புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேக மலர் Poll_c10விவேக மலர் Poll_m10விவேக மலர் Poll_c10 
21 Posts - 66%
heezulia
விவேக மலர் Poll_c10விவேக மலர் Poll_m10விவேக மலர் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேக மலர் Poll_c10விவேக மலர் Poll_m10விவேக மலர் Poll_c10 
63 Posts - 64%
heezulia
விவேக மலர் Poll_c10விவேக மலர் Poll_m10விவேக மலர் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
விவேக மலர் Poll_c10விவேக மலர் Poll_m10விவேக மலர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விவேக மலர் Poll_c10விவேக மலர் Poll_m10விவேக மலர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேக மலர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 11:00 pm

விவேக மலர் V142vi10


பிரார்த்தனை மூலம் இறைவனோடு நெருங்கி இருப்பதைவிட, மன மகிழ்ச்சியாலும், புன்முறுவலாலும் நீங்கள் கடவுளிடம் இன்னும் அதிகமாக நெருங்கி இருப்பீர்கள். சோர்ந்திருக்கும் சோம்பல் மனத்தால் எப்படி அன்பு காட்ட இயலும்? அவர்கள் அன்பைப் பற்றிப் பேசினால் அது பொய்யே தவிர வேறில்லை. அவர்கள் மற்றவர்களைப் புண்படுத்த விரும்புகிறார்கள். மத வெறியர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் முகங்களை எவ்வளவு சோகமாக வைத்துக்கொள்ள முடியுமோ, அப்படி வைத்துக் கொள்ளுகிறார்கள். சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுடன் வாதிடுவதுதான் அவர்களுடைய சமயம். வரலாற்றிலிருந்து அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று சற்று எண்ணிப் பாருங்கள். இப்பொழுது அவர்களை அவ்வாறே விருப்பப்படி நடக்க அனுமதித்தால் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! அதன் மூலமாகத் தங்களுக்கு அதிகாரம் கிடைக்குமென்றால் அவர்கள் நாளையே உலகம் முழுவதையும் இரத்த வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள். ஏனெனில் ஆன்மாவின் அத்தகைய இருளடைந்த நிலையே அவர்களுடைய கடவுள். இத்தகைய பயங்கர இருளை வணங்குவதாலும், தங்கள் முகங்களைச் சோகமாக வைத்துக் கொள்வதாலும் அவர்களுடைய நெஞ்சங்களில் அன்பின் எவ்விதச் சின்னமும் இல்லாது போகிறது. யார் மீதும் அவர்கள் இரக்கம் காட்டுவதேயில்லை. ஆகவே எப்பொழுதும் துக்ககரமான நிலையில் உள்ளவன் ஆண்டவனை ஒருநாளும் அணுகான். இது சமயமன்று. 'நான் துக்ககரமாக இருக்கிறேன்' என்று சொல்லுவது பிசாசுத்தமானது. ஒவ்வொருவனுக்கும் சுமக்க, அவனுடைய சுமை உள்ளது. நீங்கள் துக்ககரமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள்.

அதே சமயம் நீங்கள் அளவுக்கு மீறிய களிப்பையும் (உத்தர்ஷம்) தவிர்க்க வேண்டும். இந்நிலையில் இருக்கும் மனத்தில் அமைதி தோன்ற முடியாது; அது சஞ்சல நிலையில் இருந்து கொண்டிருக்கும். எப்பொழுதும் மிதமிஞ்சிய களிப்புக்குப் பின்னால் இருப்பது துன்பம்தான். கண்ணீர்த் துளிகளும், சிரிப்பொலியும் மாறி மாறி வருவன. மக்கள் பெரும்பாலும் மனத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு ஓடுகின்றனர். மனம் மகிழ்ச்சியுடன் விளங்கட்டும், ஆனால் அதே வேளையில் நிம்மதியாக இருக்கட்டும். மிதமிஞ்சிய நிலையை அடைய ஒருபோதும் அதை விட்டு விடாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மிதமிஞ்சிய நிலைக்கும் எதிர் நிலை உண்டு.

மிக்க இன்பத்தோடு இடையிடையே உறுமிக் கொண்டு தின்னும் பன்றியைப் பாருங்கள். அவ்வளவு திருப்தியோடு உண்கிற எந்த மனிதனும் இவ்வுலகில் பிறக்கவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகளின் செவிப்புலன் ஆற்றலையும், காணும் ஆற்றலையும் நினைத்துப் பாருங்கள். அவற்றின் புலன் ஆற்றல்கள் நன்கு வளர்ந்துள்ளன. அவற்றின் புலனின்பம் வரம்பு கடந்தது. இன்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும் அவை பித்தேறி விடுகின்றன. மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவ்வளவுகவ்வளவு புலனின்பத்தில் திளைக்கிறான். அவன் மேலே உயர உயர, பகுத்தறியும் தன்மையும் அன்பும் அவன் வாழ்க்கையின் குறிக்கோளாய் அமைகின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஈடாக அவனது புலனின்ப நாட்டம் குறைகிறது.

இதை ஒரு உதாரணம் கூறி விளக்குகிறேன். ஒருவனுக்குக் குறிப்பிட்ட அளவு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை அவன் உடல், உள்ளம், ஆன்மா இவற்றிற்காகச் செலவு செய்யலாம் என்றும் கொண்டால், இவற்றுள் ஏதாவது ஒன்றுக்கு அவன் எவ்வளவு சக்தி செலவிடுவானோ, அந்த அளவிற்குக் குறைவாக மற்றவற்றுக்குச் செலவிட வேண்டி வரும். அறிவற்ற காட்டு மிராண்டி மக்களுக்கு நாகரிக மக்களை விடப் புலனின்ப நுகர் ஆற்றல்கள் மிக நுட்பமானவை. வரலாற்றில் இருந்து நாம் அறியும் உண்மை என்னவென்றால், ஒரு சமுதாயம் நாகரிகம் அடைய, அதன் நரம்பு மண்டலம் நுட்பமடைகிறது; அதனால் மக்கள் பலவீனமடைகிறார்கள் என்பதே. ஒரு காட்டுமிராண்டி இடத்தை நாகரிகமாக்கிப் பாருங்கள்; இந்த நிலையைத்தான் காண்பீர்கள். இன்னொரு காட்டுமிராண்டி இனத்தினர் தோன்றி அவர்களை வெற்றி கொள்வார்கள். காட்டுமிராண்டிகளே எப்பொழுதும் வெற்றி பெறுகிறார்கள். எனவே எந்நேரமும் புலனின்பத்தையே பெற நாம் விரும்பினால் நாம் விலங்கின் நிலைக்கு இழிந்து விடுவோம். ஒருவன் புலனின்பத்திற்காக ஓரிடத்திற்குப் போக வேண்டுமென விரும்பினால், அவன் அழிவை நாடுகிறான் என்பது அவனுக்குத் தெரிவதில்லை. விலங்கு நிலைக்குச் சென்றால்தான் அதை அவன் பெறமுடியும். பன்றி, தான் அசுத்தமான பொருளை உண்தாக ஒரு போதும் எண்ணுவதில்லை. அதுதான் பன்றிக்குச் சுவர்க்கம். மிகப் பெரிய தேவதையே வந்தால்கூடப் பன்றி அதை ஏறெடுத்தும் பார்க்காது. அதன் உலக வாழ்க்கை முழுவதும் உண்ணுவதிலேதான் உள்ளது.

