புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for தற்கொலை

Topics tagged under தற்கொலை on ஈகரை தமிழ் களஞ்சியம் JISUarl

முதலுதவி


விபத்து, காயம், உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் உடல்நிலையில் பின்னடைவோ, உயிரிழப்போ ஏற்படலாம். சில நேரங்களில் பாதிப்பின் தீவிரம் அதிகமாகலாம். அது போன்ற நேரங்களில் உடல்நலத்தில் ஏற்படும் பின்னடைவைத் தள்ளிப்போடவோ, தடுக்கவோ பின்பற்றப்படும் மருத்துவ உதவிதான் ‘முதலுதவி.’ தக்க தருணத்தில் செய்யப்படும் முதலுதவி, உயிரைக் காப்பாற்றும். பல நேரங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்படாமலும் ரத்த இழப்பு அதிகரிக்காமலும் தடுக்கும்.


ABC - A - Airway, B - Breathing, C - Circulation


உயிரைக் காப்பாற்றும் முதலுதவியில் `ஏபிசி’ என்ற கருத்தாக்கம் பின்பற்றப்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் கருத்தாக்கம் என்றாலும், பொதுமக்களும் இதைப் பின்பற்றலாம்.


Airway: மயக்கமோ, மூச்சுத்திணறலோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைச் சுற்றி கூட்டம் போடாமல் காற்றோட்டத்தை ஏற்படுத்துவது; வீடாக இருந்தால், ஜன்னலைத் திறந்து காற்று வருவதற்கு வழிசெய்வது ‘ஏர்வே.’

Breathing: விபத்தில் அடிபட்டு, முகம் தரையில்படும் நிலையில் மயக்கத்திலிருப்பவர்கள், வாந்தியெடுத்த நிலையில் குப்புற விழுந்து மயங்கியநிலையில் இருப்பவர்களுக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும். அவர்களை ஒருக்களித்துப் படுக்கவைத்தால், மூச்சுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு நீங்கி, இயல்பாக சுவாசிப்பார்கள். ஆஸ்துமா நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழும்போது அவர்கள் தலையைச் சற்று உயர்த்திப் பிடித்தால் இயல்பாக சுவாசிப்பார்கள்.

Circulation: காயம்பட்ட இடத்தில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவது. விபத்துக்குள்ளாகிக் காயம்படும்போதோ, விளையாடும்போது தலை மற்றும் தாடைப் பகுதியில் அடிபடும்போதோ அல்லது கத்தி, அரிவாள்மணை கீறும்போதோ காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும்.

முகம் மற்றும் கைகளில் இயல்பாகவே ரத்த ஓட்டம் அதிகமாகக் காணப்படுவதால், காயம்படும்போது அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படும். அப்போது ரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தில் சுத்தமான துணியை வைத்து மிதமாக அழுத்திப் பிடிக்க வேண்டும். அடிபட்ட இடத்தைச் சற்று உயர்த்திய நிலையில் வைக்க வேண்டும். இதனால் ரத்தப்போக்கு விரைவில் நிற்க வாய்ப்புள்ளது.

Cardiopulmonary Resuscitation - CPR


நின்றுபோன இதயத்துடிப்பை மீட்கச் செய்யும் முதலுதவிதான் `சி.பி.ஆர்’ எனப்படும் ‘கார்டியோபல்மோனரி ரிசசிட்டேஷன்’ (Cardiopulmonary Resuscitation - CPR). மாரடைப்பு ஏற்பட்டோ அல்லது மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்தோ ஒருவர் மயங்கி விழுந்தால், முதலில் அவருக்கு சுவாசம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.

