் வினை (காரியம்) பேசும் தொடராதலால், ‘வினை’ப் பொருள் கொண்ட தொடருக்கு இஃது எடுத்துக்காட்டாம் . (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

8 . கருவி : ‘சாத்தனது வாள்’ – வாள் (கத்தி) , இன்னாரது என்று சொல்லக்கூடிய தொடர் இது;  ஆகவே , ‘அது’ வேற்றுமை பயிலும்  ‘கருவி’ப் பொருள் தொடர் இது! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

9 . துணை:  ‘அவனது இணங்கு’- இங்கே ‘இணங்கு’ என்பது ‘துணைவன்’ அல்லது ‘துணைவி’யைக் குறிப்பதாகும் !  ‘Spouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் ‘இணங்கு’!  எனவே ‘துணைக் கிழமை’க்கு இந்த எடுத்துக்காட்டுத் தொடர் பொருந்துவதைக் காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

10 . கலம்:  ‘சாத்தனது கலம்’ – இங்கே ‘கலம்’ என்பது ‘ஓலைப் பத்திரம்’ (Palmleaf document) என்ற பொருளில் நிற்கிறது !  ‘இன்னாரது கலம்’ என்ற தொடர் தொல்காப்பியர் காலத்தில் பயிற்சி இருந்ததால், ‘கலக் கிழமை’த் தொடர்களில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு  பயின்றது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

11 . முதல் : ’கலத்தது முதல்’- ‘கலம்’ எனும் பத்திரம் எந்தப் பொருளின் உரிமைக்காக  எழுதப்பட்டது? இதற்கு விடை கூறும்போது , அந்நாளில்  ‘கலத்தது முதல் இன்னது’ என்பர்!  இதுவே ‘முதல் கிழமை’ என்பதன் பொருள்!

12 . ஒருவழி உறுப்பு: ‘புலியது உகிர்’ -  ‘உகிர்’ என்றால் நகம் என்பது பொருள். இத் தொடரிலும் ‘அது’ வேற்றுமை உருபு வந்துள்ளமை காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

13 . குழூஉ: ‘படையது குழூஉ’-  ‘குழு’ என்பதே நூற்பாவுக்காக அளபெடை பெற்றது. குழுவைப் பற்றிய இத்தகைய தொடர்களில் ‘அது’ உருபு பயிலும். படையது குழு - படையது கூட்டம். (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

14 . தெரிந்துமொழிச் செய்தி: ‘கபிலரது பாட்டு’ -  கபிலர் எழுதினார் என்று வெளிப்படையாகத் தெரிந்தது பற்றிய தொடராதலால் , ‘தெரிந்துமொழிச் செய்தி’! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

15 . நிலை:  ‘சாத்தனது இல்லாமை’-  சாத்தன் என்பானின் வறிய நிலையைக் கூறும் தொடர் இது; இதில் ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

16 . வாழ்ச்சி : ‘காட்டது யானை’ – இங்கே ’வாழ்ச்சி’ என்பது வாழ்க்கையைக் குறிக்கும்! காட்டில் யானை வாழ்வதைச் சுட்டும் தொடர் இது.  காட்டது யானை- காட்டிலே வாழும் யானை ! இங்கே ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

17 . திரிந்து வேறுபட்டது:  ‘கோட்டது நூறு’ ; கோடு – சுண்ணாம்புக் கட்டி ; நூறு – தூள்; கோட்டது நூறு – சுண்ணாம்புத் தூள். சுண்ணக்கட்டி தூளாக மாறிவிட்டதால், ‘திரிந்து வேறுபட்டது’ என்ற கிழமைப் பொருள் வந்தது. (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

’இயற்கை’ முதலாகத் ‘திரிந்து வேறுபட்டது’ ஈறாக வந்த மேல் 17 கிழமைப்பொருள்கள், தொல்காப்பியர் வகுத்தவை! இப் பதினேழும் , தற்கிழமை, பிறிதின் கிழமை என்ற இரண்டனுள் அடங்குவதை அடைப்புக் குறிக்குள் தந்துள்ள குறிப்புகளால் உணரலாம் !

தற்கிழமை பற்றி மேலே கண்டோமல்லவா? இந்தத் தற்கிழமை ஐந்து வகைப்படும் என்கிறார் சேனாவரையர்! :-

1 . ஒன்றியற் கிழமை- இயற்கை, நிலை பற்றி வந்தவை; எடுத்துக்காட்டுகளை மேலே (எண் 1, 15)பார்த்தோம் !
2 . ஒன்றுபல குழீஇயது – எள்ளதுகுப்பை
3 . வேறுபல குழீஇயது- படையது குழாம் (பலதரப்பட்ட வீரர்கள் படையில் இருப்பதால் ‘பல குழீஇயது’ ! பலகுழீஇயது – பல குழுமியது.
4 . உறுப்பின் கிழமை- புலியது உகிர்
5 . மெய்திரிந்தாய தற்கிழமை- சாத்தனது செலவு (சாத்தனின் பயணம் என்பது அவன் உடல் உறுப்போடு ஒட்டியது அல்ல; ஆகவே , ‘மெய்திரிந்தாய’ ! )

பிறிதின் கிழமைக்கு உட் பிரிவுகள் இல்லை என்பது இளம்பூரணர் கருத்தாக உள்ளது! ஆனால், சேனாவரையர், பிறிதின் கிழமை மூன்று வகைப்படும் என்று கூறுகிறார் !பொருள் , நிலம், காலம் ஆகிய கிழமைகளில் இவை வரும் என்கிறார் அவர்:-

1 .பொருள்- ‘கபிலரது பாட்டு’ (சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
2 . நிலம் – ‘யானையது காடு’(சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
3 . காலம் – ‘வெள்ளியது ஆட்சி’ (ஆ.சிவலிங்கனாரின் எடுத்துக்காட்டு)
(வெள்ளிக்கோள் பற்றிய தொடர்களில் இப்படிப்பட்ட தொடர்கள் பயின்றன.)

‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபைத் தொல்காப்பியம் எவ்வளவு ஆழமாக ஆய்ந்துள்ளது பார்த்தீர்களா? வியப்பு! வியப்பு!
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Sun Aug 27, 2017 2:34 pm

என் மாடு , எனது மாடு - இவற்றில் எது சரி ?

திருமணப் பத்திரிகைகளில் " எனது மகனுக்கும் ...." என்று அச்ச்சிடுகிறார்கள் . அது சரியா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 27, 2017 3:21 pm

மிக்க நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே!
என் மாடு , எனது மாடு – இரண்டுமே சரிதான் !
எனது மகன் – இதுவும் சரிதான்! தொல்காப்பியத்து ‘முறைமைக் கிழமை’ இதில் பயிலுவதைக் காண்பீர்!
மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Sun Aug 27, 2017 5:08 pm

நான் கேள்விப்பட்ட வரையில் " என் " என்பது உயர்திணைக்கும், " எனது " என்பது அஃறிணைக்கும் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் .

" எனது மகன் " எனது மாடு " இவை இரண்டும் சரியென்று சொன்னால் , மகனும் மாடும் சமநிலை பெறுகின்றனர் . இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 28, 2017 9:07 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே! நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் ! நானும் அதைப் படித்துள்ளேன்! ‘அது’ பற்றிய தொல்காப்பியர் நூற்பாவில் ‘முறைமைக் கிழமை’ என வந்துள்ளதால், ’எனது மகன்’ தொல்காப்பிய விதிக்கு உட்பட்டதுதான் என நாம் மதிப்பிடலாம்!

மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (457)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 03, 2017 7:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (457)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ஏழாம் வேற்றுமை உருபு!:-

 “ஏழாகுவதே
 கண்ணெனப்  பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே” (வேற். 20)

‘ஏழு ஆகுவதே’ – ஏழாம் வேற்றுமை எனப்படுவது,
‘கண் எனப் பெயரிய’ – ‘கண்’ என்ற பெயர்கொண்ட’
‘வேற்றுமைக் கிளவி’ – வேற்றுமைச் சொல்;
‘வினைசெய் இடத்தின்’ – தொழில் நடைபெறும் இடத்தில்,
‘நிலத்தின்’ – இடத்தைக் குறிப்பிடும்போது,
‘காலத்தின்’ – காலத்தில் நடைபெறுவதைக் குறித்தலின்போது,
‘அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே’ – என்ற மூன்று நிலைகளில் தோன்றும் !

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1 . ’தட்டுப்புடைக்கண் வந்தான்’  (இந்த எடுத்துக்காட்டு  ‘வினைசெய் இடத்தில்’ என்பதற்கானது) ( தட்டுப்புடை என்ற தொழில், முறத்தால் பயிர்களைப் புடைத்தல் என்பதாகலாம் எனச் சிவலிங்கனார் குறிப்பு எழுதியுள்ளார். )
2 . ’மாடத்தின்கண் இருந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு  ‘நிலத்தில்’ என்பதற்கானது)
3 . ‘கூதிர்க்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு  ‘காலத்தின்’ என்பதற்கானது)s


அடுத்த நூற்பாவில் , ’கண்’ உருபினையும் அதனை  ஒத்த , பிற சொல் உருபுகளை யும் அடுக்குகிறார் தொல்காப்பியர்!:-

”கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை யெனாஅ
முன்னிடை கடைதலை  வலமிட மெனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார் ”  (வேற்.21)

இந் நூற்பா தரும் உருபுகள்!:-
1 . கண்
2 . கால்
3 . புறம்
4 . அகம்
5 . உள்
6 . உழை
7 . கீழ்
8 . மேல்
9 . பின்
10 .சார்
11 . அயல்
12 . புடை
13 . தேவகை
14 . முன்
15 . இடை
16 . கடை
17 . தலை
18 .வலம்
19 . இடம்

சேனாவரையர் உரைப்படி ‘கண்’ என்ற ஒன்றே ஏழாம் வேற்றுமை உருபு ! ஏனைய பதினெட்டும் , ஏழாம் வேற்றுமை ’உருபின் திறத்தன’!

‘கண்’ என்பதே 7ஆம் வேற்றுமையின் சூத்திரச் சொல்! அஃதாவது  , வாய்பாடு(Formula).
எடுத்துக்காட்டாக , ‘தோப்பயல் இருந்தான்’ என்று தொடர் உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள்! இங்கே ‘அயல்’ எந்த வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது என்பதை அறியக் ‘கண்’ணை வைத்துப் பாருங்கள்! ‘தோப்புக்கண் இருந்தான் ’ என்று வருகிறது! இதனால் பொருளில் மாற்றம் இல்லை! எனவே, ‘அயல்’ என்பது ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது எனத் தீர்மானிக்கலாம்! இவ்வாறு நாம் தீர்மானிக்க வசதியாகவே தொல்காப்பியர் பல ’வேறு உருபுக’ளைத் தந்துள்ளார் என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் !

இப்போது , கல்லாடனார் மேல் 19 உருபுகளுக்கும் (கல்லாடனார் பத்தொன்பதையும் ‘உருபுகள்’ என்றே எழுதுகிறார்!) தந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காணலாம்! :-
1 . கண் -  ‘ஊர்க்கண் இருந்தான்’(= ஊரில்  இருந்தான்)
2 . கால் – ‘ஊர்க்கால் இருந்தான்’ (= ஊரை அடுத்து  இருந்தான்)
3 . புறம் – ’ஊர்ப்புறத் திருந்தான்’ (= ஊரின் புறத்தே  இருந்தான்)
4 . அகம் – ’மாடத்தகத் திருந்தான்’ (=மாடத்தில் இருந்தான்)
5 . உள் – ’ஊருள் இருந்தான்’ (=ஊருக்குள் இருந்தான்)
6 . உழை – ’சான்றோருழைச் சென்றான்’ (=சான்றோரிடம் சென்றான்)
7 . கீழ் – ’மாடத்துக்கீழ் இருந்தான்’ (= மாடத்திற்கு அடிப்புறத்தே இருந்தான்)
8 . மேல் – ‘மாடத்து மேல் இருந்தான்’(= மாடத்திற்கு மேலே இருந்தான்)
9 . பின் – ‘ஏர்ப்பின் சென்றான்’  (= ஏரின் பின்னே சென்றான்)
10 . சார் -  ‘காட்டுச்சார் ஓடுங் களிறு’  (= காட்டுப்பக்கம் ஓடுகிற களிறு)
11 . அயல் – ‘ஊரயல் இருந்தான்’ (= ஊரை ஒட்டி இருந்தான்)
12.  புடை – ‘ஊர்ப்புடை இருந்தான்’  (= ஊரின் பக்கத்தே இருந்தான்)
13 . தேவகை – ‘வடக்கண் வேங்கடம்’ (= வடக்குத் திசையில் வேங்கடம்)
14 . முன் -  ‘தேர்முன் சென்றான்’ (=தேருக்கு முன்னே சென்றான்)
15 . இடை – ‘சான்றோரிடை யிருந்தான்’ (=சான்றோர் நடுவே இருந்தான்)
16 . கடை – ‘கோயிற்கடைச் சென்றான்’ (= கோயிலுக்குச் சென்றான்)
17. தலை – ‘தந்தைதலைச் சென்றான்’ (= தந்தையிடம் சென்றான்)
18. வலம் – ‘கைவலத்துள்ளது கொடுக்கும்’ (= கையிலே உள்ளதைக் கொடுப்பார்)
19 . இடம் – ‘கையிடத்துப் பொருள்’ (= கையிலே உள்ள பொருள்)

கல்லாடனார் , ‘தேவகை’ என்பதைத் ’திசைக் கூறு’ எனக் கொண்டு , மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டைத் தந்துள்ளார். தொல்காப்பியரின் ‘அன்ன பிறவும்’ என்பதில் , ‘தேஎம்’ என்ற உருபைக் காட்டினார் கல்லாடனார்; இதே ‘தேஎம்’ என்ற சொல்லையே ,  ‘தேம்’ என்றார் தெய்வச்சிலையார். ’தேஎத்து’ என்ற சொல்லின் பகுதியாகத் ‘தேம்’ என்பதையே இன்றைய மொழியிலார் காட்டுகின்றனர்.

இறையனார் களவியலிலும் , சங்க இலக்கியத்திலும் ‘தேஎத்து’ , ‘தேயத்து’ என்ற வடிவங்கள் ‘கண்’ வேற்றுமை உருபுப் பொருளிலேயே வருகின்றன; ‘திசை’ என்ற பொருளில் வரவில்லை!

இலக்கணக் கொத்து என்ற நூலில் சுவாமிநாத தேசிகர் (கி.பி.17ஆம் நூ.ஆ.) உருபை மூன்று வகைகளாகக் காட்டுகிறார் :-
1 . உருபு
2 . வேறு உருபு
3 . சொல்லுருபு

ஆனால் இவற்றை அவர் விளக்கவில்லை!

 இலக்கொத்தின்படி,தொல்காப்பியர் கூறிய ‘கண்’ என்பதை நாம் ’உருபு’ எனக் குறிக்கலாம்; ’கால்’ முதல் ‘இடம்’ வரையானவற்றை ‘வேறு உருபுகள்’ என்ற வகையில் அடக்கலாம்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (TVU), ‘வீடு வரை போனான்’ என்ற தொடரில் ‘வரை’ என்பது சொல்லுருபாகும் என்கிறது;  பெயர்சொல்லின் ஈற்றில் இணைந்து நிற்காமல் தனித்து நிற்பதால் ‘வரை’ யைச் சொல்லுருபு என அது  விளக்குகிறது.இதன்படி -

‘அதன் நிமித்தம்’ – இங்கே ’நிமித்தம்’, சொல்லுருபு.
‘அதன் பொருட்டு’ – இங்கே ’பொருட்டு’, சொல்லுருபு.
எனச் சில எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம்.

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (458)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 09, 2017 8:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (458)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , வேற்றுமையியலின் அடுத்த நூற்பா!:-

 “வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
  ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து
  பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்    
  எல்லாச் சொல்லும் உரிய வென்ப”             (வேற்.22)

‘வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை’ -  வேற்றுமைப் பயன் இன்னது என்று ஒரு தொகையை விரித்துப்  பேசும்போது,
‘ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து’ – முதற்சொல்லின் ஈற்றிலே அந்த வேர்றுமையானது நிற்கும் !
‘பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்’ -  வேற்றுமையை உருபோடு சொல்லினும், உருபானது மறையச் சொல்லினும்  , பொருளானது ஒன்றாகவே வரும் !

‘மரங் குறைத்தான்’ – இது வேற்றுமைத் தொகை. (வேற்றுமை உருபு மறைந்து வருவதைக் காண்க)

‘மரத்தைக் குறைத்தான்’ – இது வேற்றுமை விரி. (ஐ- வேற்றுமை உருபு வெளிப்பட நிற்பதைக் காண்க)
-
ஆனால் இரண்டு இடத்தும் பொருள் ஒன்றே!இரண்டும் வேற்றுமைப் பொருள் கொண்ட தொடர்களே!
மேலை எடுத்துக்காட்டில் ‘மரம்’ என்ற சொல்லின் ஈற்றிலேதான் வேற்றுமை உருபு(ஐ) நின்றதையும் நோக்கலாம் !

‘ஈற்றுநின்று இயலும்’ என்பதை மேலும் விளக்கவேண்டும் !

‘தாழ்குழல் வந்தாள்’ – இதில், வேற்றுமை உருபு எங்கே மறைந்து நிற்கிறது? ‘தாழ்குழல்’ என்பதன் ஈற்றிலே மறைந்து நிற்கிறது !

‘தாழ்குழல் வந்தாள்’ – இதனை விரித்தால், ‘தாழ்குழலை உடையவள் வந்தாள்’ என விரியும் !   ‘தாழ்குழல்’ என்பது , தாழ்குழலை உடையவளைச் சுட்டுவதால் , இதனை  ‘அன்மொழித்தொகை’ என்கிறோம் !  ‘தாழ்குழல்’ என்பது தொகை; ஆனால் , இதற்குப் புறத்தே சென்று ‘ தாழ்குழலை உடையவள்’ என்ற பொருளை நாம் எடுப்பதால், ‘அன்மொழித்தொகை’ ஆகிறது.
     
அன்மொழித் தொகை = அல்+ மொழி+ தொகை

அல் – அல்லாத ; அஃதாவது சொல்லில் அல்லாத;  ‘புறத்தே’ என வந்த  மேலை விளக்கத்தைக் காண்க!

இத்துடன் வேற்றுமை இயல் முடிந்தது.
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (459)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 17, 2017 9:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (459)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது-
வேற்றுமை மயங்கியல் !

ஒரு வேற்றுமை உருபுக்குப் பதிலாக இன்னொரு வேற்றுமை வரும்போது ஏற்படும் பொருள் மாற்றங்களைக் கூறும் இயல் இது !

வேற்றுமை இயலின் முதலாம் நூற்பா! –
“கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை”  (வேற். மயங். 1)

‘கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு ’ -  உடம்பால்  செயற்பாடு இல்லாத  ‘சார்பு’ எனும் சொல்லுக்கு,
‘உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை’ -  ‘கண்’ எனும் வேற்றுமை உருபு வருவதும் உண்டு !

சுவற்றைச் சார்ந்தான் – இதில் உடம்பின் செயல் உள்ளது!
தூணைச் சார்ந்தான் -   இதில் உடம்பின் செயல் உள்ளது!

ஆனால்,
‘அரசனைச் சார்ந்தான்’ – இதில் உடம்பின் செயற்பாடு இல்லை ! அஃதாவது , அரசன் மீது உடம்பைச் சார்த்துதல் இல்லை !  தூணின் மீது சாய்வது போல அரசன் மீது சாய்வது இல்லையல்லவா? இதுவே கருமம் அல்லாச் சார்பு!

தூணைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு
சுவற்றைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு

1 . அரசரைச் சார்ந்தான் -  கருமம் அல்லாச் சார்பு ; இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)வந்தது !  
2 .  அரசர்கட்  சார்ந்தான் -  கருமம் அல்லாச் சார்பு ; இங்கே எட்டாம் வேற்றுமை உருபு ( ‘கண்’)வந்தது !  
-
இந்த இரண்டு தொடர்களுக்கும் பொருள் ஒன்றே!

இவற்றில் , ‘ஐ’யும் வரலாம்  ‘கண்’ணும் வரலாம் என்ற நிலை உள்ளதல்லவா? இதுதான் வேற்றுமை மயக்கம் என்பது!

இனி , வேறுமை இயலின் இரண்டாம் நூற்பா!-
“சினைநிலைக் கிளவிக்கு ஐயுங் கண்ணும்
 வினைநிலை  யொக்கும் என்மனார் புலவர்” (வேற். 2)

இந்தச் சூத்திரமும் இரண்டாம் வேற்றுமை வரத்தக்க  எந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை வரலாம் என்பதைத்தான் சொல்கிறது !

சினைநிலைக் கிளவிக்கு ‘ -சினை பற்றிய சொல்லுக்கு,
‘ஐயும் கண்ணும்’ – ’ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபும், ‘கண்’ எனும் ஏழாம் வேற்றுமை உருபும்,
‘வினைநிலை  ஒக்கும் என்மனார் புலவர்’ -  தம்முள் ஏதாவது ஒன்று வந்தாலும், பொருள் மாறாது  என்பார்கள் புலவர்கள் !

‘கோட்டைக் குறைத்தான்’ =  கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘ஐ’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)
‘கோட்டின்கட்  குறைத்தான்’ =  கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘கண்’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)

‘ஐ’ உருபு வந்தாலும் , ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்பதைக் கவனிக்க!
                                   ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 28 of 29 Previous  1 ... 15 ... 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum