புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
44 Posts - 43%
heezulia
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
4 Posts - 4%
prajai
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
4 Posts - 4%
Jenila
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
1 Post - 1%
kargan86
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
1 Post - 1%
jairam
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
8 Posts - 5%
prajai
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_m10தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு -2


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 31, 2021 6:22 pm

தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு-1
- முனைவர் சு . சௌந்தரபாண்டியன்
I.
ஓலைச் சுவடியில், ‘இராமனொடு வந்திருந்தான்’ என்பதைக் கீழ்வரும் இரு வகைகளில் படிக்கலாம்:-
[You must be registered and logged in to see this image.]


இரண்டாம் வகையில் படிக்கும்போது, ‘இராமனோ’ என வரும்போது, சிறிது விட்டிசைப்பு (Hiatus) ஏற்பட்டு, அடுத்ததாக ‘டுவந்திருந்தான்’ என்று அமைந்துவிடுகிறது.
முதல்வகையில் படிக்கும்போது, ‘இராமனொ’ என்று குறுகுவதால், அத்தகைய விட்டிசை வாய்ப்புக் குறைகிறது; குறையவே, ‘இராமனொடு வந்திருந்தான்’ என்ற சரியான பொருள் கிட்டுகிறது.

இந்த ஒலிப்பு ஆய்வாற் கிடைத்த கருத்தீடு (Concept) என்ன?
உயிர்மெய் முன் ‘ஒடு’ வருவது இயல்பான வழி (Natural path) என்பது அல்லவா?

II.
‘வேரொடுண்டான்’ என்பதை ஓலைச்சுவடியில், பிரித்து, வருமாறு படிக்கலாம்:-
[You must be registered and logged in to see this image.]


இரண்டாம் வகையில், ‘டு’ - வில் உள்ளது குற்றுகரமாயினும், இரு சொற்களிடையே வகர உடம்படுமெய் தோன்ற ஒரு முயற்சி நடக்கிறது. இதைத் தெளிவாகத் தடுக்கவே, ‘வேரோடுண்டான்’ என்று உச்சரிக்கும் ஒரு முடிவு ஏற்படுகிறது. இது முதலாம் வகையைச் சரியெனக் காட்டுகிறதல்லவா?
இந்த ஆய்விற் கிட்டும் கருத்தீடு யாது?
உயிர்முன் ‘ஓடு’ – என்பதல்லவா?

III.
பகுதி l, ll – இன் ஆய்வுகளில் நாம் பெற்ற கருத்தீடுகள், தொல்காப்பியத்திற்கு முன்னே நடந்திருக்கவேண்டும்; அதனாற்றான், தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் இதே கருத்தீடுகளையே கொண்டன.

IV.
தொல்காப்பியர் ‘ஒடு’ வேற்றுமையை நமக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தும் இடம்:-
“ஐஒடு குஇன் அதுகண் என்னும்
அவ்வா றென்ப வேற்றுமை உருபே” (புணரியல்.11)

ஈண்டு, ‘அவ்வாறென்ப’ என்பது நோக்கற் பாற்று; தொல்காப்பியருக்கு முன்பே கூறப்பட்ட வேற்றுமை உருபுகளே இந்த ஆறும் என்பது ஈண்டுக் கருத்து.

வேற்றுமை உருபுகள் சொற்களிற் பயிலும் கட்டமைப்பை (Structure) வருமாறு காட்டுகிறார் தொல்காப்பியர்:-
பெயர் + வேற்றுமை உருபு
Noun + CM (CM – Case Marker)
சான்று:-
“வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே” (புணரியல். 14)

தொல்காப்பியர் இரண்டாவதாக இவ்வேற்றுமை பற்றி உரைக்கும் நூற்பா:-
“அவைதாம்
பெயர்ஐ ஒடுகு
இன்அது கண்விளி என்னு மீற்ற” (வேற்றுமையியல். 3)
இவற்றை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்: 1. பெயர் 2. ஐ 3. ஒடு 4. கு 5. இன் 6. அது
7. கண் 8. விளி
இதுவரை நாம் பார்த்த இரு தொல்காப்பிய நூற்பாக்களிலும் ‘ஒடு’ – வைத்தான் பார்த்துள்ளோம் என்பதை ஈண்டுக் குறிக்கலாம்.

V.
‘ஒடு’ வேற்றுமை என்னென்ன பொருள் நிலைகளில் வரும்?
தொல்காப்பியர் விளக்குகிறார்:-
(அ) மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதற் கருவி அனைமுதற் றதுவே (வேற்றுமையியல். 12)

வினைமுதல் – கருத்தா; இஃது ஆளாகவும் இருக்கலாம், பொருளாகவும் இருக்கலாம்.
“அரசனொடு அரண் கட்டப்பட்டது” (கருத்து – அரசனால் அரண் கட்டப்பட்டது)
– இதில் கருத்தா →அரசன்
“கொடியொடு சுற்றப்பட்டான்” (பொருள் – கொடியால் சுற்றப்பட்டான்)
– இதில் கருத்தா → கொடி
“சுத்தியொடு என்ன ஆகும்? ” (பொருள் – சுத்தியால் என்ன ஆகும்?)
– இதில் கருவி → சுத்தி

இவ்வாறு ‘ஒடு’ வேற்றுமை வினைமுதற் பொருளிலும் (கருத்தாப் பொருளிலும்), கருவிப் பொருளிலும் வரும்போது பல வாய்பாடுகளில் அவை பயிலும் என்று தொல்காப்பியம் ஒரு பட்டியலை நமக்குத் தருகிறது; இங்கேதான் தொல்காப்பியத்தின் பீடு நமக்கு மெய்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது! அப் பட்டியல்:-
(ஆ) அதனின் இயறல் அதன்தகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனின் ஆதல்
அதனின் கோடல் அதனொடு மயங்கல்
அதனோடு இயைந்த ஒரு வினைக் கிளவி
அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி
அதனோடு இயைந்த ஒப்பல் ஒப்புரை
இன்ஆன் ஏது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார் (வேற்றுமையியல். 13)
தொல்காப்பியம் நவிலும் இவ்வாய்பாடுகளை வருமாறு விளக்கலாம்:-

(I) அதனின் இயறல் (அதுவாக ஆதல்):
‘மண்ணொடு செய்த பாண்டம்’ (மண்ணால் செய்த பாண்டம்)

(II) அதன் தகு கிளவி (அதற்கு அது தக்கது எனல்)
‘உழைப்பொடு உயர்ந்தவர்’ (உழைப்பால் உயர்ந்தவர்)

(III) அதன் வினைப் படுதல் (அதனால் ஆன வினைக்கு ஆட்படல்)
‘வாளொடு வெட்டுப்பட்டான்’ (வாளால் வெட்டப்பட்டான்)

(IV) அதனின் ஆதல் (இன்ன காரணத்தால் ஆனது)
‘வாணிகத்தொடு பணம் சேர்த்தான்’ (வாணிகத்தால் பணம் சேர்த்தான்)

(V) அதனின் கோடல் (இன்னதால் கொள்ளப்பட்டது)
‘பணத்தொடு கிடைத்த வீடு’ (பணத்தால் கிடைத்த வீடு)