வயிறு, நெஞ்சுப் பகுதியில் அசைவிருந்தால் மூச்சு இருக்கிறது என்று பொருள். நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதைக் கழுத்தின் பக்கவாட்டில் இருக்கும் பெரிய ரத்தக்குழாயில் கைவைத்துப் பரிசோதிக்க வேண்டும். இரண்டு இடங்களிலும் அசைவு, துடிப்பு இல்லையென்றால் இதயத்துடிப்பு நின்றுவிட்டது (Cardiac Arrest) என்று பொருள். அத்தகைய சூழலில் முதலுதவி செய்யாவிட்டால் அவர்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. மயங்கி விழுந்து இதயத்துடிப்பு நின்றுவிட்டால், குறுகிய நேரத்தில் இதயத்தை மீண்டும் இயங்கவைக்க முதலுதவி செய்ய வேண்டியது அவசியம்.

இந்தச் செயல்முறையைச் செய்வதற்கு முன்னர் ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகு மயங்கியநிலையில் இருப்பவரின் நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் (Chest Compression) கொடுப்பதுதான் `சி.பி.ஆர்’ செயல்முறை. நடுநெஞ்சுப் பகுதியில் உள்ளங்கைக்கு மேல் மற்றொரு கையின் உள்ளங்கையை வைத்து, உடல் 5 செ.மீ அளவு உள்ளே அழுந்துமாறு அழுத்த வேண்டும். சௌகர்யப்பட்டால், சம்பந்தப்பட்டவரின் வாயோடு வாய்வைத்தும் மூச்சைக் கொடுக்கலாம்.

30 முறை நெஞ்சுப்பகுதியை அழுத்துவது, பிறகு வாய்வழியாக மூச்சைக் கொடுப்பது என இரண்டையும் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இரண்டு முறை இவற்றைச் செய்து முடிக்க இரண்டு நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு, ‘நாடித்துடிப்பு இருக்கிறதா?’ என்று மீண்டும் கழுத்தில் கை வைத்துப் பரிசோதிக்க வேண்டும். நாடித்துடிப்பு இல்லையென்றால், மீண்டும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும். இதைச் செய்ய ஆரம்பிக்கும்போது அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். ஒரே நபரால் தொடர்ந்து செய்ய முடியாது என்பதால், ஆம்புலன்ஸ் வரும்வரை இன்னொருவர் உதவியுடன் செய்யலாம்.

மாரடைப்பு


மாரடைப்பு ஏற்பட்டதும் தீவிர நெஞ்சுவலி வரும். சிலருக்கு நெஞ்செரிச்சல், நெஞ்சில் நெருடுவது போன்ற உணர்வு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். ரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், ஏற்கெனவே புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் இருப்பவர்கள்.

அவர்களுக்கு நெஞ்சுவலி தொடர்பான அறிகுறிகள் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இது போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமாவது வாக்குவாதம் செய்யும்போதோ, உடற்பயிற்சியில் ஈடுபடும்போதோ நெஞ்சுவலி ஏற்பட்டால், முதலில் அந்தச் செயலை நிறுத்த வேண்டும்.

அதன் பிறகு ஆஸ்பிரின் மாத்திரை அல்லது தண்ணீரில் கரைத்துக் குடிக்கும் டிஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும் பணியைச் செய்யும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றுவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இதயத்தின் தசை செயலிழந்துகொண்டேயிருக்கும். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்வது நல்லது.

அப்போதுதான் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே மருத்துவமனைக்குச் செல்ல முடியும். ஆம்புலன்ஸில் இருக்கும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் வலிக்கான சிகிச்சைகளை அளிப்பார்கள். மேற்கூறிய ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு நெஞ்சுப்பகுதியில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் வலி நிவாரணக் களிம்பு பூசுவது, வாய்வுத் தொந்தரவு என நினைத்து கஷாயம்வைத்துக் குடிப்பது என நேரத்தைக் கடத்தாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

பக்கவாதம்


மாரடைப்பு, பக்கவாதம் இரண்டும் ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் இருப்பதால், இவை இரண்டுக்குமான மூல காரணங்கள் ஒன்றாகவே இருக்கும்.

85 சதவிகித பக்கவாதம், மூளையின் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வருகிறது. மீதமுள்ள 15 சதவிகிதம், மூளையின் ரத்தக்குழாய் வெடிப்பது, ரத்தக்குழாயில் ரத்தம் கசிவதால் ஏற்படுகிறது. 10, 15 வருடங்களுக்கு முன்னர் நவீன சிகிச்சைகள் இல்லாமலிருந்தன.

ரத்தம் உறையாமலிருக்க ஆஸ்பிரின் மாத்திரை, மேற்கொண்டு வேறு பிரச்னைகள் ஏற்படாமலிருக்க ஆதரவு சிகிச்சை, பிறகு பிசியோதெரபி பயிற்சி ஆகியவை மட்டுமே சிகிச்சையாக இருந்தன. ஆனால் இன்று, பக்கவாதத்துக்கான சிகிச்சை முறைகள் மேம்பட்டிருக்கின்றன. மூளையில் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

கைகால் இயங்காதது, மரத்துப் போவது போன்ற நிலை, முகம் கோணலாவதுபோல இருப்பது, பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ரத்த ஓட்டம் தடைப்பட்டு ஆக்சிஜன் செல்லாமல் இருந்தால், மூளை செல்களால் நீண்ட நேரம் இயங்க முடியாமல் போனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே, தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்பு அதிகரிக்கும். மாரடைப்பு என்றால் `ஈசிஜி’ மட்டுமே எடுத்துவிட்டு, பெரும்பாலும் 15 நிமிடங்களில் சிகிச்சையைத் தொடரலாம். ஆனால், பக்கவாதத்துக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்து பாதிப்பை ஆராய்ந்த பிறகே சிகிச்சையைத் தொடங்க முடியும். இந்த நடைமுறைகளை முடிக்க எப்படியும் 45 நிமிடங்கள் ஆகிவிடும். எனவே, பக்கவாதத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு சீக்கிரம் நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் என்பதுதான் முதலுதவி.

சாலை விபத்து


பொதுவாகவே சாலை விபத்தின்போது காயங்களின் தீவிரம் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. ‘காலில் சுளுக்கு, தலையில் லேசான வலி’ என்று அவற்றை அலட்சியப்படுத்துவதால், பின்னாளில் பலருக்குத் தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன. காயங்களை மட்டும் வைத்து விபத்தின் தீவிரத்தை கணிக்க முடியாது. உள்ளுறுப்புகளிலும் காயம் ஏற்பட்டிருக்கலாம்.

அதனால் விபத்தில் சிக்கி, சிறிய காயங்கள் ஏற்பட்டால்கூட மருத்துவமனையில் பரிசோதிப்பது நல்லது. விபத்துகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்குப் பல்வேறு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். அதனால் விபத்தில் சிக்கியவர்களை விபத்துகளைக் கையாளும் சரியான மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்போது அவர்களை மிகவும் மென்மையாகக் கையாள வேண்டும். பொதுவாக சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அடிபட்டவர்களின் கைகால்களை இஷ்டம்போலப் பிடித்து இழுத்து, அவர்களை மிகவும் வலிமையாகக் கையாள்வார்கள். இது மிகவும் தவறான செயல்.

சாலை விபத்தில் சிக்கியவர்களை நிதானமாகக் கையாளவில்லையென்றால், ரத்தப்போக்கு பல மடங்கு அதிகரிக்கும். குறுக்கெலும்பு உடைந்தவர்களுக்கு இரண்டு லிட்டர்வரை ரத்தம் வெளியேற வாய்ப்பிருக்கிறது.

விபத்தில் சிக்கியவர் மயங்கியநிலையில் இருந்தால், மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படாமலிருக்க, தாடைப் பகுதியை உயர்த்தி, வாயைத் திறந்தநிலையில் வைத்திருக்க வேண்டும். அடிபட்டவர்களின் தலை, கழுத்து, உடல் என மூன்றும் ஒரே நிலையில் இருக்குமாறு படுக்கவைக்க வேண்டும். கழுத்துப் பகுதியை அசைக்கக் கூடாது.

காயம்பட்ட இடத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறினால், கைக்குட்டை அல்லது சிறிய துணியால் அந்த இடத்தில் மிதமாக அழுத்திப் பிடிக்க வேண்டும். கைகால்களில் அடிபட்டு ரத்தம் வெளியேறினால் அதை நிறுத்த அவற்றைச் சற்று உயர்த்திப் பிடிக்கலாம். கழுத்து, கைகால் போன்ற இடங்களில் அடிபடாமல் நெஞ்சுப் பகுதியில் அடிபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்களை உட்காரவைக்க வேண்டும். கைகால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், அந்தப் பகுதி அசையாமலிருக்க அட்டை அல்லது மரக்கட்டையால் இரண்டு பக்கமும் தடுப்பு வைத்து, அவை நகராமல் கட்டுப் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சாலை விபத்து அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்படும்போது உதவுவதற்கு யாரும் இல்லையென்றால், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஆம்புலன்ஸ் சேவையை அழைக்காமல் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

கால் முறிவு போன்ற பிரச்னைகளின்போது அதிக வலி இருந்தால், தொடர்ந்து நடக்காமல் அதே இடத்தில் இருக்க வேண்டும். வேறு பகுதிகளில் அடிபட்டிருந்தால், அந்தப் பகுதிக்கு அதிக அசைவு கொடுக்காமல் இருக்க வேண்டும். மேலும் அடிபட வாய்ப்பிருக்கும் சூழல் நிலவினால், அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு நகர்ந்து சென்றுவிட வேண்டும். அருகில் உதவிக்கு யாரேனும் இல்லையென்றால், சத்தம் எழுப்பி உதவிக்கு ஆட்களை வரவைத்துக்கொள்வது நல்லது.

தீக்காயம்


ஒருவர் உடலில் தீப்பற்றி எரிகிறது என்றால், அடர்த்தியான கம்பளி அல்லது போர்வையைப் போர்த்தி அவர்களைத் தரையில் போட்டு உருட்டி தீயை அணைக்க வேண்டும். பருத்தித் துணி அல்லாத வேறு ரக உடையை அணிந்திருந்தால் அதை அகற்றிவிட வேண்டும். காரணம், பருத்தித் துணிகளைத் தவிர பிற ரக உடைகளுக்கு வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை இருக்கும். நெருப்பு அணைந்தால்கூட உடையிலிருக்கும் வெப்பம் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.

தீக்காயம் பெரிதாக இருந்தாலோ, முகத்தில் காயம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. காரணம், நச்சுப்புகை, தீ ஆகியவற்றால் உதடு, நாக்கு ஆகிய இடங்களில் வீக்கமோ, காயமோ ஏற்படலாம். சூடான காற்று வாய்வழியாக உள்ளே சென்று மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். இவை ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் வரும் பாதிப்பு என்பதால், காயம்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

கைகால்களில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தால், குளிர்ந்த குழாய் நீரில் காயம்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும். அந்தப் பகுதியைச் சுத்தமான, மென்மையான பருத்தித் துணி (Gauze) அல்லது பிளாஸ்டிக் ஷீட் (Cling Film) மூலம் மூட வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் நரம்புகள் வெளியே தெரிந்துகொண்டிருக்கும் என்பதால், அதில் காற்று படும்போது வலி அதிகரிக்கும். ஏனென்றால், தீக்காயம் அடைந்தவர்களுக்கு வலிதான் பெரிய பிரச்னையாக இருக்கும்.

அந்த நேரத்தில் வலிக்கு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பலருக்குத் தோன்றாது. வலி அதிகமாக இருந்தால் பாராசிட்டமால் போன்ற ஏதாவது ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். சிறு வயதில் தடுப்பூசி போடாதவர்கள், அண்மையில் டெட்டனஸ் டாக்ஸைடு (டி.டி) தடுப்பூசி போடாதவர்கள் மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகுதான் நோய்த்தொற்று உருவாகும் என்பதால், தீக்காயம் ஏற்பட்டதும் களிம்பு பூச வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பட்டாசு விபத்துகள்


பொதுவாக காயத்தின் அளவைத்தான் கவனிப்போமே தவிர, அதன் ஆழத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பட்டாசு விபத்துகள் ஆழமான காயத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் காயம் குணமாக, தாமதமாகும். தவிர, பட்டாசு வெடித்த சத்தத்தால் காது ஜவ்வு பாதிக்கப்படலாம். அதனால் பட்டாசு விபத்து ஏற்பட்டால், குழாய் நீரில் காயத்தைக் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

பட்டாசு விபத்து உட்பட தீக்காயம் பட்டவர்கள்மீது வாழை இலையைப் போர்த்துவது, காயத்தில் மஞ்சள் பூசுவது ஆகியவை மருத்துவரீதியாக நிரூபிக்கப்படாத தற்காலிக நிவாரணங்கள். எனவே, இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். மாவு, பேனா மை, மணல் போன்ற பொருள்களைத் தீக்காயத்தின் மீது போடக் கூடாது. இவற்றைச் செய்வதால், நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

தற்கொலை


விஷம் அருந்தியதால் மயக்கத்தில் இருப்பவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படாமலிருக்க, அவர்களை ஒருக்களித்துப் படுக்கவைக்க வேண்டும். அதேநிலையிலேயே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாயில் விரலைவிட்டு வாந்தியெடுக்கவைப்பது, உப்புத் தண்ணீர் அல்லது புளியை நீரில் கரைத்துக் குடிக்கக் கொடுப்பதெல்லாம் மிகவும் ஆபத்தானவை.

விஷம் அருந்தியதால் அரை மயக்கத்தில் இருப்பவர்களுக்கு இதையெல்லாம் குடிக்கக் கொடுத்தால் மூச்சடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. எந்த மருந்தைக் குடித்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அந்த மருந்து பாட்டிலை கூடவே எடுத்துச் செல்வது அல்லது அந்த பாட்டிலை செல்போனில் படம் பிடித்துச் செல்வது முக்கியம். எந்த மருந்தைக் குடித்தார் என்று தெரிந்தால்தான் அதற்கேற்ற சிகிச்சைகளை உடனடியாக மருத்துவர்களால் அளிக்க முடியும்.

தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுபவர்களின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் தூக்குப்போட்டநிலையில் உயிருடன் காப்பாற்றப்பட்டால், அவர்களது கழுத்து தொங்காதவாறு அவர்களைப் படுக்கவைக்க வேண்டும்.

கழுத்து பிசகியிருந்தாலோ, முறிந்திருந்தாலோ பாதிப்பு தீவிரமடையாமலிருக்க சமதளத்தில் படுக்கவைக்க வேண்டும். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போதும் கழுத்து, தலை, உடல் எல்லாம் ஒரே கோட்டில் இருக்குமாறு வைக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு அதிக இயக்கம் கொடுக்காமல் அவர்களைக் கையாள வேண்டும்.

மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மன அழுத்தம் காரணமாக இதுபோலத் தன்னைத் தானே வருத்திக்கொள்வது அதிக அளவில் நடக்கிறது. வீட்டிலிருக்கும்போது இது போன்ற செயலில் ஈடுபட்டால், மணிக்கட்டில் இருக்கும் பெருந்தமனியையே அறுத்தாலும்கூட சுத்தமான துணியைக்கொண்டு அந்த இடத்தில் அழுத்திப் பிடித்தால், ரத்தக்கசிவை நிறுத்திவிடலாம். கையைச் சற்று உயர்த்திவைக்க வேண்டும்.

பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலைக்கு முயல்பவர்களைத் தடுத்து, அரவணைக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தொழில்முறை ஆலோசகர்கள் மூலம் தேவையான ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.

சமையலறை விபத்துகள்


சமையலறையில் கத்தி அல்லது அரிவாள்மணையைப் பயன்படுத்தும்போது விரல் வெட்டுப்பட்டுவிட்டாலோ அல்லது மிக்ஸியில் விரல் சிக்கி, காயம் ஏற்பட்டாலோ ஓடும் நீரில் காயம்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு சுத்தமான ஒரு துணியை காயம்பட்ட இடத்தில்வைத்து, மிதமான அழுத்தம் கொடுத்துப் பிடிக்க வேண்டும். கையைச் சற்று உயர்த்தியநிலையில் வைத்திருக்க வேண்டும்.

அப்போது அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து, ரத்தக்கசிவு நின்றுவிடும். பிறகு தேவைப்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ரத்தத்தை நிறுத்துவதற்காக சுண்ணாம்பு, காபித்தூள், மஞ்சள்தூள் போன்றவற்றைப் பூசக் கூடாது.

சமையல் செய்யும்போது எண்ணெய் தெறித்து கொப்புளங்கள் ஏற்பட்டால், காயத்தை நீரில் கழுவிவிட்டு அதில் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் (Cling Film) வைத்து மூட வேண்டும். கொப்புளங்களைக் குத்தி உடைக்கக் கூடாது. சில மணி நேரத்தில் அல்லது ஒரு நாளில் அந்தக் கொப்புளங்கள் தாமாகவே அமிழ்ந்துவிடும். கொப்புளத்தின் மேல் காணப்படும் சருமம்தான் அந்தக் காயத்துக்குச் சிறந்த ‘டிரெஸ்ஸிங்’ ஆகச் செயல்படும்.

அதைக் குத்தி உடைத்துவிட்டால், நோய்த்தொற்றின் அளவு அதிகரிக்கும். பெரிய கொப்புளமாக இருந்தால் மருத்துவமனையில் மருத்துவர்கள் அதை அகற்றும் செய்முறையைச் செய்வார்கள். கொப்புளங்களில் உடனே களிம்பு எதுவும் போட வேண்டும் என்ற அவசியமில்லை. காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம். சிறிய காயங்கள் என்றால் தாமாகவே ஆறிவிடும்.

நகம் பெயர்தல்


காயம் எதுவும் இல்லை, ரத்தக்கசிவு இல்லாமல் வெறும் நகம் மட்டும் பெயர்ந்திருந்தால், அந்த இடத்தில் அரைகுறையாக இருக்கும் நகத்தை நகவெட்டி மூலம் வெட்டி அகற்றிவிட்டால், நகம் மீண்டும் வளரத் தொடங்கிவிடும்.

ஆனால் நகத்துக்கு அடியில் ரத்த உறைவு இருந்தால், மருத்துவமனைக்குச் செல்வதே நல்லது. அங்கே நகத்துக்குக் கீழே உறைந்திருக்கும் ரத்தத்தை மட்டும் அகற்ற வேண்டுமா, நகத்தையும் சேர்த்து அகற்ற வேண்டுமா என்று மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். நகத்துக்கு அடியில் காயம் ஏற்பட்டிருந்தால், நகத்தை அகற்றிவிட்டுத் தையல் போடுவார்கள். அதன் பிறகு பெரும்பாலும் நகம் வளரத் தொடங்கிவிடும்.

பாம்புக்கடி


பாம்பு கடித்தால் சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. கடிபட்ட இடத்தை நன்றாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, அந்த இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பாம்பு காலில் கடித்திருந்தால், அந்தப் பகுதியில் ஓர் அட்டையையோ அல்லது மரக்கிளையையோ தடுப்பாகக் கொடுத்து, நகராமல் இருக்குமாறு வைத்துக் கட்ட வேண்டும். கடிபட்டதும் நடப்பது, ஓடுவது, காலை மடக்கி மடக்கி நீட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், உடல் முழுவதும் விஷம் பரவிவிடும். கடிபட்ட இடத்துக்கு மேல் இறுக்கமாகக் கட்டுவது, அந்த இடத்தைக் கத்தியால் கீறி ரத்தத்தை உறிஞ்சித் துப்புவது போன்றவை தவறான செயல்கள்.

பூச்சிக்கடி


பூச்சிக்கடியால் மூச்சுத்திணறல், மயக்கம், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுவது, அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பூச்சிக்கடியால் ஓரிடத்தில் மட்டும் வீங்கியிருந்தால், அந்தப் பகுதியைத் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு அந்தப் பகுதியைச் சற்று உயர்த்திவைக்க வேண்டும். குளவி, வண்டு போன்றவை கடித்து, கடிவாயில் கொடுக்கு இருந்தால் அதனை எடுத்துவிட வேண்டும். வீக்கம் அதிகமாவது, கடிபட்ட பகுதி சிவந்துபோவது, வீக்கம் பரவுவது, அக்குளில் நெறிகட்டுவது மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரை அணுகி ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேள் கடி


பிற பூச்சிக்கடிகளைவிட தேள்கடி சற்று ஆபத்தானது. தேள் கடித்ததும் அதிகம் வியர்த்துப் போவது, மயிர்க்கூச்செறிவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதனால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. ‘வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்’ என்று நேரத்தைக் கடத்தக் கூடாது. தேள் கடிக்கு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்துச் சிகிச்சையளிக்க வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து இழப்பு


வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அது போன்ற சூழலில் நீர்ச்சத்தை உடலில் அதிகரிக்க வேண்டியது அவசியம். அதனால் உப்பு சர்க்கரைக் கரைசலை (ஓ.ஆர்.எஸ்) நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு தொடர்ந்தாலும், இந்தக் கரைசலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் குடித்தால் மேலும் வாந்தி வர வாய்ப்பிருக்கிறது. அதனால் 50 மி.லி அளவில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை குடித்தால், அது உடலுக்குள் எளிதாகக் கிரகிக்கப்பட்டுவிடும். அதிக முறை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கை நிறுத்த, மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடக் கூடாது. நீர்ச்சத்து இழப்புக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல் சிறந்த தீர்வாக இருக்கும்.

ரத்தச் சர்க்கரை அளவு குறைதல்


சர்க்கரைநோய் இல்லாதவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்நிலை ஏற்படாது. சர்க்கரைநோயால் பாதிக்கப்படாதவர்கள், ‘காலையில் சாப்பிடவில்லை, சர்க்கரை அளவு குறைந்திருக்கும். அதனால்தான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்’ என்று சொல்வது இயல்பானது அல்ல. வேறு ஏதோ காரணத்துக்காகத்தான் மயக்கம் போட்டிருப்பார்கள்.

ஆனாலும், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். மாத்திரையின் அளவை அதிகமாக எடுத்துக்கொண்டாலோ, மாத்திரை போட்டுவிட்டு சாப்பிடாமல் இருந்தாலோ, வேறு பிரச்னைகளுக்காக மாத்திரையைக் கூடுதலாக எடுத்துக்கொண்டாலோ வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையை மருத்துவர் ஆலோசனையின்றி தானாகவே நிறுத்தினாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம்.

அதிகமாக வியர்ப்பது, படபடப்பு, குழறிப் பேசுவது, வித்தியாசமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகள் இருக்கும். நிலைமை மோசமாகும்போது மயக்கம் அல்லது கோமாநிலைக்குச் சென்றுவிடுவார்கள். சர்க்கரை நோயாளிகள் வீட்டில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கும் குளூக்கோமீட்டர் கருவியை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இது போன்று அடிக்கடி சர்க்கரையின் அளவு குறையும்நிலை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி, அவர்கள் எடுக்கும் சிகிச்சையை சரிப்படுத்த வேண்டும்.

ரத்தச் சர்க்கரையின் அளவு குறைந்து, மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் சர்க்கரைத் தண்ணீர், சாக்லேட், இனிப்பு போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்க உதவும். நோயாளி சாப்பிடும் அளவுக்குத் தெளிவாக இருந்தால் மட்டுமே கொடுக்க வேண்டும். மயக்கமானால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

குழந்தைகள், முதியோர்


குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அது தீவிரமாகும்வரை வெளியே தெரியாது. தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டால், குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியும். சில குழந்தைகள் யாரிடமும் பேசாமலிருந்தாலோ, தூங்கிக்கொண்டே இருந்தாலோ, சிலருக்கு உணவு உட்கொள்வதில் பிரச்னை, வாந்தி எடுப்பது மற்றும் சிறுநீர் போகவில்லை என்றாலோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று பொருள். அதனால் குழந்தைகள்நல மருத்துவர் அல்லது அவசரகால மருத்துவரிடம் உடனடியாகக் கூட்டிச் செல்வது நல்லது. வயதானவர்களும் கிட்டத்தட்ட குழந்தைகள் போன்றவர்கள்தான்.

தீவிர நோய்த்தொற்று, மாரடைப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகள் மற்றும் முதியோரை உடனடியாக கவனித்து, அவர்களுக்குத் தேவையான முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் எப்போதும் குழந்தைகள், முதியவர்கள்மீது பிரத்யேக கவனம் செலுத்த வேண்டும்.

ஆஸ்துமா


ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தங்களது பிரச்னையை அதிகரிக்கும் காரணங்கள் எவையெவை என்பது தெரிந்திருக்கும். காற்று மாசு, தீவிர உடற்பயிற்சி, விளையாட்டு, உணர்ச்சிவசப்படுதல் போன்றவை காரணங்களாக இருக்கலாம். பிரச்னைக்குக் காரணமான விஷயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கமாக இரண்டு முறை இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள், மூச்சுத்திணறல் அதிகரிக்கும்போது 4 முதல் 10வரைகூடப் பயன்படுத்தி மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தலாம்.

விளையாட்டு விபத்துகள்


விளையாட்டு வீரர்களுக்கு கைகாலில் அடிபட்டு எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் மரப்பலகை, அட்டை என ஏதாவது ஒன்றைக்கொண்டு தடை ஏற்படுத்தி, அந்தப் பகுதி அசையாத வகையில் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். உடைந்த எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசுவது, நகர்வது போன்றவற்றால்தான் பாதிப்பு அதிகமாகி வலி அதிகரிக்கும். வலிக்கு ஏதேனும் மருந்து கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

வலிப்பு


நரம்பியல் பாதிப்பு மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வாய்க்குள் அல்லது மலத்துவாரத்தில் வைப்பதற்கான மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்திருப்பார்கள். அது போன்ற நேரங்களில் அருகிலிருப்போர் அந்த மாத்திரையை உடனடியாகக் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும். முதன்முறையாக ஒருவருக்கு வலிப்பு வருகிறது என்றால், அவரை எந்தப் பொருள்களும் இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும். அருகில் ஏதேனும் பொருள்கள் இருந்தால், அவற்றில் இடித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வலிப்பு வந்து அவதிப்படுபவர்களுக்கு கையில் சாவிக்கொத்தைக் கொடுப்பது, உலோகங்களைக் கொடுப்பது எந்தவிதப் பயனையும் தராது.

பொன்னான நேரம்


விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு உயிரிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படலாம். அதற்குக் காரணம் ரத்த விரயம். விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்தப்போக்கை நிறுத்துவதுடன் தேவையான அளவு ரத்தத்தை உடலில் செலுத்தி, மூச்சுத்திணறல் இருந்தால் விரைவாக அந்தக் குறைபாடு போக்கப்பட வேண்டும்.

இப்படி எந்த அளவுக்கு விரைவாக சிகிச்சையளிக்கப்படுகிறதோ அந்த அடிப்படையில்தான் ‘பொன்னான நேரம்’ (Golden Hour) என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. எனவே பொன்னான நேரத்தை கருத்தில்கொள்வோம்... உயிர் காப்போம்!


குறிச்சொற்கள் #முதலுதவி #மாரடைப்பு #CPR #ABC #Cardiopulmonary_Resuscitation #பக்கவாதம் #சாலை_விபத்து #தீக்காயம் #பட்டாசு_விபத்துகள் #தற்கொலை #சமையலறை_விபத்துகள் #நகம்_பெயர்தல் #பாம்புக்கடி #வலிப்பு #விபத்துகள்

விகடன்

Back to top