Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

சீன நாகரீகமும் அரச வம்சங்களும் - பகுதி 1

சிவா | Published on the mon Jan 23, 2023 1:19 pm | 600 Views

சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ள ஒரு தீப கற்பம் ஆகும். உலக நிலப்பரப்பில் 1/14 {9597900 சதுர கீ.மீ} பங்கு கொண்ட சீனா வடக்கே மங்கோலியாவையும் வட கிழக்கில் ரஷ்யாவையும் வட கொரியவையும் கிழக்கில் மஞ்சள், கிழக்கு சீன கடல்களையும் தெற்கே வியட்னாமையும் தென் மேற்கே பாகிஸ்தானையும் எல்லையாக கொண்டது. இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.


சீன நாகரீகமானது தோற்றம் பெறுவதில் அதன் இயற்கை வளம் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக நீர் வளத்தினை கூறலாம். அந்த வகையில் குவாங்கோ நதியானது சீன நாகரீக விருத்தியில் முக்கிய பங்கு வகித்தது. இதன் நீளம் 5464 கி.மீ ஆகும். குவாங்கோ என்ற சீனச்சொல்லின் அர்த்தம் துயரம் என்பதாகும். நீர் வளம் நிறைந்த சீனாவில் கோதுமை, நெல், குரக்கன், கரும்பு, பருத்தி முதலியன உற்பத்தி செய்யப்பட்டன. சீன நதிகள் போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகளாக நதிகள் காணப்பட்டன.  

சீனரை மஞ்சள் இனத்தினர் என்று அழைப்பர். மங்கொலிய இனத்தவர் சீனருடன் கலந்தமையால் சீனரை சிலர் மங்கோலியராக கருதினர். ஆனால் சீனர் ஒரு தனிக்குளுவினராகவே வாழ்கின்ரனர். சீன மொழி பற்றி நோக்கினால் கி.மு 2697 ல் எழுதத் தொடங்கியிருக்கின்ரனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ரனர். மூங்கிலில் சீனர்கள் எழுதப் பழகினர். கி.மு 105 ல் சீனர் கடதாசி, எழுதுகோல் கொண்டு எழுதத் தொடங்கினர். சீன எழுத்துக்கள் கீழிருந்து மேலாகவும் வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்டன. கி.பி 100 இல் தம் பதங்களைக் கொண்ட அகராதி ஒன்றை இயற்றினர்.

சீனர்கள் சமய நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் பல தெய்வங்களை வணங்கினர் என்று கூற முடியது. அவர்கள் ஆதி காலம் தொட்டு தனிக்கடவுள் உண்டு என்ற கொள்கை கொண்டிருந்தனர். கி.மு 6ம் நூற்றாண்டில் கன்பூசிய மதமும் தேயோ மதமும் பரவின. பின்னர் இவ்விரு மதங்களும் செல்வாக்கு இழந்து பௌத்த மதம் வளர்ச்சி பெற்றது.
சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றி பேசும் போது, ஒருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தான் கம்பியூசியஸ். சீன மக்களை பொறுத்தவரையில் கம்பியூசியஸின் செல்வாக்கு முதலிடம் வகிக்கின்றது. கம்பியூசியஸ் சீனாவின் கம்பியூசியஸ் தத்துவத்தை உருவாக்கியவர். உண்மையில் கம்பியூசியஸ் தத்துவம் சீனாவின் பழங்கால தத்துவ இயல் குழுக்களில் ஒன்றாகும். அது ஒரு தத்துவச் சிந்தனையாகும். மதச் சிந்தனை அல்ல. சீனாவின் ஈராயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவ சமூகங்களில் சீராக வளர்ந்துள்ள ஒரு முறையான சிந்தனையாக கருதப்பட்டு நீண்டகாலமாக ஆதிக்கத்தில் இருந்து வருகின்றது. கம்பியூசியஸ் சிந்தனை சீனாவின் பண்பாட்டில் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது மட்டுமல்ல, சில ஆசிய நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. இன்று சீனர்கள் கடல் கடந்து அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்வதால், கம்பியூசியஸ் சிந்தனையின் செல்வாக்கு சீனாவுக்கு அப்பால் ஆசிய நாடுகளில் பரவியுள்ளது என்று கூறலாம்.

கம்பியூசியஸ் தமது வாழ்நாள் முழுவதும் பெரிய அதிகாரியாக பணி புரியவில்லை. ஆனால் அவர் அறிவுக்கூர்மை மிக்கவர். கம்பியூசியஸ் தனது அரசியல் கருத்தையும் ஒழுக்கச் சிந்தனையையும் பிரச்சாரம் செய்தார்.

அவருடைய தத்துவத்தின் படி, அரசர் நாட்டை சீரான முறையில் நிர்வகிக்க வேண்டும். சாதாரண மக்கள் அரசருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பல தகுதிகள் இருக்கலாம். ஆனால் வேறுபட்ட நிலையில் தனது தகுதிக்கான மதிப்பு வரம்பை தாண்டக் கூடாது. கம்பியூசியஸின் தத்துவம் துவக்கத்தில் முக்கிய சிந்தனையாக விளங்கவில்லை. கி.மு 2ஆம் நூற்றாண்டில் சீனா மிகவும் வலுவான, ஒன்றிணைந்த, அதிகாரம் மத்திய அரசில் குவிந்திருக்கும் ஒரு நாடாக இருந்தது. கம்பியூசியஸ் தத்துவம், நிலப்பிரபுத்துவ சமூகத்தின் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு பொருத்தமானது என்பதை ஆட்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, கம்பியூசியஸ் தத்துவம் நாட்டின் முறையான சிந்தனையாக விதிக்கப்பட்டது.

சீனாவில் பல அரச வம்சங்கள் ஆட்சி செய்தன. அவற்றை நாம் சுருக்கமாக நோக்கினால் முதலில் சியா அரசமரபு கிமு 2100-கிமு 1600 வரையும் சாங் அரசமரபு கிமு 1600- கிமு1046 வரையும் சவு அரசமரபு கிமு1045- கிமு256 வரையும் , சின் அரசமரபு கிமு 221 -கிமு 206 வரையும் ,ஆன் அரசமரபு கிமு 206 - 220 வரையும் (மேற்கு ஆன்,கிழக்கு ஆன்) அதன் பின்னர் மூன்று இராச்சியங்கள் 220 - 280 வேய்i, சூ & வூ,யின் ஆகியனவும் யின் அரசமரபு 265- 420வரையும் மேற்கு யின், கிழக்கு யின் என்பன420- 589 வரையும் சுயி அரசமரபு 581- 618 வரையும் தாங் அரசமரபு 618- 907 இரண்டாவது சூ 690-705 வரையும் பின்னர் 5 அரசமரபுகள் 907- 960 வரையும் சொங் அரசமரபு 960-1279வரையும் யுவான் அரசமரபு 1271-1368 வரையும் மிங் அரசமரபு 1368-1644 வரையும் சிங்அரசமரபு1644-1911 வரையும் பின்னர் சீனக் குடியரசு 1912 ல் ஸ்தாபிக்ககப்பட்டது. சீன மக்கள் குடியரசு 1949ல் சீனக் குடியரசு (தாய்வான்) 1912 ல் ஸ்தாபிக்கப்பட்டது.

சீன குவாங்கோ நாகரீக மக்களின் சாதனைகளை நாம் நோக்குவதன் மூலம் இந்நாகரீகம் பற்றிய அறிவினை வளர்க்கலாம். சீனரின் பட்டு உற்பத்தியானது மிக முக்கியமான சாதனை ஆகும்.சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டதாம்.

இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.

இந்தச் சூழலில் ஜப்பானியர்கள் வெகு சாமர்த்தியமாகபட்டு நூல் வளர்க்கத் தெரிந்தநான்கு சீனப் பெண்மணிகளைக் கடத்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஜப்பானியர்கள் அவர்கள் மூலமாகபட்டு நூல் வளர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப்பன்மடங்கு உற்பத்தி செய்யஆரம்பித்து விட்டார்களாம். ஆனால், சீனர்களுக்கு அபிவிருத்தி செய்யத் தெரிந்து இருக்கவில்லையாம். அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனாவில் திறந்துவைக்கப்பட்ட பண்டை கால வர்த்தகப் பாதையான பட்டுப்பாதை உலகப் புகழ்பெற்றது. சீனாவையும் ஐரோப்பிய, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளையும் இணைக்கும் இப்பட்டுப்பாதை, கீழை மற்றும் மேலை நாடுகளுகளின் பொருள் பரிமாற்றத்துக்கும் நாகரிகத் தொடர்புக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.

பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசப்பத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால் பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. பண்டை காலத்தில் சீனாவிலிருந்து மத்திய ஆசியா வழியாக தெற்காசியா, மேற்காசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்குச் செல்லும் தரை வழி வணிகப் பாதையாகப் பட்டுப் பாதை திகழ்ந்தது. சீனாவின் ஏராளமான இயற்கைப் பட்டு நூல்களும் பட்டுத் துணிகளும் இப்பாதை வழியாக மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதனால் பட்டுப்பாதை என்று அழைக்கப்பட்டது. கி.மு முதலாவது நூற்றாண்டில் சீனாவின் ஹென் வமிசக் காலத்தில் இப்பட்டுப்பாதை உருவாகியது என்று தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.மு.2வது நூற்றாண்டு முதல் கி.பி. 2வது நூற்றாண்டு வரை பட்டுப் பாதை நெடுகிலும் மேற்கிலிருந்து கிழக்கு வரை 4 பேரரசுகள் இருந்தன. அவை, ஐரோப்பாவின் ரோம், மேற்காசியாவின் Parthia(பண்டை கால அடிமை முறையுடைய நாடான ஈரான்), மத்திய ஆசியாவின் குஷான், Kushan( மத்திய ஆசியாவிலும் இந்தியாவின் வட பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய பேரரசு), கிழக்காசியாவைச் சேர்ந்த சீனாவின் ஹென் வம்ச பேரரசு என்பனவாகும். பட்டுப்பாதையினால், இந்தப் பண்டை கால நாகரிகங்களுடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டு, அதன் தாக்கம் பரவியது. அதன் பின்னர் எந்த நாகரிகமும் தனித்து வளரவில்லை.

சீனாவின் பொருட்களும் தொழில் நுட்பமும் பட்டுப் பாதை வழியாக உலகின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. எடுத்துக்காட்டாக, பட்டுத் துணி, பட்டுப்புழு, காகித உற்பத்தி மற்றும் அச்சு நுட்பம், அரக்கு (lacquer), மட்பாண்டம், வெடி மருந்து, திசையறி கருவி முதலிய சீனப் பொருட்கள் உலகின் நாகரிகத்துக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.

பட்டுப் பாதையினால், பொருள் வர்த்தகத்தோடு, பண்பாட்டுத் தொடர்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. உலகின் 3 முக்கிய மதங்களில் ஒன்றான பௌத்த மதம், கி.மு. 206ஆம் முதல் கி.மு. 220ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் நுழைந்தது. 3வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட, சிங்ஜியாங்கின் கச்சிழ் கற்குகைக் கோயிலில் இதுவரை பாதுகாக்கப்பட்டுவரும் சுமார் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய சுவர் ஓவியம், முற்காலத்தில் இந்தியாவிலிருந்து சீனாவுக்குள் புத்த மதம் பரவிய அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றது. பௌத்த மதம் இந்தியாவிலிருந்து பட்டுப் பாதை வழியாகச் சீனாவின் சிங்ஜியாங் கச்சிழில் நுழைந்து.

9வது நூற்றாண்டுக்குப் பின், ஐரோப்பிய மற்றும் ஆசியக் கண்டங்களில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதார மாற்றங்களினால், கடல் போக்குவரத்து வளர்ச்சி பெற்று, வர்த்தகத்தில் கடல் போக்குவரத்து முக்கிய இடம் வகித்தது. பாரம்பரிய சிறப்பு மிக்க இந்தப் பண்டைக் காலத் தரை வழி வணிகப் பாதை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 10வது நூற்றாண்டின் சொங் வம்ச காலத்தில் பட்டுப் பாதையின் பயன்ப்பாடு மிகவும் குறைவாக இருந்தது.

மட்பாண்டங்கள் பீங்கான்கள் தயாரிப்பில் சீன குவாங்கோ மக்கள் பிரசித்தி பெற்று விளங்கினர். இவர்கள் தமது தேவைகளுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் இவற்றை தயாரித்தனர். ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்தின் போது பீங்கான்களும் மட்பாண்டங்களும் முதன்மை பெற்றுக் காணப்பட்டன. இதில் சிறப்பம்சம் என்னவென்ரால் இவற்றில் நிறம் தீட்டப்பட்டு காணப்பட்டன. மேலும் இவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. சாங்க் ஆளுன்குடியினர் காலத்தில் தான் தேநீரானது ஒரு சமய வழக்கம் எனும் நிலை பெற்றது. மிகவும், வழமை மீறிய, நேர்த்தியான அழகிய பீங்கான் தேனீர் கிண்ணங்களில் தேனீர் அருந்துவது அவர்களது பெருமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. இது சீன நாகரீகத்தவரின் உன்னத சாதனை ஆகும்.
சீன நாகரீகத்தவரின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைவது வெண்கல உற்பத்தியும் அதன் பாவனையுமாகும். வெண்கல உற்பத்திகள் சீன மக்களிடையே பிரபலமாகக் காணப்பட்டது. வெண்கலப்பாத்திரங்கள் அதிகளவில் சடங்குகளிற்காகவே பயன்படுத்தப்பட்டது.

சீனர் மத்தியில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை காணப்பட்டது. இதனால் இறந்து போனவர்களுக்கு மரணச்சடங்கு செய்தனர். இந்த மரணச் சடங்கின் போது பல்வேறு உணவு வகைகளும் குடிபானங்களும் இவர்களிற்கு தேவைப்பட்டது. அத்துடன் அவற்றை இவர்கள் வெண்கலத்தாலான பாதிரங்களிலேயே இட்டு வைத்தனர். ஒரு மரணச் சடங்கின் போது 200 க்கு மேற்பட்ட பாத்திரங்கள் தேவைப்பட்டன. இப்பாத்திரங்கள் சடங்குகள்ன் பின்னர் சில வேளைகளில் கல்லறைகளில் புதைக்கப்பட்டன.

சீனரின் வெண்கலக் கைத்தொழில் திட்டமிட்ட வகையில் நுட்பமான முறைகளை உடையதாக காணப்பட்டது. வெண்கலச் சுரங்கங்களை குடைதல், சுத்திகரித்தல்,கொண்டு செல்லுதல், பாத்திரங்களையும் பொருட்களையும் உட்பத்தி செய்தல் எனும் படி முறைகள் காண்ப்பட்டது.

சீனரின் வெண்கல பாத்திரங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனை கொண்டு பார்க்கும் போது சீனர் வெண்கல உட்பத்தியில் உன்னத தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று தெரிகிறது.
சீன மொழி உலகின் பயன்பாட்டுத் துறையில் மிக நீண்டகாலம் உடையது. அதன் விபரங்கள் செழுமையானது. எண்ணிக்கையும் மிக அதிகமானது. அதன் உருவாக்கமும் பயன்பாடும் சீனத் தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சியை வளர்ந்துள்ள மட்டுமல்ல. உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஆழந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பைன்போ சிதிலம் உள்ளிட்ட இடங்களில் சீன மொழி எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வகைகள் அப்போதுதான் 50க்கும் மேலாக அடைந்தன. எழுத்துக்கள் வரிசையில் ஆனவை. அத்துடன் குறிப்பிட்ட முறையில் ஒழுங்கானவை. எளிதான எழுத்தின் தனிச்சிறப்பியல்பும் அதற்கு உண்டாகியுள்ளது. இவை சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையாகும் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சீன மொழி எழுத்துக்கள் கி.மு.16ம் நூற்றாண்டின் சான் வம்சகாலத்தில் தொகுதியான எழுத்துக்களாக உருவாகின. சான் வம்சகாலத்தின் துவக்கத்தில் சீனாவின் நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் வளர்ந்தது. குருத்து மொழி தோன்றுவது அதன் தனிச்சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இந்த எழுத்துக்கள் ஆமை ஓட்டிலும் விலங்குகளின் எலும்பிலும் செதுக்கப்பட்ட பழைய எழுத்துக்களாகும். சான் வம்சகாலத்தில் மன்னர்கள் எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன் ஆரூடம் கணித்தனர். அதற்காக விலங்கு எலும்பு அதற்காக பயன்படுத்தப்பட்டதுவிலங்கு எலும்பை பயன்படுத்துவதற்கு முன் பதனீடு செய்ய வேண்டும். முதலில் அதில் உள்ள ரத்தமும் இறைச்சியும் நீக்கப்பட வேண்டும். சமப்படுத்தப்பட வேண்டும். கணியன்களின் பெயர் அதில் செதுக்கப்பட வேண்டும்.

சீன மொழி எழுத்துக்கள் சித்திரங்களைப் போன்றவை. ஒலிப்பையும் வடிவத்தையும் மையமாகக் கொண்ட எழுத்து அமைப்பு முறையுடன் மொத்தம் பத்தாயிரம் எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இவற்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் மூவாயிரமாகும். இந்த மூவாயிரம் எழுத்துக்களால் எல்லையற்ற சொற்களை உருவாக்கலாம். பல்வகை வசனங்களை உருவாக்க முடியும்.

சீன மொழி எழுத்துக்கள் உருவான பின் அண்டை நாடுகளில் அவை ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தின. ஜப்பான், வியட்நாம், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் எழுத்துக்கள் சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையில் உருவானவை. இதன் மூலம் சீனர் எழுத்துக்கலையில் ஏற்படுத்திய சாதனையினை மதிப்பிட முடிகிறது.

காகித உட்பத்தி சீனரின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே. காகிதத்தின் முக்கியத்துவத்தைக் கவனத்திற் கொள்ளும் போது, சாய் லுன் பற்றிய குறிப்புகள் இல்லாமையால்அவருடைய பெயரை ஒரு கற்பனைப் பெயர் தானோ என்ற ஐயம் எழலாம். எனினும் கவனமான ஆராய்ச்சிகளிலிருந்து சாய் லுன் என்பவர் உண்மையான ஆள் தான் என்பதும் அவர் சீனப் பேரரசரின் அரசவையின் ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்தார் என்பதும் அவர் தாம் தயாரித்த காகிதத்தின் மாதிரிகளை பேரரசர் ஹோ-டியினிடம் கி.பி. 105 ஆம் ஆண்டளவில் அளித்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஹான் அரச மரபின் அகராதி முறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி நம்பக் கூடியதாகவே உள்ளது. இதில் மந்திர தந்திரச் செயல்களோ புராண அற்புதங்களோ எதுவுமில்லை. காகிதத்தைக் கண்டு பிடித்தவர் சாய் லுன் தான் என்றே சீன வரலாறு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இச்சாதனைக்காகச் சீனாவில் அவர் பெரிதும் போற்றப்பட்டார்.

எனினும், சாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை. அவர் ஓர் அலியாக இருந்தார் என சீனத்துச் சான்றுகள் கூறுகின்றன. சாய் லுன்னின் கண்டுபிடிப்பு குறித்துச் சீனப் பேரரசர் பெரும் மகிழ்ச்சி கொண்டார் என்றும் ஆவணச் சான்றுகள் குறிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்கே, சாய் லுன்னுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால், பின்னர் அவர் அரண்மனைச் சூழ்ச்சி யொன்றில் சிக்கிக் கொண்டார். அதன் விளைவாக அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அவதிக்குள்ளாகிய சாய் லுன், நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து, நஞ்சுண்டு மாண்டார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன.

சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் போது காகிதம் பெருமளவுக்குப் பயனுக்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் உத்தியைச் சீனர்கள் நீண்ட காலம் இரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஆனால் கி.பி. 751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும், பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று, காகிதம் தயாரிக்கும் கலை படிப்படியாக அரபு உலகம் முழுவதிலும் பரவியது. ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்தக் கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். காகிதத்தில் பயன்பாடு உலகெங்கும் படிப்படியாகப் பரவியது.

இன்று நூல்களும் மற்ற எழுத்துச் சுவடிகளும் மலிவாகவும் மிகப் பெருமளவிலும் தயாரிக்கப் படுகின்றன என்றால் அதற்குக் காகிதம் பயனுக்கு வந்ததே தலையாய காரணமாகும். அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப் படாதிருந்தால் காகிதத்திற்கு இன்றுள்ள அளவுக்கு பெரும் முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்பது உண்மைதான். ஆயினும் அச்சடிப்பதற்கு காகிதம் போன்ற மலிவான எழுது பொருள் பெருமளவில் கிடைக்காது போயிருப்பின் அச்சு எந்திரத்திற்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

வேளாண்மையும் எழுத்து முறையும் சீனாவை விட மத்திய கிழக்கில் முன்னதாகவே முன்னேற்றம் அடைந்தது உண்மைதான். ஆனால் மேலை நாட்டு நாகரிகத்தை விடச் சீன நாகரிகம் பின் தங்கியதற்கு இதை மட்டும் காரணமாகக் கூற முடியாது. இதற்கு முக்கிய காரணம் சாய்லுன்னுக்கு முன்பு வரை சீனாவில் வசதியான எழுது பொருள் எதுவும் இல்லாமலிருந்தது தான் என நான் கருதுகிறேன். மேலை நாடுகளில், "பப்ரைஸ்" என்ற எழுது பொருளில் குறைபாடுகள் இருந்த போதிலும் பப்ரைஸ் நூல்கள் மரத்தினால் அல்லது மூங்கிலால் ஆக்கப்பட்ட நூல்களை விட மிகவும் உயர்தரமாக இருந்தன. பொருத்தமான எழுது பொருள் இல்லாதிருந்தது சீனப் பண்பாட்டு முன்னேற்றத்திற்குப் பெருந் தடங்கலாக அமைந்தது.

பொருத்தமான எழுது பொருள் கிடைத்து விட்டமையால் சீன நாகரிகம் மிகத் துரிதமாக முன்னேறியது. அடுத்து வந்த நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் முன்னேற்றம் மிகவும் மந்தமடைந்திருந்த அதே சமயத்தில் சீனாவில் திசைகாட்டி, துப்பாக்கி மருந்து, அச்சுப்பாள அச்சு முறை ஆகியவை கண்டு பிடிக்கப் பட்டன. ஆட்டுத் தோலைவிடக் காகிதம் மலிவாக இருந்தமையாலும, அது பெருமளவில் கிடைத்தமையாலும், மேலை நாடுகளை விடச் சீனா விரைவாக வளர்ச்சியடைந்தது.

1000 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஐரோப்பியர்கள் காகிதம் தயாரிக்கலானார்கள். சீனர்கள் காகிதம் தயாரிப்பதைப் பார்த்த பின்புங்கூட மற்ற ஆசிய மக்கள் தாங்களே காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடிக்கவில்லை. காகிதம் தயாரிப்பதற்கு அவர் கையாண்ட அதே முறையின் அடிப்படையில் தான் (1800களில் எந்திரமுறை புகுத்தப்பட்ட பின்னரும்) மாற்றமின்றி இன்றும் கையாளப்படுகிறது.
மனித குலத்தின் போர் வரலாற்றில் புரட்சித் தன்மையுடைய இது கவராயம், தாள் தயாரிப்புத் தொழில்நுட்பம் மற்றும் அச்சுத் தொழில்நுட்பத்துடன் இணைந்து சீனாவின் மிகப் பெரிய நான்கு கண்டுபிடிப்புகள் என அழைக்கப்பட்டது. அதில் சிறப்பான சீன மக்களின் சாதனையாக விளங்குவது சீனரால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்து ஆகும். வெடிமருந்தினை கண்டுபிடித்தவர் ஃபி ஷிங் ஆவார். கண்டுபிடிக்கப்பட்ட காலம் 1041 முதல் 1048ஆம் ஆண்டு வரை ஆகும்.

கந்தகம், மனோசிலை, வெடியுப்பு, தேன் ஆகியவற்றைக் கலந்து வெடிப்பது பதிவு செய்யப்பட்ட வெடி மருந்தின் முதல் சூத்திரமாகும். இதனை அடியொற்றியே பிற்காலங்களில் பாரிய அளவில் வெடிமருந்து உற்பத்தி செய்யப்பட்டது. அத்துடன் சீனாவிலிருந்தே ஏனைய நாடுகளுக்கு வெடிமருந்தின் தாற்பரியம் உணரப்பட்டது. ஏறக்குறைய 13ஆம் நூற்றாண்டின் போது, வெடிமருந்து சீனாவிலிருந்து இந்தியா மூலம், அரபு நாட்டு மக்களுக்குப் பரவியது. இதற்குப் பின், அவர்களால் ஸ்பெயின் கடந்து ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பதில் ஐயமில்லை. உலகில் புகழ் பெற்ற சிந்தனையாளரும், புரட்சியாளருமான பேலித்லிச்•வோன்• அன்னன்குஸ் சீனாவின் வெடிமருந்து கண்டுபிடிப்பை மதிப்பிட்டுள்ளர். இதன் அடிப்படையில் பார்த்தால் சீனரின் முக்கியமான அருஞ்சாதனையாக வெடி மருந்து கண்டு பிடிப்பினைக் கூறலாம்.

அச்சுத் தொழில்நுட்பம் சீனாவின் மிகப் பெரிய 4 கண்டுபிடிப்புகளில் ஒன்று. அச்சுத் தொழில்நுட்பம் இரண்டு வளர்ச்சிப் போக்குகளைச் கொண்டிருந்தது. முதலில் மரப் பலகையில் செதுக்கும் அச்சுத் தொழில்நுட்பம். இரண்டு தனி எழுத்து அச்சுத் தொழில்நுட்பம் சுமார் 7ஆம் நூற்றாண்டு உலகில் முதன்முதலாக மரப் பலகையில் எழுத்துக்களைச் செதுக்கி பிரதி எடுக்கும் அச்சுத் தொழில்நுட்பம் சீனத் தாங் வம்சக் காலத்தில் தோன்றியது.

1041 முதல் 1048ஆம் ஆண்டு வரை பி ஷிங் ஒட்டும் பண்புடைய மண்ணால் எழுத்துகளை வடிவமைத்தார். அதற்குப் பின் அவர் அந்த வடிவுகளுக்கேற்ப தனி எழுத்துகளை உருவாக்கினார்.அவர் கண்டுபிடித்த தனித்தனி எழுத்துக்களாலான அச்சுத் தொழில்நுட்பம் மனித குலத்தின் அச்சுக்கலை வரலாற்றில் மிக முக்கிய மாற்றம் ஆகும். உண்மையில் இது புத்தர்களால் எட்டாம் நூற்றாண்டில் சமயம் தொடர்பான கருத்துகளையும் படங்களையும் பரப்ப அச்சடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் காணப்படுகிறது. ஆனால் சாங் ஆளுங்குடியினரின் அரசுத்துறை கன்ஃபூசியஸ் உரைகளை பதிப்பிக்க அச்சுத்துறைக்கு ஆதரவு நல்கியது. அரசுத்துறைக்கு தேர்வுகளுக்காக மாணாக்கர்கள் கற்க இவை தேவைப்பட்டன. இந்த தேர்வில் வென்றால் அரசு அதிகாரிகளாக தகுதி பெறலாம். எனவே, இக்கால கட்டத்தில் கன்ஃபூசியசின் உரைகள் பல படிகள் அச்சடிக்கப்பட்டன. அதுவுமன்றி, உழவு மற்றும் மருத்துவம் போன்ற தொழில்நுணுக்க கையேடுகளை பரவலாக்க அரசுஅச்சுத்துறையை அறிமுகம் செய்தது.
இந்த அச்சு தொழில் நுணுக்கத்தால் கல்வியறிவு மற்றும் இலக்கிய வளர்ச்சியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை சொல்லவும் வேண்டுமா சீன மொழியின் தன்மையால் அச்சுத்தொழிலின் தாக்கம் சீனத்துக்கும் மேற்குக்கும் வேறாக இருந்தது. சீன மொழி பட எழுத்துருக்களை பயன்படுத்துகிறது.

1249 என தேதி இடப்பட்ட மரப்பலகை கொண்டு அச்சிடப்பட்ட பென் டாவோ (Pen ts’ao), மூலிகை மருத்துவம் தொடர்பான நூலின் ஒரு பக்கம் சீனர்களின் பண்பாட்டு கோட்பாடுகளை மட்டுமன்றி சீன அரசின் முக்கிய ஆவணங்களையும் வழங்கிட அச்சுத்துறை இயன்றது.

11ஆம் நூற்றாண்டில் ச்சென் குவா (Shen Gua) எனும் புகழ்பெற்ற எழுத்தாளர் பை செங் (Bi Sheng) என்ற பெயர் கொண்ட ஒருவர் நகரும் அச்சுகளைக்கொண்டு அச்சிடும் கண்டுபிடிப்பு செய்தது பற்றி பதிவு செய்துள்ளார். இந்த படைப்பே இறுதியில் மேற்கு உலகம் தம் கையில் எடுத்துக்கொள்ள குட்டன்பர்க் என்பவரால் பைபிளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது.

About the author