(VI) அதனொடு மயங்கல் (ஒன்றொடு ஒன்று கலந்ததால் ஏற்பட்டது)
‘பாலொடு நீர் கலந்தது’

(VII) அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி (கருத்தாவோடு இயைந்து ஒரே நேரத்தில் நடப்பது)
‘தந்தையொடு மகன் நடந்தான்’

(VIII) அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி (ஒன்றுடன் மற்றொன்று அமைதல்)
‘குளத்தொடு கோயில் கட்டினான்’

(IX) அதனோடு இயைந்த ஒப்பல் ஒப்புரை (ஒப்புமை இல்லாதவற்றை இணைத்தல்)
‘பூவொடு சேர்ந்த நார்’

(X) இன் (இதனில் விளைவது)
‘முயற்சியொடு பிறப்பது ஒலி’ (முயற்சியால் பிறப்பது ஒலி)

(XI) ஆன் (இதனில் ஆனது)
‘காலொடு முடவன்’ (காலான் முடவன்)

(XII) ஏது (காரணம்)
‘படிப்பொடு வென்றான்’ (படிப்புக் காரணமாக வென்றான்)

மேலே கண்ட எடுத்துக்காட்டுத் தொடர்களிற் பல இப்போது வழக்கில் இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது; இது, ‘ஒடு’வின் தொன்மையைக் காட்டுவது ஆகும்.

மேல் நூற்பாவில் (வேற்.13), ‘அதன்’ என்பது கருத்தா அல்லது கருவியைக் குறிக்கும்.

VI.
இப்பகுதியில், தொல்காப்பியர் தம் நூற்பாக்களில் ‘ஒடு’வை எவ்வெவ் வழிகளிற் பயன்படுத்தியுள்ளார் என ஆய்வோம்:-
1. எண்ணிடைச் சொல்லாகத் தொல்காப்பியர் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் (ப.வெ.நா.2000:102) ‘ஒடு’வைப் பயன்படுத்தியுள்ளார்.
“ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன” (கிளவி. 58)
“எண்ணிய பண்ணையென் றிவற்றொடு” (கற்பு. 10)
“கையற வுரைத்தலொடு” (மெய்ப். 19)
“கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே” (செய். 129)
“உணர்த்தலொடு மெய்ப்பட நாடி” (மரபு.111)

2. ‘ஒடு’வை, 3-ஆம் வேற்றுமை உருபாக உடனிகழ்ச்சிப் பொருளில், தொல்காப்பியர் 150க்கும் மேற்பட்ட இடங்களிற் (ப.வெ.நா.2000:101) பயன்படுத்தியுள்ளார்.
“மெய்யொடு வியையினு முயரிய றிரியா” (நூன் மரபு. 10)
“உச்சக காரமொடு நகாரஞ் சிவணும்” (மொழிமரபு. 46)
“வற்றொடு சிவணி நிற்றது முரித்தே” (உருபியல். 5)
“அதுவே தானும் பிசியொடு மானும்” (செய்யுளியல். 178)
“துணிவொடு நிற்ற வென்மனார் புலவர்” (மரபியல். 105)
- என வரல் காணலாம்.

தொல்காப்பியம் முழுவதையும் ஆய்கையில், இதே உடனிகழ்ச்சிப் பொருளில்தான் ‘ஒடு’வைத் தொல்காப்பியர் அதிகமாக ஆள்கிறார் என்பது தெரியவருகிறது.

3. ஏதுப் பொருளில் (காரணப் பொருளில்) 3-ஆம் வேற்றுமை உருபாகச் சிலவிடங்களில் ‘ஒடு’வைத் தொல்காப்பியர் தந்துள்ளார்:-
“ஆற்று நெஞ்சமொடு” (அகம். 40:4)
(பொருள் – ஆற்று நெஞ்சம் காரணமாக)
“புணர்ந்த நெஞ்சமொடு” (களவு.22)
(புல்லிய நெஞ்சம் காரணமாக)
“ஆவொடு பட்ட நிமித்தம்” (கற்பு.36)
(ஆக் காரணமாகப் பெற்ற நிமித்தம்)

4. 3–ஆம் வேற்றுமை உருபான ‘ஒடு’வை 7–ஆம் வேற்றுமைப் பொருளில் சிலவிடங்களிற் பயன்படுத்துகிறார் தொல்காப்பியர்:-
“….. கிழவன் கிழத்தியொடு
கண்டோர் மொழிதல்” (செய்யுளியல். 191)
“….. கிழவன் கிழத்தியொடு
மொழிந்தாங்கு” (செய்யுளியல். 193)

5. ‘ஒடு’வைத் தொல்காப்பியர் இரண்டாம் வேற்றுமைப் பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்:-
“பாங்கொடு தழாலும்” (செய்யுளியல்.183)
(பாங்கனைத் தழுவுதல்; தழுவுதல் – அளவளாவுதல்)

6. ‘ஒடு’வைப் பயன்படுத்தி வேறு உருபைத் தந்தும், வேறு உருபைவைத் தந்து ‘ஒடு’வைக் காட்டியும் நிகழ்வதற்கு ஏதுவான தொல்காப்பிய நூற்பா:-

“யாதன் உருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்” (வேற்றுமை மயங்கியல். 23)

அஃதாவது,
‘ஆற்றொடு விளையாடினான்’ எனில்,
‘ஆற்றின்கண் விளையாடினான்’ என்றே கொள்ள வேண்டும்.

இதுபோன்றே,
‘தொலைபேசியில் தந்தைக்குப் பேசினான்’ எனில், ‘தந்தையொடு பேசினான்’ என்பதே பொருள்.

7. சில போழ்து, ஒடுக் கொடுத்துக் கூறும் தொடரை, ஒடுக் கொடாமல் வேறு உருபைக் கொடுத்தும் கூறலாம் என்பதற்குத் தொல்காப்பியர் எழுதிய விதி:-
ஏனை உருபும் அன்ன மரபினை
மான மிலவே சொல்முறை யான (வேற். மயங். 28)
அஃதாவது, ‘தூணொடு கட்டினான்” என்பதனைத், ‘தூணிற் கட்டினான்’ என்றும் கூறலாம்.