புலனின்பத்தை, சுவர்க்கத்தை மிக விரும்பும் மக்கள் நிலையும் இத்தகையதே. அவர்கள் பன்றிகள் போன்று சிற்றின்பச் சேற்றில் புரண்டு கொண்டு அதற்கப்பால் எதையும் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் புலனின்பம்தான். அது போனால் அவர்களுக்கு சுவர்க்கமே போனது போல. இத்தகையோர் ஒரு நாளும் உயர்ந்த பக்தர்களாக இருக்க இயலாது. ஆண்டவனிடம் உண்மையில் அன்பு காட்டுகிறவர்களாகத் திகழ இயலாது. எனினும், சிறிது காலம் இந்தக் கீழான இலட்சியத்தின் படி ஒழுகிற பிறகு நாளடைவில் இந்நிலையில் மாறுதல் ஏற்படும். ஒவ்வொருவனும் தனக்குத் தெரியாத உயர்ந்த ஒன்று உள்ளது என்பதைக் காண்பான். அதைப் புரிந்துகொண்டதும் அவனிடம் முன்பு இருந்த உயிரின் மீது பற்றும், புலன்களின்மேலுள்ள பற்றும் மெதுவாக மறைந்துவிடும்.

குழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்று இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு, நாம் படிப் படியாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்தப் படிப்பினையையும் பெறுவதில்லை. ஏதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலையிலோ கட்டுப்பட்டு விடுகிறோம். சிலர் இந்த வலையிலிருந்து விடுபடுகிறார்கள்.

அடுத்த தகுதி உண்மையான அறிவு வேட்கை. ஆனால் இதை யார் வேண்டுகிறார்கள்? அதுதான் கேள்வி. நாம் வேண்டுவதை அடைகிறோம் என்பது மிக மிகப் பழமையான ஒரு உண்மை. எவன் எதை வேண்டுகிறானோ அவன் அதை அடைகிறான். சமயத்தை வேண்டுவது மிகக் கடினமான காரியம். நாம் பொதுவாக எண்ணுவதுபோன்று, அவ்வளவு எளிதன்று சமயம். பிரசங்கங்களைக் கேட்பதோ, நூல்களைப் படிப்பதோ அன்று சமயம் என்பதை நாம் எப்பொழுதும் மறந்து விடுகிறோம். ஆக தொடர்ந்து போராடுவது; வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து போராடுவது. அது ஒரு நாள், இரண்டு நாள் போராட்டமோ, பல வருடம் அல்லது பல பிறவிப் போராட்டமோ அன்று. அது நூற்றுக் கணக்கான பிறவிகள் கூட நீடிக்கலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். அது உடனேயே கிட்டலாம்; நூற்றுக்கணக்கான பிறவிகளுக்குப் பிறகு கிட்டாமலும் இருக்கலாம். நாம் இதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும். இத்தகைய மன உறுதியுடன் தொடங்கும் சீடன், முடிவில் வெற்றி காண்கிறான்.

குரு விஷயத்தில், சமய நூல்களின் உட்கருத்தை அவர் அறிந்திருக்கிறாரா என்று நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். உலகம் முழுவதும் பைபிள், வேதம், குர்-ஆன் என்று பல சமய நூல்களை மக்கள் படிக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் வெறும் வார்த்தைகள்; இலக்கணத் தொடர்கள் - சொற்றொடரிலக்கணங்கள், சொல்லிலக்கணங்கள், தத்துவங்கள் - அதாவது சமயத்தின் உலர்ந்த எலும்புகள். குரு ஒருவன், ஒரு நூலின் வயதைக் கண்டு பிடிக்கலாம். ஆனால் கருத்துக்களின் வெளித் தோற்றங்கள்தான் வார்த்தைகள். வார்த்தைகளில் அதிகம் ஈடுபடுகிறவர்கள், வார்த்தைகளின் வேகத்தில் மனத்தை ஓடவிடுகிறவர்கள், அவற்றின் பொருளை இழந்துவிடுகிறார்கள். ஆகவே குரு சமய நூல்களின் உட்பொருளை அறிந்திருக்க வேண்டும். வார்த்தைகளால் பின்னப்பட்ட வலை ஒரு பெரிய காடு போன்றது. அதில் மனித உள்ளம் சிக்கிக் கொண்டு, வெளியே வரமுடியாமல் தவிக்கிறது. சொற்களைப் பலவிதமாகச் சேர்ப்பது, ஒரு அழகிய மொழியைப் பல விதங்களில் பேசுவது, சமய நூல்களின் நடையைப் பலவிதங்களில் விளக்குவது-இவையெல்லாம் படித்தவர்கள் இன்புறுவதற்காகவே உள்ளன.

இவை நம்மை பூரணத்துவத்திற்கு எடுத்துச் செல்லாது. உலகம் தங்களைக் கற்றோர்கள் எனக் கருதிப் புகழட்டும் என்பதற்காக, அவர்கள் தங்கள் அறிவை வெளிக்காட்ட விருப்பம் கொண்டவர்களாய் இப்படியெல்லாம் செய்கிறார்கள். உலகத்தின் உண்மையான ஆசான்களில் ஒருவர்கூட இப்படிப் புத்தகங்களைப் பல முறைகளில் விளக்க முற்பட்டதில்லை. அவர்கள் பலவாறாக நூல்களைத் திரித்துக் கூறவில்லை. 'இந்தச் சொல்லிற்கு இதுதான் பொருள். தத்துவ முறைப்படி இந்தச் சொல்லுக்கும் அந்தச் சொல்லுக்கும் இதுதான் தொடர்பு' என்றெல்லாம் சொல்லவில்லை.

உலகம் தந்துள்ள மிகப் பெரிய ஆசான்களையெல்லாம் ஆராய்ந்து பாருங்கள். அவர்களில் ஒருவர் கூட இப்படிச் செய்ததில்லை. ஆனாலும்கூட, அவர்கள் போதித்தார்கள். போதிப்பதற்கு ஒன்றுமில்லாத மற்றவர்களோ, ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு, 'அது எப்படித் தோன்றிற்று? அதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார்? அவர்கள் என்ன உண்டார்கள்? எப்படித் தூங்கினார்கள்?' என்பன குறித்து, மூன்று பகுதிகள் கொண்ட ஒரு நூல் எழுதுவார்கள்.

என் குருநாதர் ஒரு கதை சொல்லுவார்: சிலர் ஒரு மாந்தோப்பிற்குச் சென்றனர். அக்குழுவில் பெரும்பாலோர் இலைகளை எண்ணுவதிலும், அவற்றின் நிறத்தைக் கவனிப்பதிலும், கொழுந்துகளின் அளவு கண்டுபிடிப்பதிலும், கிளைகளை எண்ணுவதிலும் முனைந்திருந்தனர். இவற்றைப் பற்றிக் குறிப்புகளும் எழுதிக் கொண்டனர். பிறகு ஒவ்வொன்றைப் பற்றியும் மிகுந்த வியப்புடன் வாதாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுள் அறிஞர் ஒருவர் தனியே அமர்ந்து, மாம்பழத்தைத் தின்று கொண்டிருந்தார். இவர்களுள் யார் கெட்டிக்காரர்.

இலைகளை, கொழுந்துகள் இவற்றை எண்ணுதல், குறிப்புகள் எழுதுதல் ஆகியவற்றை மற்றவர்களின் கவனத்திற்கு விட்டுவிடுங்கள். உரிய இடத்தில் இத்தகைய காரியங்களுக்கு மதிப்பு உண்டு. ஆனால் ஆன்மிகத் துறையில் அதற்கு இடம் இல்லை. இத்தகைய அலுவல்களினால் மனிதன் ஆன்மிகத்தைப் பெற இயலாது. இந்த இலை எண்ணுகிறவர்கள் மத்தியில் ஓர் உறுதியான ஆன்மிக மனிதனை நீங்கள் ஒரு நாளும் காணமுடியாது.

சமயம்தான் மனிதனின் மிக உயர்ந்த இலட்சியம்; மிக உயர்ந்த பெருமை. அதே சமயம் மிக எளிதானதும்கூட. அதற்கு ''இலை எண்ணுதல்'' தேவை இல்லை. நீங்கள் கிறிஸ்துவாக இருக்க விரும்பினால், 'கிறிஸ்து எங்கே பிறந்தார்? ஜெருசலேமிலா? பெத்லகேமிலா? அவர் தம் மலைமேல் பிரசங்கத்தை எந்தத் தேதியில் ஆற்றினார்?' என்றெல்லாம் தெரிய வேண்டியது அவசியமில்லை. மலைமேல் பிரசங்கத்தை நீங்கள் உணரவேண்டும். அதுதான் தேவை. அது என்று ஆற்றப்பட்டது என்பதைத் பற்றி இரண்டாயிரம் வார்த்தைகளை படிக்கத் தேவையில்லை. இவை எல்லாம், படித்தவர்கள் இன்புறுவதற்காக வைத்துக் கொள்ளட்டும். அதற்கு வாழ்த்துக் கூறிவிட்டு, நாம் மாங்கனிகளைத் தின்போமாக!

குருவிடம் இருக்கவேண்டிய இரண்டாவது தகுதி, அவர் பாவமற்றவராய் இருக்கவேண்டுமென்பது. இங்கிலாந்தில் உள்ள என் நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம், ''நாம் ஆசிரியரின் நடத்தையை கவனிக்கவேண்டுமா, அல்லது அவர் சொல்லுவதை மட்டும் ஆராய்ந்து அதன்படி ஒழுகவேண்டுமா?'' என்று கேட்டார். இது அப்படி அல்ல. ஒருவர் எனக்கு இயற்பியலையோ, வேதியியலையோ, அல்லது வேறு அறிவியலையோ கற்பிக்க விரும்பினால், அவருடைய ஒழுக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவரால் அப்பொழுதும் இயற்பியலையோ வேறு அறிவியலையோ கற்பிக்க முடியும். ஏனெனில் அறிவயலுக்குத் தேவையான அறிவு மூளையைப் பற்றியது; மூளையின் நுட்பத்தைப் பற்றியது. இத்தகைய விஷயங்களில், ஆன்மா ஒரு சிறிதுகூட முன்னேற்றமடையாமல் இருப்பினும், மிகச் சக்தி வாய்ந்த அறிவாற்றல் ஒருவனிடம் இருக்கமுடியும்.

ஆனால் ஆன்மீக இயலில், தூய்மையற்ற ஆன்மாவில் ஆன்ம ஒளி இருப்பது முதலிலிருந்தே முடியாத காரியம். அதனால் அவர் எதைக் கற்பிக்க முடியும்? அவருக்கு ஒன்றும் தெரியாது. பரிசுத்தம்தான் ஆன்மிக உண்மை. இதயத்தில் சுத்தமானவர்கள் பேறு பெற்றவர்கள். அவர்கள் இறைவனைத் தரிசிப்பார்கள். சமயத்தில் சாராம்சம் முழுவதும் அந்த ஒரு வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை நீங்கள் அறிந்து கொண்டால், சமயத்தைப் பற்றி முன்பு சொல்லப்பட்ட எல்லாவற்றையும் அறிந்தவராவீர்கள்; இனி சொல்லப்போவது அத்தனையையும் அறிந்தவராவீர்கள். நீங்கள் வேறு எங்கும் தேட வேண்டாம். அந்த ஒரு வாக்கியத்தில் உங்களுக்குத் தேவையான அத்தனையும் இருக்கிறது. மற்ற எல்லாச் சமய நூல்களும் மறைந்து போனாலும் அந்த ஒரு வாக்கியம் மட்டுமே உலகத்தைக் காப்பாற்றிவிட முடியும்.

ஆன்மா பரிசுத்தமாக இருந்தாலன்றி, கடவுள் தரிசனமோ, எல்லாம் கடந்த பரம்பொருளின் கணநேரக் காட்சியோ கிடைக்காது. அதனால்தான் ஆன்மிக குருவிடம் தூய்மை கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் என்று முதலில் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அறிவியல் ஆசிரியர்கள் விஷயம் இப்படியன்று. அங்கு, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விட அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்படுகிறோம். சமய குரு விஷயத்தில், அவர் எப்படி இருக்கிறார், அவர் பரிசுத்தமாக இருக்கிறாரா என்று முதன் முதலில் கவனிக்கவேண்டும். பிறகுதான் அவர் வார்த்தைகளுக்கு மதிப்பு ஏற்படும். ஏனெனில் அவர் ஆன்மிகத்தைப் பாய்ச்சுகிறார்.

அவரிடம் ஆன்மிக சக்தி இல்லாவிட்டால் அவர் எதைப் பாய்ச்சுவார்? உதாரணமாக வெப்ப அடுப்பில் வெப்பம் இருந்தால்தான் அது வெப்ப அலைகளை அனுப்ப முடியும்; இல்லாவிடில் முடியாது. அதேபோல குருவின் எண்ண அசைவுகள்தாம் சீடனின் மனத்தைப் போய் அடைகின்றன. அது ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாறுவதேயன்றி, நம்முடைய அறிவுச் சக்திகளைத் தூண்டுவதன்று. உண்மையானதும், நாம் அறியக்கூடியதுமான ஏதோ ஒன்று குருவிடமிருந்து சீடனுக்குப் போய்ச் சேர வேண்டும். ஆகவே முக்கியமான நிபந்தனை குரு உண்மையான வரும், பரிசுத்தமானவருமாக இருக்கவேண்டும்.

மூன்றாவது தகுதி அவருடைய நோக்கம். ஏதாவது ஓர் உள்நோக்கத்தோடு, அதாவது தம் பெயருக்கும், புகழுக்குமாக அவர் போதிக்கிறாரா, அல்லது அன்புக்காக, உங்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்புக்காக அவர் போதிக்கிறாரா என்று கவனிக்க வேண்டும். குருவிடமிருந்து சீடனுக்கு ஆன்மிக சக்திகள் அனுப்பப்படும் பொழுது அவற்றை அன்பின் மூலமாகத்தான் அனுப்ப இயலும். வேறு எதன் மூலமாகவும் அனுப்ப முடியாது. இலாபத்தைக் கருதியோ, புகழைக் கருதியோ செய்தால், அது உடனே அனுப்பப்படும் சாதனத்தை அழித்துவிடும். ஆகவே எல்லாம் அன்பின் மூலமாகத்தான் செய்ய வேண்டும். கடவுளை அறிந்தவர்தாம் குருவாக இருக்க முடியும். குருவிடம் இந்தக் தகுதிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்தில்லை; இல்லையேல் அவரிடம் கற்பது ஆபத்து விளைவிக்கும். நல்லதை அவரால் கொடுக்க முடியாவிட்டால், சில வேளைகளில் அவரிடமிருந்து கெட்டது கிடைக்கும் ஆபத்து இருக்கிறது. இது விஷயமாக நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதனால் நாம் எவரை வேண்டுமானாலும் குருவாக ஏற்றுக் கொள்ள இயலாது என்பது தெரிகிறது.

ஓடைகள் போதனை செய்கின்றன, கற்கள் போதனை செய்கின்றன, என்றெல்லாம் கூறுவது கவிநயத்தோடு விளங்கலாம். ஆனால் தன்னிடம் இம்மியளவாவது உண்மையில்லாதவன் போதனை செய்ய முடியாது. ஓடைகள் யாருக்கு போதிக்கின்றன? எந்த ஆத்மாவின் வாழ்க்கைத் தாமரை உண்மையான குருவிடமிருந்து கிடைக்கும் ஒளியினால் மலர்ந்து விட்டதோ, அதற்குத்தான் போதனை செய்ய முடியும். இதயம் திறக்கப்பட்டதும் அது ஓடைகளிலிருந்தும் போதனை பெறலாம்: கற்களிலிருந்தும் போதனை பெறலாம். ஆனால் திறவாத இதயம் ஓடைகளையும், உருளும் கற்களையும்தான் பார்க்கும்.

குருடன் ஒரு ஒரு பொருட்காட்சி சாலைக்கு செல்லலாம். ஆனால் அவனுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. முதலில் அவன் கண்கள் திறக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அவன் அங்குள்ளவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். சமயத்தைப் பொறுத்தமட்டில் கண்ணைத் திறப்பவர் குருதான்.

இந்தப் பலவகையான பிரதீகங்களில் மிகுதியாகக் காண்பது இறந்து போன நண்பர்களின் ஆவிகளை வழிபடுவதேயாம். நட்புணர்ச்சி என்பது மக்களின் இயல்பிலேயே வேரூன்றி உள்ளது. எனவே நம் நண்பர்கள் இறக்கும்போது நாம் அவர்களை மீண்டும் காண விரும்புகிறோம். அவர்களுடைய உருவங்களோடு ஒட்டிக் கொள்ளுகிறோம். அவர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களின் உடல் எப்பொழுதும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது என்பதை அறவே மறந்துவிடுகிறோம். அவர்கள் இறந்ததும் அவர்கள் ஒரே நிலையிலேயே இருப்பார்கள், அவர்களை அப்படியே பா¡ர்போமென்று நினைக்கிறோம். இது மட்டும் அன்று. எனது நண்பனோ, மகனோ உயிருடன் இருந்தபொழுது ஒரு பெருங் கயவனாயிருந்திருப்பான். ஆனால், அவன் மாண்டு போனதும் அவனைப் போல இவ் உலகத்தில் ஒரு ஞானியைப் பார்க்க முடியாதென்று எண்ணுகின்றோம். அவன் ஒரு தெய்வமாகிறான். இந்தியாவில் சிலர் குழந்தை இறந்தால், அதை எரிக்காமல் புதைக்கிறார்கள். பிறகு புதைத்த இடத்தில் ஒரு கோயிலை எழுப்புகிறார்கள். அந்தச் சிறிய குழந்தை அக்கோயிலின் கடவுளாகிவிடுகிறது. எல்லா நாடுகளிலும் இத்தகைய சமயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுதான் சமயத்தின் தொடக்கம் என்று நினைக்கும் தத்துவ ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. நிச்சயமாக அவர்களால் இதை நிரூபிக்க முடியாது. இந்த வகையான பிரதீக வழிபாடு நம்மை விடுதலைக்கோ, மோட்சத்திற்கோ அழைத்துச் செல்லாது என்பதை நாம் நன்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

ஒருவர், 'இவை யாவும் மனிதன் கடந்து செல்லும் படிகள்' என்று உரைக்கின்றார். ஆனால், வயது முதிர்ந்த பிறகுகூட அவன் இவற்றையே பற்றிக் கொண்டு நிற்பதை நாம் பார்க்கிறோம். ஓர் இளைஞன் கோவிலுக்குச் செல்லவில்லையென்றால், அவனைக் கண்டிக்க வேண்டும். ஆனால் ஒரு முதியோன் இன்னும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தால் அவனையும் கண்டிக்க வேண்டும். அந்தக் குழந்தை விளையாட்டில் இனி அவனுக்கு இடமில்லை. கோவில் அவனை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கவேண்டும். இந்த முதிய வயதில், உருவ வழிபாட்டால், பிரதீகம் போன்ற தொடக்க நிலை வழிபாட்டால் அவனுக்கு ஆவது ஒன்றுமில்லை.

இவ்வண்ணம் புத்தக வழிபாடு அமைகின்றது. ஒரு சமயம் நூலில் காணப்படும் எத்தனையோ பொய்களை ஏற்பார்கள். இந்தியாவில், எனது தனிப்பட்ட கருத்தென்று புதிதாக ஏதாவது ஒன்றைச் சொல்ல நான் விரும்பினால், அதை ஒருவரும் செவிமடுக்க மாட்டார்கள். ஆனால் வேதத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதியை எடுத்து, அதைப் பலவாறு திரித்து, அதற்குப் பொருத்தமே இல்லாத அர்த்தத்தைக் கற்பித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களை அழித்து என் கருத்துக்களை வேதங்கள் சொல்லும் கருத்துக்கள் என்று கூறினால், எல்லா முட்டாள்களும் கூட்டமாக என்னைப் பின் தொடர்வார்கள்.

இவ்விஷயத்தில் 'நாம் எதை நம்புகிறோம்' என்பது தான் நமக்கு மிக அவசியமானது. 'நாம் என்ன உணர்ந்துள்ளோம்?' என்பது தான் கேள்வி. ஏசுநாதரோ, புத்தரோ, மோஸஸோ என்ன செய்தார்கள் என்பது நமக்குப் பயனற்றது. நாம் அத்தகைய அனுபூதியைப் பெற வேண்டும். ஓர் அறையில் புகுந்து கதவை மூடிக்கொண்டு மோஸஸ் என்ன அருந்தினார் என்று நினைத்தால் அது உங்கள் பசியைப் போக்காது. அவ்வாறே அவர் என்ன நினைத்தார் என்பது உங்களைக் காப்பாற்றாது. இது விஷயங்களில் என் கருத்துகள் அடிப்படையானவை.

தன்னை உடலெனக் கருதுபவன் பிறப்பிலிருந்தே உருவத்தை வழிபடுபவன். நாம் ஆன்மா; உருவமோ வடிவமோ அற்ற ஆன்மாவே; முடிவற்ற ஆன்மாவே; ஜடப்பொருள் அல்ல. ஆதலால் சூட்சுமத்தை மனத்தாற் பற்ற இயலாதவன், ஜடப் உடலாகவன்றி ஆத்மாவாகக் கருத முடியாதவனே, உருவ வழிபாடு செய்பவன். உண்மை இப்படி இருக்க, மக்கள் ஒருவரையொருவர் உருவத்தை வழிபடுபவர் எனக் கூறித் தமக்குள்ளே போராடுவதை என்ன என்பது! வேறு வகையாக இதனைக் கூறவோமாயின், ஒவ்வொருவரும் தமது உருவமே சரியானதென்றும், பிறரது உருவம் தவறானதென்றும் கூறுகின்றனர், எனலாம்.

ஆதலால், சிறுபிள்ளைத்தனமாக கருத்துகளை நாம் களைந்தெறிதல் வேண்டும். ''சமயம் என்பது, மொழிகளின் வெறும் தொகுதி; கொள்கைகளின் அமைப்பு; ஒரு சிறிதளவு அறிவால் ஒன்றை ஒப்புக் கொள்ளுதலோ, மறுத்தலோ மட்டுமே; தம் சொந்தக் குருமார் நமக்குக் கூறும் சில மொழிகளில் நம்பிக்கை வைப்பதே; தம் முன்னோர் நம்பிய ஏதோ ஒன்று; தமது தேசத்திற்குரியவை எனும் காரணத்தால் தாம் பற்றி நிற்கும் ஒரு வகையான மூடக் கொள்கைகளும் கருத்துக்களுமே'' என்ற இத்தகைய மக்களின் பிதற்றலுக்கு அப்பால் நாம் செல்லவேண்டும். இவை அனைத்தையும் கடந்து சென்று, மனித இனத்தை, மெல்ல மெல்ல ஒளியை நோக்கிச் செல்லும் பரந்ததோர் உயிர் என்றும், கடவுள் என்னும் வியப்புக்குரிய மெய்ப் பொருளை நாட மெல்ல முதிர்ந்துவரும் ஓர் ஆச்சரியமான செடி என்று கருதவேண்டும். இதற்காக நேரும் தொடக்க முயற்சிகளும் முன்னேற்றங்களும் எப்போதும் ஜடப்பொருள் வாயிலாகவும், வழிபாடு வாயிலாகவும் நிகழ்வனவாகும்.

இவ்வழிபாடுகளுக்கு மையமாக அமையும் பல கருத்துகளுள் தலைசிறந்தது நாம வழிபாடேயாகும்.

இறைவன் எங்கும் உள்ளான். ஒவ்வோர் உயிரிலும் தம்மைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறான். ஆனால், மனிதனுக்கோ இறைவன் புலப்படுவதும் அறியப்படுவதும் மனிதனிடத்தே தான். மனிதன் வாயிலாக இறைவனது ஒளியும், இருப்பும், ஆன்மாவும் விளங்கும்போதுதான் - அப்போதே, அப்போது மட்டுமே, மனிதன் அவரை அறியமுடியும். ஆகவே, மனிதன் இறைவனை மனிதன் வாயிலாகவே எக்காலமும் வணங்கி வந்துள்ளான்; அவன் மனிதனாயுள்ள வரையில் அவ்வாறே செய்து தீரவேண்டும்

நம்முடையவை என்றும், நமக்கு மட்டும் உரியவையென்றும் நாம் எண்ணி வந்துள்ள அதே கருத்துகள் நூற்றுக் கணக்கான ஆண்டுகட்கு முன்பே பிறரிடத்தும் தோன்றியிருந்தன. சில சமயம் நம்முடையதைவிட மிகச் சிறந்த முறையிலே வெளியிடப்பட்டிருந்தன.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெரிய நூல் எழுதத் துடிக்கிறான். தனக்குக் கிட்டும் ஒவ்வொரு நூலினின்றும் தனக்கு வேண்டிய பொருள்களைத் திருடிச் சேர்த்துத் தன்நூலை இயன்றமட்டும் பெரிதாக்குகிறான். எனினும், தான் பிறர்க்குக் கடன்பட்டிருப்பதை ஒருபோதும் ஒப்புக் கொள்வதில்லை. பின்னர் அந்நூலை உலகிலே பரப்பி, ஏற்கனவே அங்குள்ள குழப்பத்தை மேலும் அதிகமாக்குகிறான்.

மக்களில் பெரும்பாலோர் நாஸ்திகரே. இக்காலத்திலே மேல் நாடுகளில் ஒவ்வொருவகை நாஸ்திகர் தோன்றியிருப்பது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். நான் குறிப்பிடுவது லோகாயதர்களையே. அவர்கள் நேர்மையான நாஸ்திகரே. நேர்மையற்றவர்களாகவும், சமயத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டு, அதைப் பற்றிப் பேசிக் கொண்டு, ஆனால் அதனை விரும்பாத, அதனை உணர்ந்தறிய ஒருபோதும் முயலாத, அதனைப் புரிந்து கொள்ள முயலாத சமயத்துறை நாஸ்திகர்களை விட அவர்கள் மேலானவர்களே. கிறிஸ்துவின் மொழிகளை நினைவுறுக: ''கேள், உனக்கு அளிக்கப்படும்; தேடு, அதனை நீ காண்பாய்; தட்டு, உனக்கு திறக்கப்படும்'' என்ற இம்மொழிகள் அப்படியே உண்மையானவை. இவற்றில் கற்பனையோ கதையோ இல்லை. இவ்வுலகிலே இதுவரை தோன்றியுள்ள இறைவனின் மிகச் சிறந்த மைந்தர் ஒருவரது நெஞ்சக் குருதியின் வெளிப் பெருக்கமே இவை.

என் மனைவி உலக முழுவதிலுமிருந்தும் சாமான்களை வரவழைத்து வரவேற்புக் கூடத்தில் வைத்திருக்கிறாள். ஜப்பானியப் பொருள் சிலவற்றை வைத்திருத்தலே நாகரிகம் என்று கருதப்படுவதால் அந்நாட்டு அழகான ஜாடி ஒன்றை வாங்கித் தன் அறையில் வைக்கிறாள். சமயமும் பெரும்பாலார்க்கு இத்தகையதே. இன்ப நுகர்ச்சிக்கு வேண்டிய எல்லா விதமான பொருள்களும் அவர்களிடம் உள்ளன, சமயவாசனையையும் ஒரு சிறிது சேர்த்தாலன்றி வாழ்வு முற்றும் சரியாகாது. ஏனெனில், சமுகம் அவர்களை அதற்காகக் குறை கூறும். அந்த நிலையைத்தான் சமூகம் எதிர்பார்க்கிறது. ஆதலின் அவர்களுக்குச் சமயமும் ஓரளவு இருந்தே தீர வேண்டும். உலகிலே இக்காலத்தின் சமயத்தின் நிலை இதுவே.

ஏதாவது ஒன்றைப் பெறுவதற்காகவே ஒருவனிடம் அன்பு செய்வதைக் காணும்போது அது அன்பன்று என்பதை அறிக; அது வியாபாரமாகும். வாங்கலும் விற்றலும் பற்றிய பேச்சு எங்கெல்லாம் சற்றேனும் அடிபடுகிறதோ, அங்கே அது அன்பன்று. ஆதலால், ஒருவன் இறைவனிடம், ''எனக்கு இதைக் கொடு; அதைக் கொடு'' என்று வேண்டுவது அன்பாகாது.

அன்பின் முதற்சோதனை, அதில் ஒப்பந்தம் ஒன்றும் இல்லாமையே. அன்பு எப்போதும் கொடுப்பதன்றிக் கொள்வதை அறியாது. ''இறைவனுக்கு விரப்பமாயின், என்னிடமுள்ள ஒவ்வொன்றையும் அவருக்கு அளிப்பேன்; ஆனால் அவரிடமிருந்து ஒன்றையும் வேண்டேன். அவர்மீது அன்பு செலுத்தும் விருப்பத்தாலேயே அவரை நான் நேசிக்கிறேன்; கைம்மாறாக நான் ஒன்றையும் விரும்பேன்.

அன்பு அச்சமறியாதது. ஒரு கையிற் பரிசுகளும், மற்றொன்றில் தண்டனைகளும் வைத்துக்கொண்டு மேகமண்டலத்திற்கும் அப்பால் அமைந்துள்ள ஒரு தேவராக இறைவனை மனிதன் நினைக்கும்வரை, அன்பு என்பது எழ இயலாது. பயமுறுத்தி ஒருவரிடம் அன்பை எழுப்ப முடியுமா? ஆடு சிங்கத்தின் மீது அன்பு செலுத்துமா? சுண்டெலி பூனையை நேசிக்குமா? அடிமைக்கு ஆண்டவனிடம் அன்பு உண்டா? அடிமைகள் அன்பு செய்வதாகச் சில சமயம் நடிப்பார்கள். ஆனால் அது அன்பாகுமா? அச்சத்திலே அன்பை என்றேனும் கண்டதுண்டா? அது எப்போதும் பொய்யானதே. அன்புள்ள இடத்தில் ஒருபோதும் அச்சம் தோன்றாது. வீதியிலே ஒரு இளம் பெண் நிற்கிறாள். ஒரு நாய் அவளைப் பார்த்துக் குரைக்குமானால், மிகவும் அருகாமையிலுள்ள ஓர் இல்லத்திற்கு அவள் ஓடுவாள். மறுநாள் குழந்தையோடு அவள் வீதியில் நிற்கிறாள். ஒரு நாய் அவளைப் பார்த்துக் குரைக்குமானால், மிகவும் அருகாமையிலுள்ள ஓர் இல்லத்திற்கு அவள் ஓடுவாள். மறுநாள் குழந்தையோடு அவள் வீதியில் நிற்கிறாள். ஒரு சிங்கம் குழந்தை மீது பாயுமாயின், அவளது இடம் எங்கே? தன் சேயினைக் காக்கச் சிங்கத்தின் வாயிலன்றோ இடம் பெறுவாள்? அன்பு அவளது அச்சமனைத்தையும் வென்றது. இத்தகையதே இறைவன் மீதுள்ள அன்பும். இறைவன் பரிசளிப்பவரா தண்டனை தருபவரா என்பதைப் பற்றிக் கவனிப்பார் யார்? அன்பரின் நினைவு அதுவாகாது. நீதிபதி ஒருவர் தனது இல்லத்திற்குத் திரும்பவுதாக வைத்துக்கொள்வோம். அப்போது அவர் மனைவி அவரிடம் காண்பது எதனை? நீதிபதியை அன்று: பரிசளிப்பவரையோ, தண்டனை கொடுப்பவரையோ அன்று; அவள் காண்பது தன் கணவரையே; தனது அன்பையே. அவருடைய குழந்தைகள் அவரிடம் காண்பது யாது? தங்கள் அன்புடைய தந்தையையே. தண்டிப்பவரையோ, கொடையளிப்பவரையோ அல்ல. அதுபோன்றே இறைவனின் அன்பர்களும் அவரை, தண்டிப்பவராகவோ, பரிசளிப்பவராகவோ ஒரு போதும் காணமாட்டார்கள். அன்பை ஒரு நாளும் சுவைத்திராத மக்களே அஞ்சி நடுங்குபவர்கள். இறைவனைத் தண்டனை தருபவரென்றோ பரிசளிப்பவரென்றோ நினைக்கும் இப் பயங்கரமான கருத்துக்கள் பண்படாத மனங்கட்குப் பயன்படலாம். ஆதலின் அனைத்தையும் களைந்தெறிக. அறிவு மிக மிகப் படைத்தவரேனும் சிலர் ஞானத் துறையில் பண்படாதவரே ஆவர். இக்கருத்துகள் அவர்களுக்குத் துணையாகலாம். ஆனால் ஞானியர்க்கோ, சமயத்தை அனுபவிப்பவர்க்கோ, ஞான உள் நாட்டம் பெற்றவர்க்கோ, இத்தகைய கருத்துகள் வெறும் பிள்ளைத்தனம்; வெறும் பேதைமையே ஆகும். இத்தகையோர் அச்சத்தைப் பற்றிய கருத்துகள் அனைத்தையும் தள்ளிவிடுவர்.

அறிவிற்குத் தெளிவானால் அன்றி ஒருவன் ஒன்றையும் ஒப்புக்கொள்ள மாட்டான். மற்றவனுக்கு, நம்பிக்கையுள்ளது. காண இயலாததை அவன் நம்புகிறான். இருவரும் நமக்குத் தேவையானவர்களே. ஒரு இறக்கையால் மட்டும் எந்தப் பறவையும் பறக்க முடியாது.

எல்லா நிலைகளிலும் சரிசமமாக முன்னேற்றமடைந்துள்ள மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம். அவன் பெரிய இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும். உலகத்தின் துயரையும், துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. உணர்வதோடு நில்லாது, பொருள்களின் கருத்தை அறிந்து, இயற்கையினுள்ளம், அறிவிலும் ஆழமாக ஊடுருவிக் காண்பவனே நமக்குத் தேவை. அத்துடன் நில்லாது, அந்த உணர்ச்சியையும், அறிவையும் செயலாக்குபவனே நமக்கு இன்றியமையாது வேண்டப்படுபவன். மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே நமக்கு அவசியமாகிறது. இவ்வுலகில் எத்தனையோ குருமார்கள் உள்ளனர். ஆனால், அவர்களுள் பெரும்பாலோர் ஒரு சார்புடையவரே என்பதைக் காணலாம். ஒருவர் பிரகாதசமான நடுப்பகல் சூரிய ஒளி போன்ற புத்தியையன்றி வேறொன்றையும் காண்பதில்லை. இன்னொருவர் அன்பின் அழகிய இசையையன்றி வேறொன்றையும் கேட்பதில்லை. மற்றுமொருவர் செயலில் ஈடுபட்டிருக்கிறார்; ஆனால் உணரவோ, நினைக்கவோ அவருக்கு அவகாசமில்லை. சரிசமமாக, செயலாற்றுபவரும் அறிவுத்திறன் கொண்டவரும் உணரும் தன்மையுடையவருமான ஒரு மகான் ஏனிருத்தல் கூடாது? அது இயலாததா? நிச்சயமாக இயலும். அவனே எதிர்கால மனிதன். அத்தகையோர் இப்பொழுது ஒரு சிலரே உள்ளனர். உலகம் முழுவது மனிதத் தன்மை வாய்ந்த மக்கள் நிரம்பும் வரை அத்தகையோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும்.



விவேக மலர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 11:04 pm

விவேக மலர் Imagesvivekananda

இடி முழக்கமும் பறவைகளின் பாட்டும் இயைந்து போகவேண்டும்.

அவன் எப்பொழுதும் எங்கும் நிறைந்த பொருள், கல்லிலும் இருப்பதாகக் கண்டு வழிபடுகிறான்.

இவ்வுலகில் நன்மையும், தீமையும் எங்கும் உள்ளன. ஆம். சில வேளைகளில் தீமையே நன்மையாகிறது; ஆனால், வேறு சில வேளைகளில் நன்மையும் தீமையாகிறது. ஏதாவது ஒரு சமயம் நமது புலன்கள் அனைத்தும் தீமை விளைவிக்கின்றன. ஒருவன் மது அருந்தட்டும்; முதலில் அது தீங்கு விளைவிக்காது. ஆனால் அவன் குடித்துக்கொண்டே இருந்தால் தீமை விளையும். ஒருவன் பணக்காரத் தாய் தந்தையருக்குப் பிறக்கிறான். அது நல்லது. ஆனால் அவர்கள் அவனை முட்டாளாக்கி உடலுக்கோ மூளைக்கோ உரிய பயிற்சி தருவதில்லை. நன்மையால் தீவை விளைவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. உயிரின் மீதுள்ள பற்றைப் பாருங்கள்; நாம் எங்கெங்கோ சென்று குதித்து விளையாடுகிறோம். ஏதோ ஒரு சில கணங்களே வாழ்கிறோம், கடுமையாக உழைக்கிறோம். சிறிது வலுவில்லாத குழந்தைகளாய்ப் பிறந்தோம். எல்லாவற்றையும் அறிவதற்குள் பல ஆண்டுகள் கழிந்துடுகின்றன. அறுபது, எழுபது வயதில் கண்ணைத் திறக்கும்போது, 'வெளியே செல்' என்னும் கட்டளை பிறக்கிறது. இதுதான் வாழ்க்கை.

இப்போதைய நிலையில் இருக்கும் நாமனைவரும் உடலால் ஈர்க்கப்படுகிறோம்; உயிர் வாழ்வதற்காக உழைக்கிறோம்! பொறாமை, சண்டை, துன்பம் இவற்றிற்கு ஆளாகி இறுதியில் மாய்ந்து போகிறோம். இதனால், நாம் இருக்க வேண்டிய நிலைமையில் இல்லையென்பது தெளிவாகிறது. நாம் சுதந்திரமாக இல்லை. இயல்பான தூய்மை முதலியவற்றையும் பெற்றிருக்கவில்லை. ஆன்மா சுருங்கி விட்டதாகக் கூறலாம். இப்போது அதற்குத் தேவையானது விரிவே.

இவற்றிலிருந்து கரையேறுவது எங்ஙனம்? இங்கு இருப்பதன் நோக்கம் யாது? துயரைத் தொலைப்பதே நம் கருத்து. அதற்காகவே நாம் இரவு பகலாகப் பாடுபடுகிறோம். ஆனால், உழைப்பால் அது வருவதன்று. வினையிலிருந்து மேலும் வினையே உண்டாகிறது. சுதந்தரரான ஒருவர் நமக்கு உதவி புரிந்தால்தான் அது இயலும். ''என்றும் அழியா நிலைபெற்ற குழந்தைகளே, இவ்வுலகிலும் உயர்ந்த சுவர்க்கங்களிலும் உறைபவர்களே, செவி சாயுங்கள்! நான் ரகசியத்தை அறிந்துவிட்டேன்'' என்கிறார் முனிபுங்கவர். ''இருளுக்கெல்லாம் அப்பாலான அவரை நான் கண்டுவிட்டேன். அவரது தயவால் மட்டுமே நாம் இந்தப் பிறவிக் கடலைத் தாண்ட இயலும்.''

சுவர்க்கத்திற்குச் செல்வதன்று இந்தியாவின் குறிக்கோள். பூமியினின்றும் நரகத்தினின்றும் வெளியேறுங்கள். சொர்க்கத்தினின்றும் வெளியேறுங்கள். குறிக்கோள் யாது? அது சுதந்தரமே. நீங்கள் அனைவரும் சுதந்தரர் ஆகவேண்டும். ஆன்மாவின் ஒளி மறைந்திருக்கிறது. அதை மீண்டும் வெளிக்கொணர வேண்டும். ஆன்மா இருக்கிறது; அது எங்கும் உள்ளது. அது எங்குச் செல்லும்? எங்குச் செல்ல இயலும்? அது இல்லாத இடமிருந்தால் அங்கே செல்லக்கூடும். அது எப்போதும் உள்ளது என்பதைத தெரிந்து கொண்டால் நீங்கள் என்றும் நிறைந்த இன்பம் பெறுவீர்கள். அதற்குப் பின் பிறத்தலோ இறத்தலோ இல்லை. நோய் இல்லை; உடல் இல்லை. உடலே மிகப் பெரிய நோய்!

ஆன்மா ஆன்மாவாகவே இருக்கும். ஆவி ஆவியாகவே வாழும். இதை எவ்வாறு செய்வது? இயல்பாகவே என்றுமுள்ள, தூய, நிறைவுற்ற ஆன்மாவில் இறைவனை கூப்படுவதால்தான். இவ்வுலகில் இரு வலிமை வாய்ந்த இறைவர்கள் இருக்க முடியாது. சர்வ வல்லமையுள்ள இரண்டு மூன்று கடவுளர் இவ்வுலகில் இருப்பதாக எண்ணிப் பாருங்கள். ஒருவர் உலகைப் படைப்பார்; இன்னொருவர் அதை அழிப்பதாகக் கூறுவர். இது ஒருபோதும் நடவாது. ஆண்டவர் ஒருவரே இருக்க இயலும். ஆன்மா நிறைவுறுகின்றது. அனேகமாக சர்வ வல்லமையும் அனைத்தறிவும் பெறுகிறது. இதுவே வழிபடுபவர். வழி படப்பட்டவர் யார்? கடவுளே. அவர் எங்கும் நிறைந்தவர்; எல்லா அறிவும் கொண்டவர்; எல்லாக் குணங்களும் நிரம்பியர். இவற்றிற்கெல்லாம் மேலாக, அன்பே உருவானவர் அவர். ஆன்மா இந்த நிறைவைப் பெறுவது எதனால்? வழிபடுவதாலேயே.

நீங்கள் எல்லோரும் விவிலிய நூலைப் படிப்பவர்கள். யூத வரலாறும் யூதக் கருத்துக்களும், மத குருமார்கள், (புரோகிதர்கள்) தீர்க்கதரிசிகள் என்ற இரண்டு வகை ஆசிரியர்களால் உருவாகியுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்களில், மத குருமார்கள் பழமையைப் பாதுகாக்கும் சக்தியின் பிரதிநிதிகளாகவும், தீர்க்கதரிசிகள் முன்னேற்றச் சக்தியின் பிரதிநிதிகளாகவும் விளங்குகிறார்கள். உண்மை என்னவெனில், சமய வாழ்வில் விவரிக்க இயலாத சடங்கு முறைகள் எப்படியோ நுழைந்துவிடுகின்றன. ஒவ்வொன்றிலும் மரபு புகுந்து விடுகிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மதத்திலும் இது உண்மைதான்.

இந்தச் சகாப்தத்தில், மிகுந்த முன்னேற்றமான பரந்த நோக்கம் கொண்ட பிரசாரகர் என்று கூறப்படுவோர், சில ஆண்டுகள் கழிந்த பின்னர், பழமைப் போகுடைய மதகுருமார்கள் ஆகிவிடுகிறார்கள். முன்னேற்றமான சிந்தனையாளர்கள் கூடத் தங்களைக் காட்டிலும் சற்று மிகுதியாக முற்போக்கான கருத்து உள்ளவர்களுக்கு முட்டுக்கட்டையிடுவார்கள். தாங்கள் அடைந்துள்ள நிலையைக் காட்டிலும், யாரும் முன்னேறிச் செல்வதை அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இருக்கும் நிலையிலேயே இருப்பதில் அவர்கள் திருப்தியடைகிறார்கள்.

எந்த நாட்டிலுமே மக்களுள் பெரும்பாலோர் பரம்பொருளை, அருவத் தத்துவமாக வணங்க இயலாது. இதுவரை அது சாத்தியமாகவில்லை. அவர்கள் இவ்வாறு வணங்கக் கூடிய ஒரு காலமும் வருமா என்றுகூட நான் ஐயுறுகிறேன். இந்த நகரத்தில் உள்ளவர்களில் எத்தனை ஆயிரம் பேர் ஆண்டவரைப் பரமாத்மாவாக எண்ணி வணங்கத் தயாராக இருக்கின்றனர்? ஒரு சிலரே. பெரும்பாலோரால் இது செய்ய இயலாது. ஏனெனில், அவர்கள் புலன்களுக்கு அடமைப்பட்டு வாழ்பவர்கள். அவர்களுக்குத் திட்டவட்டமான கருத்துகளை நீங்கள் கூறவேண்டும். உடலால் செய்யக் கூடிய சில செயல்களை அவர்களுக்கு உரையுங்கள். 'இருபது முறை எழுந்து நிற்கவேண்டும்; இருபது முறை உட்காரவேண்டும்' என்பன போன்றவைகளைக் கூறுங்கள். அவற்றை அவர்கள் அறிந்து கொள்வார்கள். 'ஒரு நாசி வழியாக மூச்சை இழுத்து மற்றொரு நாசி வழியாக வெளியே விடவேண்டும்' என்று கூறுங்கள். அதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். பரமாத்மாவைப் பற்றிய உயர்ந்த கருத்துகளையெல்லாம் அவர்களால் ஏற்க இயலாது. இது அவர்கள் குற்றமன்று. கடவுளைத் தத்துவமாக வழிபடக் கூடிய சக்தி உங்களுக்கு இருக்கிறதென்றால், நல்லது. ஆனால் அதை உங்களால் பின்பற்ற முடியாத ஒரு காலம் இருந்தது. மக்கள் பண்படாதவர்களாய் இருந்தால், சமய உணர்வுகளும், மதக்கோட்பாடுகளும் பண்படாதவைகளாகவே இருக்கின்றன. வழிபாட்டு முறைகளும் தூலமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் இருக்கின்றன. மக்கள் பண்பட்டவர்களாகவும் நாகரிகமுள்ளவர்களாகவும் இருந்தால், இந்த முறைகள் அழகு நிறைந்தவைகளாயிருக்கின்றன. வழிபாட்டுச் சடங்குகள் என்றும் இருக்கும். ஆனால் அவை காலத்திற்கு ஏற்றவாறு மாறும்; அவ்வளவுதான்.

முகம்மதிய மதத்தைக் காட்டிலும் உருவ வழிபாட்டைக் கடுமையாக எதிர்த்த ஒரு மதம், உலகில் எக்காலத்திலுமே தோன்றியதில்லை. இது ஒரு வியப்பான நிகழ்ச்சி! முகம்மதிய மதத்தில் சித்திரத்துக்கோ, கல்வெட்டுக்கோ, இசைக்கோ இடமில்லை. இவை உருவ வழிபாடுகளில் கொண்டு போய் விட்டுவிடும் என்று அம்மதத்தினர் கருதினர். மதகுரு கூட்டத்தினரைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. அவர் அவ்வாறு செய்தால் அது அவரை மட்டும் வேறுபடுத்தியதாகிவிடுமே! ஆகவே, எல்லாரும் ஒரே முகமாகத் திரும்பியிருந்தால், அதில் வேறுபாடு இல்லை. இவ்வாறெல்லாம் அவர்களுடைய முறை இருக்கிறது. ஆனால் நபி இறந்து இரண்டு நூற்றாண்டுகள் முடிவதற்குள்ளாகவே அங்க அடியார்களின் வழிபாடு தொடங்கிவிட்டது. 'இங்கேதான் அடியாரின் கால் விரல் இருக்கிறது; அங்கேதான் அவரது உடலினி தோல் இருக்கிறது' என்றெல்லாம் கூறி வழிபாடு செய்ய ஆரம்பித்தார்கள். ஆகவே, உருவ வழிபாட்டு செய்ய ஆரம்பித்தார்கள். ஆகவே, உருவ வழிபாட்டு முறை என்பது நாம் கடக்க வேண்டிய கட்டங்களுள் ஒன்றாகும்.

இறந்துபோன நல்ல ஆடவர்களையும், பெண்களையும், முனிவர்களையும் வழிபடுவது இதைக் காட்டிலும் உயர்ந்த வழிபாடாகும். அவர்களை நினைவூட்டக்கூடிய பொருள்களை மனிதர்கள் வழிபடுகிறார்கள். இந்தப் பொருள்களில் ஞானிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களுக்கு உதவுவார்கள் என்றும் வழிபடுபவர்கள் எண்ணுகிறார்கள். ஒரு ஞானியின் எலும்பைத் தொட்டுவிட்டால் நோயிலிருந்து குணமடைந்து விடலாம் என நம்புகிறார்கள். அந்த எலும்பே நோயைத் துடைக்கிறது என்னும் கருத்தாலன்று, அந்த எலும்பிலிருக்கும் ஞானியே குணப்படுத்துகிறார் என்று.

இவை எல்லாம் கீழான வழிபாட்டு முறைகளே, இருப்பினும் இவைகளும் வழிபாட்டு முறைகளேயாகும். நாமெல்லாரும் இவற்றைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. பகுத்தறிவைக் கொண்டு பார்க்கும்போதுதான் இவை சரியாய் இல்லை என்று தோன்றுகிறது. ஆனால், நம்முடைய உள்ளத்திலிருந்து இவற்றை அகற்றிவிட முடியாது.

சின்னங்களுக்கு எந்த விதமான பொருளும் இல்லை என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால், மற்றும் சிலருக்கோ, எவ்விதப் பொருளுமற்ற மந்திரங்கள் வேண்டும். தெளிவான, சாதாரண உண்மைகளை நீங்கள் கூறினால்கூட அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். மனித இயற்கை இப்போது உள்ள அளவில், எவ்வளவு குறைவாக மனிதர்கள் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு நல்லது. அப்போதுதான் நீங்கள் பெரியவர்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் எல்லாக் காலங்களிலும், இப்படிப்பட்ட வழிபாடு செய்பவர்கள் சில படங்களினாலும், சின்னங்களினாலும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இடக் கணிதம் (Geometry) மிகப் பெரிய விஞ்ஞானியாய் இருந்திருக்கிறது. மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அதில் எதுவும் தெரியாது. ஓர் கணித மேதை ஒரு சதுரத்தை வரைந்து, அதன் நான்கு மூலைகளிலும் ''சூ மந்திரக்காளி!'' என்று சொல்வானாகில், இந்த உலகமே சுற்றும்; சுவர்க்கம் வழிவிடும்; கடவுள் தாவிக் கீழே வந்து நம்முடைய அடிமையாக இருப்பார் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள். இன்றுகூட அல்லது பகலும் இதைப் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஏராளமான பைத்தியக்காரர்கள் உண்டு. இது ஒரு வகை வியாதியேயாகும்; சித்தர்கள் தீர்த்தற்குரிய நோயல்ல; வைத்தியன் போக்க வேண்டிய நோய்.

நன்றி: அப்புசாமி.காம்



விவேக மலர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக