Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

கடவுளும் கடவுள் தூதுவனும்!

சிவா | Published on the mon Jan 23, 2023 1:25 pm | 102 Views

கடவுளும் கடவுள் தூதுவனும்!


ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.


“எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.


“தேவலோகத்திலிருந்து வருகிறேன்” என்றான்.


கேட்டவர்கள் சிரித்தார்கள்.


“உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?”


“கடவுள்தான் அனுப்பி வைத்தார்.”


கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.


புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.


இப்போது அவன் சிரித்தான்.


“ஏன் சிரிக்கிறாய்?”


“என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!”


“எப்படி எல்லாம் நடக்கும் என்று?”


“உன்னைக் கட்டிப் போடுவார்கள்… கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?”


மக்கள் யோசித்தார்கள்.


“சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”


“நம்புங்கள்… நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.”


இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.


“நீ ஏன் சிரிக்கிறாய்?”


“நீ பொய் சொல்கிறாய்… அதனால் சிரிக்கிறேன்!”


“எது பொய் என்கிறாய்?”


“கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!”


“அது எப்படி உனக்குத் தெரியும்?”


“நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!”


இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.


அவன் சொன்னான் பரிதாபமாக… “நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.”


நண்பர்களே! ‘நானே கடவுளின் தூதன்’ என்கிறார்கள் சிலர். ‘நானே கடவுள்’ என்கிறார்கள் சிலர்.


உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?


ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான்.


”நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!” என்றான். அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார். இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ”அவனை ஏன் அறைந்தீர்கள்?”


”அவன் ஒரு பைத்தியக்காரன்!”


”அப்படியா?”


”ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!”


– தென்கச்சி சுவாமிநாதன்

About the author