8. “கடலொடு காடு ஒட்டாது” என்று கூறினால், “கடலைக் காடு ஒட்டாது” என்றே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற பொருளில் வேறிடத்தும் காட்டுகிறார்:-

அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது
உருபினும் பொருளினும் மெய்தடு மாறி
இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம்
திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே (வேற். மயங். 18)

9. ‘என்னொடு நின்னொடுஞ் சூழாது’ – என்ற எடுத்துக்காட்டைத் தந்தவர் சேனாவரையர்.
எதற்கெனில், ‘ஒடு’ தொடர்ந்து வந்தாலும் ‘சூழாது’ என்ற சொல்லை முடிப்புச் சொல்லாகப் பெற்றுள்ளதை நோக்குவீர் என அறையவே. இதற்குத் தொல்காப்பியர்:-
“உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒருசொன் னடைய பொருள்சொன் மருங்கே” (வேற். மயங். 19)

10. வந்தான் சாத்தனொடு ✓
சாத்தனொடு வந்தான் ✓
- இவ்விரண்டுமே சரிதான் என்கிறது தொல்காப்பியம்:-
“இறுதியும் இடையும் எல்லா உருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் (வேற். மயங். 20)

11. தாய் மூவர்
இதனை எப்படிச் சரியாகப் பார்ப்பது?
தாயால் மூவர் ✕
தாய்க்கு மூவர் ✕
தாயின் மூவர் ✕
தாயது மூவர் ✕
தாயொடு மூவர் ✓
- இந்தத் தெளிவைத் தந்த நூற்பா:-
“அவற்றுள்
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல” (எச்சவியல். 17)

12. ‘ஒடு’விற்குச் சாரியையைக் கண்டறியும் ஒரு பயனையும் தருகிறார் தொல்காப்பியர்:-

“இடைநின்று இயலும் சாரியை இயற்கை
உடைமையும் இம்மையும் ஒடுவயின் ஒக்கும்” (புணரியல். 30)
அஃதாவது,
நீரினொடு : ‘இன்’, வேற்றுமை உருபா? சாரியையா?
“ஒடுவை வைத்துப் பார் ! ‘ஒடு’, ‘நீர்’ என்பதோடு சேர்ந்து ‘நீரொடு’ எனப் பொருள் மாறாமல் வருமாதலால், முன்னுள்ள ‘இன்’ சாரியை தான்” – என்பது தொல்காப்பியர் தரும் ஒரு திறவுகோல் (key).

இதனைக் கீழ்வரும் பட்டியல்மூலம் மேலும் விளக்கலாம்:-
[You must be registered and logged in to see this image.]



அஃதாவது ‘ஒடு’ சேர்ந்தபோதும் சேராதபோதும் பொருள் மாறாமல் இருப்பதால், இடைநின்ற அத்துச்சாரியை மிகத் தெளிவாகத் தெரிகிறதல்லவா? இஃது ‘ஒடு’ தந்த பயன் அல்லவா?
13. அது, இது – ஆகிய சொற்களுடன் ‘ஒடு’ சேரும்போது, ‘அன்’ சாரியை வரும் என்கிறது தொல்காப்பியம்:-
“சுட்டுமுத லுகர மன்னொடு சிவணி
ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே” (உருபியல். 4)
(எ-டு) அது + அன் + ஒடு = அதனொடு
இது + அன் + ஒடு = இதனொடு

14. வற்றுச் சாரியையோடு ‘ஒடு’ யாங்ஙனம் இயையும்?
தொல்காப்பியர் கூறுகிறார்-

“யாவென் வினாவி னையை னிறுதியும்
ஆயிய றிரியா தென்மனார் புலவர்
ஆவயின் வகரம் மையொடுங் கெடுமே” (உருபியல். 6)
(எ-டு) யாவை + வற்று + ஒடு = யாவற்றொடு
(யா + வ் + ஐ)
மேலும்,

இவை + வற்று + ஒடு = இவற்றொடு
(இவ்+ஐ) என்பதற்கு விதி:
“சுட்டுமுதல் வகர மையு மெய்யும்
கெட்ட விறுதி யியற்றிரி பின்றே” (உருபியல். 11)

15. ‘ஒடு’வுக்கும் ‘ஒன்’ சாரியைக்கும் உள்ள உறவை,
“ஓகார விறுதிக் கொன்னே சாரியை” (உருபியல். 8)
என விளக்குகிறார் தொல்காப்பியர்.
(எ-டு) கோ + ஒன் + ஒடு = கோஒனொடு

16. “ஏனை வகர மின்னொடு சிவணும்” (உருபியல்.12)
என்ற நூற்பாக் கொண்டு, கீழ்வரும் எடுத்துக்காட்டை நாம் கூறலாம்:-
தெவ் + இன் + ஒடு = தெவ்வினொடு
(சாரியை)

17. “மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை” (உருபியல். 13)
எனக் கூறி,
மரம் + அத்து + ஒடு = மரத்தொடு
என்ற புணர்ச்சியை விளக்குகிறார் தொல்காப்பியர்.
“இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே” (உருபியல். 14)
என்பதன் மூலம்,
உரும் + இன் + ஒடு = உருமினொடு என ‘இன்’ சாரியையும் மகரர ஈற்றுச் சொற்களுக்குத் தருகிறார்.
மகர ஈறு என்பதற்காக எல்லா மகர ஈற்றுச் சொற்களும் ஒரே வகையாகத்தான் புணரும் எனக் கருதக்கூடாது எனக் காட்டித் தொல்காப்பியர் தரும் புணர்ச்சிகள்:-

தாம் → தம் → + ஒடு = தம்மொடு
நாம் → நம் → + ஒடு = நம்மொடு
யாம் → எம் → + ஒடு = எம்மொடு
அவர் தரும் விதி:-
தாம்நா மென்னு மகர விறுதியும்
யாமெ னிறுதியு மதனோ ரன்ன
ஆஎ ஆகும் யாமெ னிறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும் (உருபியல். 16)

18. ‘எல்லாம்’ என்ற சொல்லோடு ‘ஒடு’ இயையுமாற்றை வகைவகையாக விளக்குகிறார் தொல்காப்பியர்:-
(அ) எல்லா மென்னு மிறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையு மிறுதி யான (உருபியல். 17)

(எ.டு) எல்லாம் + வற்று + ஒடு = எல்லாவற்றொடும்
- இதன் ஈற்றில் நிற்கும் ‘உம்’, முற்றும்மை அல்ல; சாரியை ஆகும்.
(ஆ) ‘எல்லாம்’ என்பது விரவுத்திணைச் சொல் ஆகும்; உயர்திணைச் சொல்லாயின் எப்படி ‘ஒடு’வொடு புணரும்?
எல்லாம் + நம் + ஒடு = எல்லாநம்மொடும்
இதற்கு விதி:-
“உயர்திணை யாயி னம்மிடை வருமே” (உருபியல். 18)
19. எல்லாரும் + ஒடு, யாங்ஙனம் புணரும்?
எல்லாரும் → ஒற்றும் → எல்லார் → + தம் → உக ரமும் கெடும்
எல்லார்தம் → + ஒடு → எல்லார்தம்மொடு → + உம் → எல்லார் தம்மொடும் .

இதே விதியை ‘எல்லீர்’ எனும் சொல்லுக்கும் காட்டி, ‘எல்லீர் நும்மொடும்’ என்ற அமைப்பைத் தருகிறார்.
இவற்றுக்கு நூற்பா:-
எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும்
எல்லீரு மென்னு முன்னிலை யிறுதியும்
ஒற்று முகரமுங் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையு மிறுதி யான
தம்மிடை வரூஉம் படர்க்கை மேன
நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே (உருபியல். 19)

20. ‘ஒடு’வின் வேறொரு புணர்ச்சியை,
“நும்மென் னிறுதி யியற்கை யாகும்” (உருபியல். 15
எனத் தருகிறார்.
(எ.டு) நும் + ஒடு = நும்மொடு
இதனை இயற்கைப் புணர்ச்சி என்ப.

21. “ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை (உருபியல். 10)
என்ற நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு எழுதலாம்:-
உரிஞ் → + இன் → உரிஞின் → + ஒடு = உரிஞினொடு
பொருந் → + இன் → பொருநின் → + ஒடு = பொருநினொடு.

22. “நீயென் னொருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயி னகர மொற்றா கும்மே” (உருபியல். 7)
- என்ற நூற்பா மூலம் தொல்காப்பியம் தரும் புணர்ச்சி: -
நீ → நி → + ன் → நின் → + ஒடு = நின்னொடு
(ன் - எழுத்துப்பேறு)

23. தான் + ஒடு = தானொடு ×
தான் → தன் → + ஒடு = தன்னொடு ✓
யான் → ஒடு = யானொடு ×
யான் → என் → + ஒடு = என்னொடு ✓
- இவற்றுக்கு நூற்பா:-
“தான்யா னென்னு மாயீ ரிறுதியும்
மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே” (உருபியல். 20)

24. அழன் + ஒடு = அழனொடு ×
அழன் → + அத்து → அழத்து → + ஒடு = அழத்தொடு ✓
அழன் + → + இன் → அழனின் → + ஒடு = அழனினொடு ✓
‘ஒடு’வின் இப்புணர்ச்சியைக் காட்டும் நூற்பா:-
அழனே புழனே யாயிரு மொழிக்கும்
அத்து மின்னு முறழுத் தோன்றல்
ஒத்த தென்ப வுணரு மோரே (உருபியல். 21)

25. ‘ஏழினொடு’ என்ற வடிவம் தவறானது என்கிறார் தொல்காப்பியர்: அவர் கூறும் விதி:-
“அன்னென் சாரியை யேழ னிறுதி
முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப” (உருபியல். 22)
இதன்படி,
ஏழ் → +அன் →ஏழன் → +ஒடு = ஏழனொடு என ஆகும்.

26 வரகு + இன் = வரகின் → + ஒடு = வரகினொடு
- இவ்விதம் குற்றியலுகர ஈற்றின் முன் ‘இன்’ சாரியை பெற்று ‘ஒடு’ வரும் என்பது தொல்காப்பியம்:-
“குற்றிய லுகரத் திறுதி முன்னர்
முற்றத் தோன்று மின்னென் சாரியை” (உருபியல். 23)

27. மேலே குற்றியலுகரப் புணர்ச்சி நவின்றாலும், எல்லாக் குற்றியலுகர ஈறுகளுமே அதே முறையிற் புணரும் எனக் கருதிவிடக் கூடாது!
யாடு + ஒடு = யாட்டொடு
முயிறு + ஒடு = முயிற்றொடு
எனவும் புணரும்.
இதற்கு விதி:-
நெட்டெழுத் திம்ப ரொற்றுமிகத் தோன்றும்
அப்பான் மொழிக ளல்வழி யான (உருபியல். 24)

இங்கே ‘அல்வழி’ என்பது ‘அல்வழிப் புணர்ச்சி’ அல்ல; ‘க,ச,த,ப ஆகிய எழுத்துகள் நீங்கலாக’ என்பது பொருள்.
அஃதாவது,
காது + ஒடு = காத்தொடு ×
இராகு + ஒடு = இராக்கொடு ×
காசு + ஒடு = காச்சொடு ×
என்பன பிழைப்புணர்ச்சிகள் என்று விளக்குகிறார்.

28. “எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்” (உருபியல். 26)
- என்ற விதிப்பு மூலம்,
ஒன்று + அன் + ஒடு = ஒன்றனொடு
எட்டு + அன் + ஒடு = எட்டனொடு
என்ற வழியைக் காட்டுகிறார்.

29. ஒருபஃது + அன் + ஒடு = ஒருபஃதனொடு ✓
ஒருபஃது + ஆன் + ஒடு = ஒருபானொடு ✓
இருபஃது + அன் + ஒடு = இருபஃதனொடு ✓
இருபஃது + ஆன் + ஒடு = இருபானொடு ✓
- எனக் காட்டுகிறார்; நூற்பா:-
ஒன்று முதலகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினு மான மில்லை
அஃதென் கிளவி யாவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே (உருபியல். 27)

30. அஃது + அன் + ஒடு = அஃதனொடு ×
அஃது + அன் + ஒடு = அதனொடு ✓

- இந்தப் பாடத்தினை நடத்துபவர் தொல்காப்பியர்:-
யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய
ஆய்த விருதியு மன்னொடு சிவணும்
ஆய்தங் கெடுத லாவயி னான (உருபியல். 28)

‘அஃது’ முன், உயிர்முதல் அன், ஒடு ஆகியவையே வந்துள்ளமை நோக்கற்பாற்று.
மேலை நூற்பாப்படியே,
யாது + அன் + ஒடு = யாதனொடு
எனும் புணர்ச்சியும் அமைகிறது.

31. ஆகுபெயரை விரிக்கும்போது, ‘ஒடு’ தோன்றுவதும் உண்டு.
‘வெற்றிலை உண்டாள்’ என்புழி, ‘வெற்றிலையொடு பாக்கு முதலியவற்றையும் உண்டான்’ என்கிறோம், இங்கு ‘ஒடு’ வருதலைக் காணலாம்.
இதற்கு நூற்பா:-
“வேற்றுமை மருங்கில் போற்றல் வேண்டும்” (வேற்றுமை மயங்கியல். 33)

32. சில உயிரீற்றுச் சொற்கள்முன் ‘ஒடு’வரின் எவ்வாறு புணரும் எனக் காட்டும் நூற்பா:-
அஆ உஊ ஏஒள என்னும்
அப்பா லாறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை உருபிற் கின்னே சாரியை (உருபியல்.1)
(எ-டு) விள + இன் + ஒடு = விளவினொடு
(அகர ஈறு)

பலா + இன் + ஒடு = பலாவினொடு (ஆகார ஈறு)
கழு + இன் + ஒடு = கழுவினொடு (உகர ஈறு)
கழூ + இன் + ஒடு = கழூவினொடு (ஊகார ஈறு)
சே + இன் + ஒடு = சேவினொடு (ஏகார ஈறு)
வெள + இன் + ஒடு = வெளவினொடு (ஒளகார ஈறு)

33. ஐகார ஈற்றுச் சொற்கள் ‘ஒடு’வை எங்ஙனம் ஏற்கும்?
அவை + வற்று + ஒடு = அவற்றொடு
(அவ் + ஐ)
இதற்குத் தொல்காப்பியம்:-
சுட்டுமுத லாகிய வையெ னிறுதி
வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே (உருபியல். 5)

34. ஆசிரியனொடு மாணவன் வந்தான் ✓
மாணவனொடு ஆசிரியர் வந்தார் ×
- இதனைக் கற்றுத் தந்தவர் தொல்காப்பியர்:-
“ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” (வேற்றுமை மயங்கியல். 8)
தெய்வச்சிலையார், இந்நூற்பாவுக்கு வேறுவகையிற் பொருள் உரைக்கிறார்; அவர் கருத்துப்படி,
மாணவனொடு ஆசிரியர் வந்தார் ✓
ஆசிரியரொடு மாணவர் வந்தார் ×

35. ‘ஒடு’ நிற்குமிடம் எது?
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப” (வேற்றுமை மயங்கியல். 8)
அஃதாவது, ‘சாத்தனொடு’ என்றாங்குப் பெயரின் பின் ‘ஒடு’ வரும் என விளக்கியவர் இளம்பூரணர் (வேற்றுமை. 8 உரை).
இதனை, வேறிடத்தும் உறுதிப்படுத்துகிறார் தொல்காப்பியர்.
வேற்றுமையை விரிக்கும்போது ‘ஒடு’வானது பெயரின் ஈற்றுக்கண்ணே தென்படும் என்கிறார் அவர்:-
“வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்தே (வேற்றுமை.16)
(எ-டு) ‘புலிச்சண்டை’ என்பது, ‘புலியொடு சண்டை’ என ஆகும்போது ‘ஒடு’ பெயரொடு தோன்றுவது தெளிவு.
இதுவரை, தொல்காப்பியர் ‘ஒடு’ பற்றிக் கூறிய நுணுக்கங்களைக் கண்டோம்.

VII.
தொல்காப்பியர் ‘ஓடு’ பற்றிக் கூறியுள்ளாரா?
‘ஓடு’ பற்றி வெளிப்படையாகக் கூறாவிடினும் உடம்படு புணர்த்தலாகப் பேசியுள்ளார்.
(i) எண்ணிடைச் சொல்லாக ‘ஓடு’ பயின்றுள்ள நூற்பாக்களிற் சில:-
“கசதப என்றா நமவ என்றா
அகர உகரமோ டவையென மொழிப” (தொகைமரபு.28)
“எண்ணின் பெயரோடு அவ்வறு கிளவியும்” (எச்சவியல்.21)
“இன்றிவர் என்னு மெண்ணியல் பெயரோடு
அன்றி யனைத்தும்” (பெயரியல்.11)
“ஆவயின் மூன்றோடு அப்பதி னைந்தும்” (பெயரியல்.13)
“வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றிவை எல்லாம் இயல்புற நாடின்” (அகம்.39)
- இங்கெல்லாம் ‘ஓடு’ உயிரின் முன்னே வந்துள்ளதைக் காணலாம்.
மேலே காட்டியுள்ள காட்டுகள் தவிர மேலும் பல இடங்களில் ‘ஓடு’ உயிர்முன்னே வந்துள்ளதை ஈண்டுத் தெரிவிக்கலாம்.

(ii) மூன்றாம் வேற்றுமை உருபாக, உடனிகழ்ச்சிப் பொருளில் ‘ஓடு’ பயின்றுள்ள நூற்பாக்கள்: -
“ஆவோடு அல்லது யகரம் முதலாது” (மொழிமரபு.32)
“விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே (வேற்றுமையியல்.2)
“வினையோடு அல்லது பால்தெரி பிலவே” (பெயரியல்.18)
“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை” (அகம்.34)
“அடக்கியல் வாரம் தரவோடு ஒக்கும்” (செய்யுளியல்.143)
மேல் (i), (ii) ஆகிய பகுதிகளிற் கண்ட ‘ஓடு’, யாப்புக்காக அல்லது சீர்க் கட்டமைப்புக்காக தொல்காப்பியரால் உருவாக்கிக் கொள்ளப்பட்டதா?
அல்ல என்பதே நமது ஆய்வு முடிவு.

‘ஓடு’, இரண்டாம், நான்காம் சீர்களில் வந்துள்ளதை மேலே (i, ii) பார்த்தோம்; இதே முறையில்தான் எல்லா இடங்களிலும் வருகின்றனவா?
அல்ல! முதலாம் மூன்றாம் சீர்களிலும் ‘ஓடு’ வந்துளதைப் பார்க்கமுடிகிறது.

(எ-டு) “இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை” (மெய்ப்பாட்டியல்.27)

- இங்கு மூன்றாம் சீரில் ‘ஓடு’ வந்துள்ளது.


VIII.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் ‘ஓடு’ பற்றி எப்படிக் கணித்தனர்?
நச்சினார்க்கினியர், ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்ற உத்தியால் ‘ஓடு’ மூன்றாவதன் உருபாக வருகிறது என்கிறார். (வேற்றுமையியல்.3)
தெய்வச்சிலையார், “அன்ன பிறவும் என்றதனான் ‘ஓடு’…… உருபுங் கொள்க” என்றார்(அதே இடம்).

இவ்விருவர் தவிர, இளம்பூரணர், சேனாவரையர், கல்லாடர் ஆகிய மூவரும் ‘ஓடு’ பற்றி இவ்விதம் உரைக்கவில்லை.
தமிழ்க் கல்வி உலகு, தொல்காப்பியத்தைப் பதிப்புகள் மூலமே அறிந்துள்ளது. எனவே, பதிப்பாசிரியர்கள் ஒடு, ஓடுக்களை எங்ஙனம் கையாண்டனர் என அறியவேண்டியது தேவையாகிறது.
IX.
[You must be registered and logged in to see this image.]


மேல் ஆய்வால் நாம் அறிவது, தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள் ‘ஒடு, ஓடு’ பதிப்பிப்பதில் சிறிது தடுமாற்றம் கொண்டளர் என்பதே ஆகும்.
இதற்குக் காரணம், தொல்காப்பியம் ‘ஓடு’ பற்றி விதந்து கூறாததே ஆகும்.

X.
தொல்காப்பிய உரைகளில் ஒடு,ஓடு யாங்ஙனம் காட்டப்பட்டுள?
கீழ்வரும் பட்டியல்கள் இதனை விளக்கும்:-
[You must be registered and logged in to see this image.]


(ஆ) ஓடு
[You must be registered and logged in to see this image.]


மேல் இரு பட்டியல்கள் (அ, ஆ) தொல்காப்பிய உரைப்பதிப்புகள் ஒடு, ஓடு பற்றி ஒரே முறையைக் கைக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.

எனவே, பதிப்பாளர்கள் தந்த பதிப்புகளைக் கொண்டு உரையாசிரியர்கள் மேற்கொண்ட ‘ஒடு, ஓடு’ப் பயன்பாட்டை அறுதியிட்டுக் கூற இயலாது; செம்பதிப்புத் துறையின் முன் இது பெரும் ஆய்வுப்பொருளாக உள்ளது.
XI.

‘ஒடு’வின் பயன்பாடு எப்போது அருகியது? ஏதாவது குறிப்பு உளதா?
உளது!
சேனாவரையர், “ஒடுவெனுருபு இக்காலத் தருகியல்லது வாராது” (வேற்றுமையியல்.73)
என்பதால், சேனாவரையருக்கு முன்பே, அஃதாவது கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே, தமிழில் ‘ஒடு’வின் பயன்பாடு குன்றிவிட்டது என அறிகிறோம்.
இதுகாறும், ஒடு, ஓடு தொடர்பாகத் தொல்காப்பிய மூலம், மூலப்பதிப்பு, உரையாசிரியர்தம் உரைகள் ஆகிய நிலைகளில் ஆய்ந்தோம்.

இப்போது ஒரு வினா எழுகிறது! “தொல்காப்பியர் ‘ஒடு’வை மட்டும்தான் மூன்றாம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தினாரா?” – இதுவே அவ்வினா!

இதற்கு விடை காண்போம்.
(அடுத்த பகுதியில் முடியும்)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 31, 2021 8:19 pm

நன்றி ,தொடருங்கள் அய்யா.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 01, 2022 10:00 am

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 01, 2022 10:10 am

தொல்காப்பியத்தில் ஒடு, ஓடு-2
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

XII.
(1) “மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கோ ரனைய என்மனார் புலவர்” (வேற்றுமை மயங்கியல்.9)
- என்ற நூற்பாவுக்கு இளம்பூரணர் ‘வணிகத்தான் ஆயினான்’,
‘வணிகத்தில் ஆயினான்’ என்ற இரண்டும் ஒரே பொருளன” என்று பொருள் வரைகிறார்.

இப்படி ஆய்கையில், மூன்றாம் வேற்றுமை உருபாக ‘ஆன்’ ஐத் தொல்காப்பியர் இந்த நூற்பா மூலம் புகன்றுள்ளார் என்றே கருதலாம்.

வேறு இடங்களில் ‘ஆன்’-ஐத் தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமைப் பொருளில் பயன்படுத்தியுள்ளாரா?

(2) தொல்காப்பியத்தில், மூன்றாம் வேற்றுமை ஏதுப்பொருளில், ‘ஆன்’:-
“சொல்லிய முறையான்” (தொகைமரபு.2)
“வேற்றுமை உடைமையானும்” (வினையியல்.16)
“அவற்றவற் றியல்பான்” (எச்சவியல்.26)

இவ்வாறு 25க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ஆன்’ உருபைத் தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமை ஏதுப்பொருளில் பயன்படுத்தியுள்ளார்.

(3) ‘ஆன்’, செய்யுளில் ‘ஆன’ ஆவது உண்டு:-
“குஐ ஆனென வரூஉம் இறுதி
அவ்வொடும் சிவணும் செய்யு ளுள்ளே” (வேற்றுமை மயங்கியல்.25)
‘வழக்கத்தான்’ என்று வரவெண்டியது, ‘வழக்கத்தான’ என வரும்.

(4) கருவிப் பொருளில் ‘ஆல்’-ஐ மூன்றாவதன் பொருளில் தொல்காப்பியர் ஆண்டுள்ளதற்குச்
சான்றுகள்:-
“ஒத்த மொழியால் புணர்ந்தனர்” (உரியியல்.91)
“என்றிரு திறத்தால்” (அகம்.50)
“செய்யுள் மொழியால்” (செய்யுள்.233)

(5) மூன்றாம் வேற்றுமை ஏதுப்பொருளில் ‘ஆல்’:-
“வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்” (தொகை.14)
“அதனால் செயற்படற்கு” (வேற்றுமை மயங்கியல்.27)
“செங்கடு மொழியால்” (களவு.23)

(6) ‘ஆல்’, தடுமாறு தொழிற்பெயரில்:-
“தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடிநிலை இலவே பொருள்வயி னான” (வேற்றுமை மயங்கியல்.12)
அஃதாவது, ‘பேருந்துமோது ஆள்’ – என்பதைப்,
பேருந்தால் மோதும் ஆள் : ஆல் (3-ஆம் வேற்றுமை உருபு)
பேருந்தை மோதும் ஆள் : ஐ (2-ஆம் வேற்றுமை உருபு)
- எனப் பொருளுக்கேற்ப விரிக்க வேண்டும் என்பது தொல்காப்பியம்.
(7) மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஆல்’, தொடர் இறுதியில் தொகாது:-
“ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாஅ இறுதி யான” (வேற்றுமை மயங்கியல்.2)
(எ-டு) உண்டான் சோற்றை ✓
உண்டான் சோறால் ×
XIII.

மூன்றாம் வேற்றுமை உருபுகள் பற்றி ஆய்கையில், ஒரு வினா எழுகிறது.
அஃதாவது, ‘இன், ஆன், ஏது’ என்று தொல்காப்பியர் வேற்றுமை இயலிற் (நூ.13) கூறியவை வேற்றுமை உருபுகளையா?
அல்ல!
அவை மூன்றாம் வேற்றுமை வாய்பாடுகளே!
அவை உருபுகளாக இருந்திருப்பின், ‘இன்’-ஐ மூன்றாவதற்குக் கூறி, மீண்டும் ஐந்தாம் வேற்றுமை உருபாகவும் கூறியிருப்பாரா?

XIV.
இதுவரை ஒடு, ஓடு ஆகியவறை ஆய்ந்து, பின் அவ்வரிசைக் கண் வரும் ஆல், ஆன் ஆகியவற்றையும் தொல்காப்பியத்தில் ஆய்ந்தோம்.
மூன்றாம் வேற்றுமை உருபாக ‘உடன்’-ஐத் தொல்காப்பியர் பேசியுள்ளாரா?
பேசியுள்ளார்!
“மூன்றுடன் விளக்கி” (அகம்.36)
“போக்குடன் அறிந்த” (களவு.24)
“புணர்ந்துடன் போகிய” (கற்பு.7)
“போக்குடன் கிளப்பின்” (பொருளி.4)

அஃதாவது, தொல்காப்பியரின் ‘ஒடு’, நச்சினார்க்கினியர் கூறியது போன்று ‘ஓடு’ ஆனது; ‘ஓடு’, பின் ‘உடன்’-ஐ தோற்றுவித்தது.

XV.
தொல்காப்பியம் ‘ஒடு’வை மூன்றாம் வேற்றுமை உருபு என வெளிப்படையாக வும், ‘ஓடு’வை மூன்றாம் வேற்றுமைப் பொருளிலும் ஆண்டதை ஆய்ந்தோம்.
அங்ஙனமாயின், தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த சங்க இலக்கியத்திலும் ஒடு, ஓடு பயின்றிருக்க வேண்டுமல்லவா?
சங்க இலக்கியத்தில் 1816 இடங்களில் ‘ஒடு’ வருகிறது (மாதையன் 2007: 185); ஆனால், ‘ஓடு’ 170 இடங்களில் மட்டுமே வருகிறது (அ.நூ.,ப.200)
தொல்காப்பியர் ‘ஒடு’வை மட்டும் கூறியதன் அடிப்படை இதில் விளங்குகிறதல்லவா?

ஈண்டுச் சங்க இலக்கியத்தில் ஒடு, ஓடு பயிலுமாற்றை வருமாறு பட்டியலிடலாம்:-
(1) குறுந்தொகை (உ.வே.சா,2009)
[You must be registered and logged in to see this image.]


மேலை ஆய்வால், உ.வே.சா. (1855-1942), பெரும்பாலும் ‘உயிர்முன் ஓடு – உயிர்மெய்
முன் ஒடு’ என்ற மரபையே பின்பற்றினார்; சிலவிடங்களில் வழுவியுள்ளார் எனக் காண முடிகிறது.

(2) நற்றிணை (ஒளவை., 2008)
[You must be registered and logged in to see this image.]

இந்த ஆய்வால், ஒளவை துரைசாமிப் பிள்ளை பெரும்பாலும் ‘உயிர்முன் ஓடு-உயிர்மெய் முன் ஒடு’ விதியைப் பின்பற்றிச், சிறுபான்மை வழுவியுள்ளார் என அறிகிறோம்.

(3) அகநானூறு (கந்தையா., 2008)
[You must be registered and logged in to see this image.]

மேல் ஆய்வால், ந.சி. கந்தையாபிள்ளை (1893-1967), பெரும்பாலும் முன்பு குறிப்பிட்ட ‘ஒடு-ஓடு விதி’யைப் பின்பற்றிச், சிறுபான்மை வழுவினார் என அறியமுடிகிறது.

(4) மர்ரே பதிப்பித்த ஐங்குறுநூற்றிலும் இதே போக்கைத்தான் காணமுடிகிறது’.
“பெண்டிரொடு ஆடும் என்ப” என்ற அடியே (33:3) சான்று.

ஐங்குறுநூற்றின் மூலத்தில் பெரும்பாலும் ‘ஒடு-ஓடு விதி’யைப் பின்பற்றிய மர்ரே, கூற்றுகளில் ‘ஒடு’-வை மட்டுமே எவ்வித விதியுமின்றிப் பயன்படுத்துகிறது.
“தன்னோடு புதுப்புணல்” (31 கூற்று)
“ஆயத்தாரோடு சூளுற்ற” (31 கூற்று)
“தலைவியோடு கூடி” (1 கூற்று)

சில கலைச்சொற்கள் தவிர ‘ஒடு’வைக் கூற்றில் யாண்டுமே பயன்படுத்தவில்லை மர்ரே.
அஃதாவது, ‘அறத்தொடு நின்றது’ ‘வரைவொடு வருதல்’ முதலிய கலைச்சொற்களில் (Technical terms) ‘ஒடு’வை மாற்றாமல் கூற்றுகளைப் பதிப்பித்துள்ளது (ஐங்.210, 213) மர்ரே.
இக் கலைச் சொற்களிற் பயிலும் ‘ஒடு’வைக் கொண்டே நாம், மூன்றாம் வேற்றுமை உருபுகளில் மிகத் தொன்மையானது ஒடு தான்,” என்று கூறிவிடலாம்; ஏனெனில் கலைச்சொல்லை யாரும் தன் இயல்புக்கேற்ப மாற்ற முடியாதல்லவா?

ஐங்குறுநூற்றின் 500 பாடல்களிலும் ஒடு, ஓடுவைத் தொடர்ந்து வரும் சொற்களை ஆய்ந்தால், உயிரெழுத்தைத் தலையாகக் கொண்ட சொற்கள் இரண்டே இரண்டுதான் வந்துள என்பது அறியத்தக்கது.
அவை:-
“பலரோடும் ஒழுகுதல்” (பா.96)
“தலைவியோடு உரைகின்றுழி (பா.426)
இங்கு ‘ஒடு’வின் தொன்மையை ஒப்பிட்டால், ஐங்குறுநூற்றுக் கூற்றுகளின் பழைமையும் புலனாகும்.
ஒளவை துரைசாமிப்பிள்ளை, “புதல்வனொடு பாடல்” (ஐங்.410), “மகளோடு புறவிற்” (ஐங்.419) என்றெல்லாம் கூற்றுகளில் வரைந்துள்ளதால், ‘ஒடு-ஓடு விதி’யை முழுவதுமாக அவர் பின்பற்றவில்லை என்பது புலனாகிறது.
எங்ஙனமாயினும், ஐங்குறுநூற்றைத் தொகுத்த புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் ஒரு சங்கப் புலவர் (அபிதான சிந்தாமணி 2004:1425); எனவே, சங்க இலக்கியப் புலவர் நடையை அவர் வரைந்த அல்லது அவருக்கும் முன்புள்ளோர் வரைந்த கூற்றுகளுக்கும் அமைக்கவேண்டும் எனக் கருதலாம்.
ஆகவே, ‘ஒடு-ஓடு விதி’யை ஐங்குறுநூற்றுக் கூற்றுகளிலும் பயன்படுத்தலாம்.


XVI.
சங்க இலக்கியத்தில் ‘ஓடு’வை விட, ‘ஒடு’வின் பயன்பாடே அதிகம் என மேலே (xv) கண்டோம்.
இதற்குக் காரணம் யாது?

தமிழ் மொழியில் உயிரெழுத்தைத் தலையாகக் கொண்ட சொற்களைவிட, உயிர்மெய் எழுத்துக்களை முதலாகக் கொண்ட சொற்களே மிகுதி!

எனவே, உயிர்மெய் முன் ‘ஒடு’வே அதிகமாக வந்துள்ளது!

இவ்விடத்தில்,
“அனையை யாகன் மாறே” (புறம்.4)
“இயல்புளிக் கோலோச்சும் (குறள்.545)
என மூன்றாம் வேற்றுமைப் பொருளில் மாறு, உளி ஆகியன வந்துள என்று சேனாவரையர் (இடை.2) காட்டுவதால், சங்கக் காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் இவ்வுருபுகள் பயன்பாட்டில் இருந்தமையைக் குறிப்பிடலாம்.

XVII.
முன் பகுதிகளில் (iv– xiv), தொல்காப்பியத்தில் ‘ஒடு, ஓடு’ பற்றிப் பரக்க ஆய்ந்தோம்.
தொல்காப்பியத்திற்குப் பின்னும் தமிழில் இலக்கணங்கள் தோன்றியுள அல்லவா? அவற்றில் ஒடு, ஓடு யாங்ஙனம் அமைந்துள்ளன எனக் காணவேண்டாமா?
[You must be registered and logged in to see this image.]

- இந்த ஆய்வு மூலம், ஒடு, ஓடு உருபுகளைக் கி.பி. 11-19-ஆம் நூற்றாண்டுகளில், எல்லா
இலக்கண நூற்களுமே ஒருபடித்தாக நவிலவில்லை என்பது புலனாகிறது.

முன் பகுதிகளிற் (ix, xv) கணட ஒடு, ஓடுத் தடுமாற்றம் இலக்கண நூற்களிலும் காணப்படுகிறது.


XVIII.
நன்னூலின் பயன்பாடே பிற்காலத்தில் தமிழில் அதிகமாதலால், நன்னூலுக்கு மூலமாகத் தொல்காப்பியர் யாங்ஙனம் திகழ்ந்தார் எனக் காண்பதும் தேவையே.

i. தொல்காப்பியத்தில் ‘ஓடு’, உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தமையை(vii-ii)முன்பே பார்த்தோம்; இதனைத்தான் நன்னூலார்,
“மூன்றா வதனுருபு ஆல்ஆன் ஓடுஒடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள்” (நன்.297)
என்றார் என மதிப்பிட வேண்டும்.
ii. “ஒடு வேற்றுமை ஏற்ற பெயர், வினையைக் கொண்டு முடியும், பெரும்பாலும்” என்கிறார் நன்னூலார். (பெயரியல்.61)
அங்ஙனமாயின், பெயரையும் கொண்டுமுடியலாம் என்பது கருத்து.
இதனைத் தொல்காப்பியர் வரைந்துள்ளாரா?

வரைந்துள்ளார்! உடம்பொடு புணர்தலாக வரைந்துள்ளார்!

“அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி” என்பதால் (வேற்.13) வினை முடிபையும், ‘ஒடு’வுக்குக் கூறிய வாய்பாடுகளில் ‘ஆன்’ குறிக்கப்பட்டுள்ளதால் பெயர் முடிபையும் தொல்காப்பியர், நன்னூலுக்கு முன்னோடியாகக் காட்டியுள்ளார் என மதிப்பிட வேண்டும்.

‘அவளொடு சிரித்தான்’
‘கண்ணொடு குருடன் (‘கண்ணான் குருடன்’)

- என முறையே வினையையும் பெயரையும் ‘ஒடு’ வேற்றுமை கொண்டு முடிதல்
காணலாம்.
XIX.

வேற்றுமை உருபுகளாம் ஒடு, ஓடு பற்றி விரிவாக ஆயும் இவ்வேளையில், வேற்றுமைச் சொல் பற்றியும் சிறிது குறிக்க வேண்டும்.

‘வேற்றுமைச் சொல்’ (எச்ச.59) வேறு, ‘வேற்றுமை உருபு’ வேறு.
(எ-டு) நள்ளிரவு : நள் – வேற்றுமைச் சொல்; வேற்றுமை உருபு அல்ல.
புத்தகத்தொடு : ஒடு – வேற்றுமை உருபு; வேற்றுமைச் சொல் அல்ல.

XX.

தொல்காப்பியர் ‘ஒடு’வை நேரடியாகவும், ஒடு, ஆல், ஆன், உடன் ஆகியவற்றை வேறு வழிகளிலும் எழுதிக்காட்டிய பாங்கை முன் பகுதிகளிற் (iv, vii, xii, xiv) கண்டோம்.

இவை உருவான வகையை வருமாறு ஆராயலாம்:-



ஆதி நீழல்
[You must be registered and logged in to see this image.]

இதனால், தமிழ்ப் பேச்சு வழக்குக் காரணமாகச் சில வேற்றுமை உருபுகள் தமிழில் தோன்றின என்ற கருத்தீடு ஏற்படக் காண்கிறோம்.

தொல்காப்பியர், “வழக்கும் செய்யுளும்” (சிறப்புப் பாயிரம்) நாடி நூல் யாத்தவர் என்பதை இங்கு நினைக்க வேண்டும்.

XXI.
மொழியியல் ஆய்வு
ஒடு, ஓடு தொடர்பாகச் சில மொழியியற் பார்வைகளை இங்கு வரையலாம்:-
I. ‘வண்டியோடே வந்தான்’ (பேச்சுத் தமிழ்)
- இதில், ‘ஒடு’ என்பது ‘ஓடே’ ஆகியுள்ளதைக் காணலாம்.
இதனால்,
‘ஒடு → ஓடு → ஓடே’
- என்ற வரிசை நமக்குக் கிட்டுகிறது; கிட்டவே, தொல்காப்பியர் கூறியது மிகத் தொன்மையான ‘ஒடு’வையே என்பது உறுதியாகிறது.
-
II. ‘அன்பு பாராட்டி அழைத்தான்’ (பேச்சு வழக்கு)
- இதில், ‘ஒடு’விற்கு மாற்றுச்சொல்லாக வருகிறது, ‘பாராட்டி’.

III. வேலனொடு வந்தான் →
[You must be registered and logged in to see this image.]

அமைப்பு 1 இல் – உருபன் நிலையில் (Morphological level),
‘ஒடு’, பெயருடன் நெருக்கம்
அமைப்பு 2 இல் – தொடர்ப் பொருண்மை நிலையில் (Syntactic meaning level),
‘ஒடு’, வினையுடன் மிக நெருக்கம்.

இந்த அமைப்பே, தமிழில் பல சொல்லுருபுகளைத் தோற்றுவிக்கக் காரணமாயிற்று எனக் குறிக்கலாம்.

XXII.

இறுதியாகக், கீழ்வரும் மூன்று முடிவுகளைக் கூறி ஆய்வை நிறைவு செய்யலாம்:-
1. தொல்காப்பியர் கூறிய ‘ஒடு’ மிகத் தொன்மையானது.
சூத்திரத்திற்கு அடிப்படையையே கூற வேண்டுமாதலாற் கூறப்பட்டது அது.
‘ஒடு’வின் வளர்ச்சிகள் யாவும் கொள்ளத்தக்கனவே.

2. ‘ஒடு’விலிருந்து வளர்ச்சி பெற்ற உருபுகளே ஓடு, ஆன், ஆல், உடன் ஆகியன; இவற்றைத் தொல்காப்பியரே பயன்படுத்தியுள்ளார்.

3. வேற்றுமையியலில் (நூ.13), “அன்ன பிறவும் அதன் பால” என்று கூறியதால், தொல்காப்பியர் கூறாத மூன்றாம் வேற்றுமை வாய்பாடுகள் சில தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்றும், அவற்றை அவர் எழுதவில்லை என்றும் கருதலாம்.

XXIII.

மேலாய்வுக் களங்கள்
1. ‘ஒடு, ஓடு’ முதலிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் திராவிட மொழிகளில் மற்றும் சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள பாங்கை ஆராயலாம்:-

தமிழ் மலையாளம்
உன்னோடு நின்னோட
அந்த ஆளோடு அ யாளோட

கன்னடம்
என்னுடன் நன்னொந்திகே
உன்னுடன் நின்னொந்திகே
எங்களுடன் நம்மொந்திகே
உங்களுடன் நிம்மொந்திகே
அவளுடன் அவளொந்திகே

தெலுங்கு
என்னுடன் நாதோ
எங்களோடு மாதோ
உன்னோடு நீதோ
உங்களோடு மீதோ
அவனோடு அதனிதோ
அவளோடு ஆமெதோ

சமஸ்கிருதம்
பேனாவால் லேகன்யா
கண்ணணால் கண்ணனேன

கன்னடத்து ‘ஒந்திகே’ என்பதிலுள்ள ஒகரம், தமிழ் ‘ஒடு’விலுள்ள ஒகரத்தோடு ஒப்பிட்டு ஆயத்தக்கது.
தெலுங்கு ‘தோ’விலுள்ள ஓகாரம், தமிழ் ‘ஓடு’விலுள்ள ஓகாரத்தோடு ஒப்பிட்டுஆயத்தக்கது.

XXIV.
கருவி நூற் பட்டியல்
[You must be registered and logged in to see this image.]

[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், நான் முதன்மை ஆய்வு வளமையராக (Chief Resource Person) இருந்தபோது, அதன் ஆய்வு வட்டத்தில், 16.2.2012 வியாழனன்று என்னால் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை]

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக